‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார் யோகலட்சுமி.
இப்படத்தில் நாயகன் சசிகுமார் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகளாக இவர் நடித்துள்ளார். ஏற்கெனவே இணையத்தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றிலும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அனுபவம் உள்ளவர். இப்போது வெள்ளித் திரையிலும் அறிமுகம் கண்டுள்ளார்.
இந்தப் படத்தில் யோகலட்சுமி ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் குரல். கூடுமானவரை ஒப்பனை இல்லாமல், இயற்கை அழகுடன் வலம்வருவதையும் திரையில் தோன்றுவதையும் விரும்புகிறார்.
இதன் காரணமாக, இன்ஸ்டகிராமில் யோகலட்சுமி வெளியிடும் புகைப்படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஓர் குடும்பம், அதைச் சார்ந்த நிகழ்வுகள்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் கதை. கேட்கும்போது சோகமாக இருந்தாலும், படம் முழுவதும் நகைச்சுவை, கலகலப்புடன் கூடிய காட்சிகள் ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறது.
“இப்படிப்பட்ட கதையில் அறிமுகமானது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சென்னைப் பெண்தான். 24 வயதாகிறது. கல்லூரிப் படிப்பை முடித்ததும் ‘மாடலிங்’ துறையில் களமிறங்கினேன். பின்னர் மின்னிலக்க காப்பீட்டுத் துறையில் தடம்பதிக்க நினைத்தேன்.
“எனினும், சன் டிவியில் ‘சிங்கப் பெண்’ தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் ஏற்று நடித்த ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானேன்.
“பின்னர் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரில் தேஜு கதாபாத்திரத்தில் நடித்தபோது, ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது ‘குரல்’ கதாபாத்திரம் நான் எதிர்பாராத அளவுக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
“’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் மிதுன் ஜெய்சங்கர், என்னிடம் தன் காதலை வெளிப்படுத்துவார். அந்த ஓர் காட்சியில் நானும் அவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியது இவ்வளவு பாராட்டுகளைப் பெற்றுத் தரும் என உண்மையாகவே எதிர்பார்க்கவில்லை.
“மேலும், தந்தை மீதான அக்கறை, மரியாதை, காதல் தோல்வியைக்கூட எளிதில் கடந்துபோகும் பாணி என இருவரும் கச்சிதமாக நடித்திருப்பதாக அனைவரும் பாராட்டுகின்றனர்.
“கதைப்படி, நானும் மிதுனும் காதலில் தோல்விகண்டாலும், நட்பு மூலம் அதைக் கடந்து செல்கிறோம் என்பதுதான் இந்தக் கதாபாத்திரங்களின் சிறப்பு.
“இது எனது முதல் திரைப்படம் என்பது எந்த அளவுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்ததோ, நடிகை சிம்ரனுடன் நடித்தது அதே அளவுக்கு பெருமை அளித்தது. அவர் எனது முன்மாதிரி கதாநாயகிகளில் ஒருவர்.
“படப்பிடிப்பின்போது அவர் மிக எளிமையாகப் பேசி நடந்துகொண்டதை மறக்கவே மாட்டேன்,” என்று சொல்லும் யோகலட்சுமி, தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
1990கள், 2000களில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிரச்சினையாகும்போது மன அழுத்தத்துக்கு ஆளாவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் அந்த காதல் தோல்வியை எளிதில் கடந்து செல்லும் மனநிலையும் அவர்களிடம் காணப்படுகிறது.
“நானும் மிதுனும் இத்தகைய கதாபாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டதாக பலரும் கூறுகின்றனர். ஒரு வகையில் அது உண்மை என்றே தோன்றுகிறது,” என்கிறார் யோகலட்சுமி.

