நீண்ட காலமாக நீடித்து வரும் ஒரு விவாதம் மீண்டும் வெடித்திருக்கிறது. அது, பாலினப் பாகுபாடு குறித்த விவகாரம். இம்முறை விவாதத்தை தொடங்கி வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை கிரித்தி சனோன்.
இந்தியில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான கெளரவ இந்தியத் தூதராக இவரை நியமித்துள்ளனர். சரி... தூதராக அவரது பணி என்ன?
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான போக்கை நீக்குவதும், இதுகுறித்து மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ண ஓட்டத்தை மாற்றுவதும்தான் கிரித்தியின் முக்கியப் பணிகளாக இருக்கும்.
இதற்குத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்வார். இந்தப் பணியை நூறு விழுக்காடு உண்மையாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் கிரித்தி.
தாம் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தம்மைச் சுற்றி நடக்கும் சமத்துவமின்மையைப் புறக்கணித்து விட முடியாது என்று அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இவரது பெற்றோர் இருவருமே வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனராம். பணி நிமித்தமாக நாள்தோறும் வெளியே செல்ல வேண்டியிருக்குமாம்.
ஆனால் வீட்டில் இருக்கும்போது இருவரும் தங்கள் பொறுப்புக்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளத் தவறியதில்லை என்றும் தன்னையும் தன் தங்கையையும் பெண்கள் என்ற காரணத்திற்காகப் பாலினத்தால் ஒருபோதும் கட்டுப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார் கிரித்தி.
தொடர்புடைய செய்திகள்
“அது போன்ற ஒரு சூழலை எனது பெற்றோர் உருவாக்கினார்கள். ஆனால் எனது தாயாருக்கு அப்படி இல்லை.
“பெண்களை அனுமதிக்காத பல விஷயங்களில் ஆண் குழந்தைகளை அனுமதித்த காலத்தில் என் அம்மா வளர்ந்தார். பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், சமைக்க வேண்டும், விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது தாயார் நீச்சல் அல்லது நடனம் கற்றுக்கொள்ள விரும்பினார்.
ஆனால் முடியவில்லை.
“அவர் படிப்புக்காக மட்டுமே போராடினார். அதன் மூலம் அவர் ஒரு பேராசிரியை ஆனார்,” என்று விவரிக்கும்போதே உணர்ச்சிவசப்படுகிறார் கிரித்தி.
தனது தாயாரின் போராட்டக் குணம்தான் தனக்கும் சகோதரிக்கும் மாறுபட்ட எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்று அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
ஒருவர் தான் விரும்புவதைச் செய்ய வேண்டும், எதை அடைய கனவு காண்கிறார்களோ, அது கிடைக்க கடுமையாக உழைத்தால் எல்லாம் கைகூடும் என்பதுதான் கிரித்தி அனைவருக்கும் கூறும் முதல் ஆலோசனை.
இந்தித் திரையுலகில் பாரபட்சம் நிலவுவதை யாராலும் மறுக்க முடியாது என்கிறார் இவர். அதிகமான நேரங்களில் அதனைப் பார்க்க முடியாவிட்டாலும் நடிகர்களுக்கு நல்ல கார், அவர்கள் தங்கக்கூடிய விடுதி என்கிற அளவிலாவது பாரபட்சத்தைப் பார்க்க முடிகிறது என்றும் இந்த எண்ணமும் கருத்தும் காரைப் பற்றியது அல்ல, தாம் பெண் என்பதால் இவ்வாறு நினைக்க வைத்தது என்றும் கூறியுள்ளார் கிரித்தி.
“எதையும் சமமாகச் செய்யுங்கள். ஏதாவது நிகழ்ச்சிக்குக்கூட நடிகைகளை முதலில் கூப்பிட்டு அமர வைத்துவிட்டு நடிகருக்காகக் காத்திருப்பார்கள். இது குறித்து நான் அவர்களிடம் எதுவும் தெரிவித்தது கிடையாது.
“ஆனால் இவ்விவகாரத்தில் உங்களது மனநிலையை மாற்றிக்கொள்வது அவசியம். வீடுகள் முதல் பணியிடங்கள் வரை அன்றாடப் பணிகளிலிருந்து பாலின சமத்துவம் தொடங்குகிறது. அது சிறிய விஷயங்களில்கூட சமத்துவமாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்குகிறது,” என்கிறார் கிரித்தி சனோன்.