ரவுடி என்ற வார்த்தையில் ரசிகர்களின் அன்பு உள்ளது: விஜய் தேவரகொண்டா

3 mins read
7e0d3a7a-31c1-4662-b691-0acb2e63505b
விஜய் தேவரகொண்டா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

விஜய் தேவரகொண்டாவை அவரது ரசிகர்கள் செல்லமாக ரவுடி என்றுதான் அழைக்கிறார்கள். அவரும், ‘பெயரில் என்ன இருக்கிறது. அந்த வார்த்தையில் உள்ள ரசிகர்களின் அன்புதான் முக்கியம்’ என்கிறார்.

தற்போது ‘கிங்டம்’ என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

தமிழ்மொழி மீது தமக்கு தனிப் பிரியம் உண்டு என்றும் விரைவில் தமிழில் பேசுவேன் என்றும் தனது பேட்டிகளில் தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

‘‘ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் தனி உற்சாகம் கிடைக்கிறது. என் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக அவ்வப்போது சென்னை வரும்போதெல்லாம் தமிழகத்தில் உள்ள என் ரசிகர்களைச் சந்திப்பேன். அப்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்கிறார் விஜய் தேவரகொண்டா.

‘கிங்டம்’ படத்தில் இவரது தோற்றமும் உடல்வாகும் மிக வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்களாம்.

இயக்குநர் கௌதம் கூறிய கதை தமக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் இப்படத்துக்காக மொட்டை அடித்து ஆளே மாறிவிட்டதாகவும் சொல்கிறார்.

“இந்த தோற்றம் எனக்கு நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் நானாகத் தெரியக்கூடாது என்று மட்டுமே நினைத்தேன்.

“திரையில் என்னைப் பார்த்தால், நான் ஏற்றுள்ள சூரி எனும் கதாபாத்திரமாக மட்டுமே தெரிய வேண்டுமென ஆசைப்பட்டேன். கதை நன்றாக அமைந்தால் நம் தோற்றம், அழகு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

“அதனால்தான் என் தலைமுடியை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பார்த்தோம். நான் எதிர்பார்த்த தோற்றம் வந்த பிறகே மனநிறைவு ஏற்பட்டது,” என்கிறார் விஜய்.

‘கிங்டம்’ படம் இரண்டு பாகங்களாக உருவாகுமா என்பது குறித்து இப்போதே முடிவெடுக்க இயலாது என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ள இவர், இந்தப் படத்துக்காக முதன்முறையாக இசையமைப்பாளர் அனிருத்துடன் கைகோத்துள்ளார்.

அனிருத் மிகுந்த திறமைசாலி என்றும் ‘3’, ‘வேலையில்லா பட்டதாரி’ படப் பாடல்களைக் கேட்டதிலிருந்து அவருடைய தீவிர ரசிகர் எனத் தம்மைக் குறிப்பிடலாம் என்றும் கூறியுள்ளார்.

“அனிருத் ஒரு இசை மேதை எனலாம். நான் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போதுதான் அனிருத் திரையுலகில் அறிமுகமானார்.

“ஒருவேளை நான் கதாநாயகனாகிவிட்டால் அனிருத்தான் இசையமைக்க வேண்டும், அவரது பாடல்களுக்கு நான் திரையில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன்.

“இப்போது முதன்முறையாக அனிருத் கிடைத்திருக்கிறார். வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் அருமையான பாடல்களைத் தந்துள்ளார்.

“அனிருத் பாடல்களில் வேறு கதாநாயகர்கள் இருந்தால் எனக்குப் பொறாமையாக இருக்கும். இப்போது அனிருத் பாட்டு எனக்குத்தான். இப்போது நானும் அனியும் நல்ல நண்பர்கள். எப்போது நேரில் சந்தித்தாலும் மணிக்கணக்கில் ஜாலியாகப் பேசுவோம்,” என்கிறார் விஜய் தேவரகொண்டா.

தமிழில் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர்கள் பலரும் கேட்கிறார்களாம்.

‘‘தமிழ் சினிமாவில் உள்ள பல திறமையான இளம் இயக்குநர்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அஷ்வத் மாரிமுத்து, மடோன் அஸ்வின் ஆகியோரைக் குறிப்பிடலாம். ‘டிராகன்’, ‘மாவீரன்’ எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.

“எனக்கு லோகேஷ் இயக்கத்கில் முழுக்க அவரது பாணியில் ஒரு படத்தில் நடிக்க ஆசை. நெல்சனின் நகைச்சுவைக்கு நான் ரசிகன்.

“எல்லாவற்றையும்விட தனுஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம்,” என்று அறிமுக நாயகனைப்போல் கண்களில் எதிர்பார்ப்புகள் மின்னப் பேசுகிறார் விஜய் தேவரகொண்டா.

குறிப்புச் சொற்கள்