‘நால்-2’ என்ற மராத்தி மொழி படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதைப் பெற்றுள்ளார் திரிஷா தோசர்.
இதன் மூலம், இந்தியாவில் ஆகக் குறைந்த வயதில் தேசிய விருதைப் பெற்றவர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ள திரிஷாவுக்கு, அவரைப் போலவே ஆறு வயதில் விருது வென்ற கமல்ஹாசன் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.
மேலும், கமலுடன் திரிஷா கைப்பேசியில் உரையாடும் காணொளி வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சரி, யார் இந்த சுட்டிக்குழந்தை?
திரிஷா பிறந்தது மும்பை மாநகரில். மராத்தி திரைத்துறையில் முன்னணி இயக்குநரான நாகராஜ் மஞ்சுளே கண்களில் ஒருமுறை தென்பட, உடனடியாக திரிஷாவுக்கு திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.
நாகராஜ் தயாரிப்பில், சுதாகர் ரெட்டி இயக்கத்தில் உருவான ‘நால்-2’ படத்தில் ‘சிமி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் திரிஷா. அவரது இயல்பான, சுட்டித்தனமான நடிப்பு படம் பார்த்தவர்களை உருக வைத்தது.
இத்தனைக்கும் இப்படத்தில் நடித்தபோது அவருக்கு மூன்று வயதுதான் ஆகியிருந்தது.
‘ஒரு சின்னக் குழந்தை இப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் என்பது யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். திரிஷா பிறவி நடிகை’ என்று விமர்சகர்கள் பாராட்டித் தள்ளினர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து ‘பெட்புரான்’, ‘மன்வட் மர்டர்ஸ்’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் திரிஷா நடித்துள்ளார்.
தேசிய விருது கிடைக்கும் வரை கவனிக்கப்படாத குழந்தை நட்சத்திரம்தான். இப்போது விருதுடன், கமல்ஹாசன் போன்றோரின் பாராட்டுகளையும் வென்றுள்ள இச்சிறுமி, இன்று இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார்.
திரிஷாவுக்குப் புதுப்பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.