புதுடெல்லி: இந்தியாவின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக திரிஷா தோஷர் என்ற நான்கு வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் இச்சிறுமி மிடுக்காக நடந்துசென்று மேடையேறி, தனக்கான விருதைப் பெற்றபோது மொத்த அரங்கமும் கைத்தட்டி பாராட்டியது.
‘நாள் 2’ என்ற மராத்திய திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறுமி திரிஷாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்நிலையில், தனது சாதனையைச் சிறுமி திரிஷா விஞ்சிவிட்டதாகப் பாராட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இது தொடர்பாக தமது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
“அன்புள்ள திரிஷா தோஷர், எனது உரத்த கைத்தட்டல்கள் உங்களுக்கு!
“நான் ஆறு வயதாக இருக்கும்போது எனது முதல் விருதைப் பெற்றேன். ஆனால், நீங்கள் எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்!
“அற்புதமான பணி மேடம். உங்கள் அற்புதமான திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு எனது பாராட்டுகள்,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.