‘பாகுபலி’ நாயகனை வாழ்த்திய தொழிலாளர்கள்

‘பாகுபலி’ நாயகனை வாழ்த்திய தொழிலாளர்கள்

1 mins read
0935abd6-47fb-4bb9-b9c8-ae1f9e006ecf
பிரபாஸ். - படம்: ஹேன்ஸ் இந்தியா

நடிகர் பிரபாசின் நல்ல மனத்தைத் தெலுங்குத் திரையுலகத்தினர் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு அவர் நடித்த பல படங்கள் வசூல் ரீதியில் பெரும் தோல்வி கண்டுள்ளன. ஆனாலும் பிரபாஸ் துவண்டுபோகவில்லை.

அது மட்டுமல்லாமல், தயாரிப்பாளர்களுக்குத் தன்னால் எந்தவித இழப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கொள்கையிலும் உறுதியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘த ராஜாசாப்’ படமும் வசூலில் படுதோல்வி கண்டுள்ளது. இதனால் படத்தின் விநியோகிப்பாளர்கள் பலரும் இழப்பீடு கோரி படத்தின் தயாரிப்பாளரை அணுகியுள்ளனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த பிரபாஸ், தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

“நான் இந்தப் படத்தில் நடிக்க சிறு தொகையைத்தான் முன்பணமாகப் பெற்றுள்ளேன். மீதமுள்ள சம்பளத்தொகையை முழுமையாக விநியோகிப்பாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். என்னால் யாரும் நஷ்டப்படக் கூடாது,” என்று கூறியுள்ளார் பிரபாஸ்.

பொதுவாகப் பொங்கல், தீபாவளி என்று பண்டிகைக் காலங்கள் வரும்போது சினிமாத் தொழிலாளர்களுக்கு முன்னணிக் கலைஞர்கள் தங்களால் இயன்ற அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், ‘ராஜாசாப்’ படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு அன்பளிப்புகளை வழங்கியுள்ளார் பிரபாஸ்.

மூத்த தொழிலாளர்களுக்கு ரூ.20,000, மற்றவர்களுக்கு ரூ.10,000 என வாரி வழங்கிய ‘பாகுபலி’ நாயகனைப் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்