கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் அவரது வாழ்க்கை அனுபவங்களை மட்டும் தாங்கி வருவதில்லை.
வாழ்வில் ஒருவன் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுவான், உண்மைப்போல் எப்படி பொய்யுரை இடம்பெறும், பாக்காததைப் பார்த்தேன் என்று கூறுவது, பொய் புரட்டுகளாலேயே எப்படி ஒருவரின் வாழ்க்கை சீரழிகிறது, அதற்கு துணைபோவதற்கும் எப்படி பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறுவார்.
அவர் வாழ்க்கையில் பலரை நம்பி ஏமாந்ததை அவர் பலமுறை கூறியிருக்கிறார். அவர் ஒரு நடிகருடன் கூட்டுச் சேர்ந்து கவலையில்லாத மனிதன் என்ற படத்தை எடுக்கத் தொடங்கிய சமயத்தில் அவரிடம் பன்னிரண்டு கார்கள் இருந்ததாக சித்ரா கிருஷ்ணமூர்த்தி என்ற படத் தயாரிப்பாளர், நடிகர் ஒருமுறை கூறினார். ஆனால், பங்காளியாகச் சேர்த்துக்கொண்ட அந்த நடிகர், தமது விருப்பப்படி காசோலையில் கையெழுத்துப் போட்டு வேண்டுகிறபோதெல்லாம் பணம் எடுப்பது, நேரத்தோடு படத்தை முடித்துக் கொடுக்காமல் இருப்பது எனப் பல வழிகளிலும் கவிஞரை ஏமாற்றியதாகத் கூறப்படுகிறது.
இவை மட்டுமல்லாமல் கவிஞரின் அரசியல் வாழ்க்தை அவருக்கு ஏற்படுத்திய சிரமங்கள், நண்பர்கள், தெரிந்தவர்களுக்காக ஜாமின் என்ற கடன் உத்தரவாதக் கையெழுத்திட்டது போன்ற பல சம்பவங்களால் அவர் பட்ட துயரம் கணக்கிலடங்காதது என்று கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் நமக்கு எடுத்துரைக்கும் விதமாக பாடல் ஒன்று வரும். அதை இன்று கேட்டாலும் அதிலுள்ள உண்மைகள் நம்மை வியக்க வைக்கும்.
‘அருணோதயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல்:
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசப் பார்த்துக்க நல்லபடி”
ஆம்! உலகம் சொல்வதை எல்லாம் மனத்தில் அசைபோட்டுக் கொண்டிருந்தால் நிம்மதி போய்விடும். அதுபோலதான் நம்மைச் சுற்றியுள்ளவர்களும். எதையாவது பேசி மனதை அலைக்கழிப்பார்கள். அதற்கெல்லாம் செவிசாய்ப்பதை விட்டுவிட்டு நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். அடுத்து வரும் வரிகளும் இதையே வலியுறுத்துகின்றன.
“கதை கட்ட ஒருவன் இருந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு கோர்ட்டுக்கு தேவை சில சாட்சி குணத்துக்கு தேவை மனசாட்சி நம் குணத்துக்கு தேவை மனசாட்சி”
இதற்கு அடுத்த வரிகளில் எப்படி ஒருவன் தெரிந்தே பொய் சொல்வான். அதையும் உண்மை என்று சாதிக்க சில பேர் இருப்பார்கள் என்பதை கவிஞர் தமக்கே உரிய பாணியில் கூறுகிறார்.
“மயிலைப் பார்த்து கரடி என்பான் மானைப் பார்த்து வேங்கை என்பான் குயிலைப் பார்த்து ஆந்தை என்பான் அதையும் சில பேர் உண்மை என்பார் யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...”
ஆம்! இல்லாததை பார்த்ததாகவே, உண்மையில் நடந்ததாகவே சிலர் சாதிப்பர், அதற்குத் துணை போவதற்கும் கூடவே சிலர் தயாராக இருப்பர், எப்படி சிலர் கூசாமல் பொய் கூறுவர் என்று கவிஞர் விளக்குகிறார்.
பாட்டில் இறுதியாக வரும் வரிகள்தான் நம்மில் பலருக்குப் பொருந்தும்.
“கடலில் விழுந்த நண்பனுக்கு கைகொடுத்தேன் அவன் கரையேற கரைக்கு அவனும் வந்துவிட்டான் கடலில் நான்தான் விழுந்துவிட்டேன் சொல்லி அழுதால் தீர்ந்துவிடும் சொல்லத்தானே வார்த்தையில்லை அதைச் சொல்லத்தானே வார்த்தையில்லை”
இது பலர் வாழ்வில் நிகழ்ந்துள்ள (என் வாழ்க்கை உட்பட), இன்னமும் நிகழும் சோகம்.
அண்மையில்கூட ஒரு வழக்கறிஞரைச் சந்தித்தேன். அவர் கடனில் சிக்கித் தவிக்கும் மற்றொரு வழக்கறிஞருக்காக கடன் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டுள்ளார். அந்த வழக்கறிஞர் கடனைத் திருப்பித் தரவில்லை. உத்தரவாதக் கையெழுத்துப் போட்ட இவர்மீது சட்டம் பாய இன்று நண்பனுக்கு உதவி செய்யப்போய் அந்த வழக்கறிஞர் நொடித்துப் போனவராகி தொழில் செய்ய முடியாத நிலை.
கவிஞரின் பாடல் வரிகள் எதார்த்த நிலையைக் காட்டுபவை. அவை நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. எப்படி வாழக்கூடாது என்பதையும் எடுத்துக் காட்டுபவை.
பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்.