குறைந்த வருமானக் குடும்பங்களுக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்குதல், குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல், இளையர்களின் திறன்களை வளர்த்தல், குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதில் ஏழு நிறுவனங்கள் முதன்முறையாக மன்றத்துடன் இணைந்துள்ளன. ஏற்கெனவே பங்காளிகளாக இருந்த நான்கு நிறுவனங்கள் தங்களது ஒத்துழைப்பைத் தொடர ஒப்பந்தங்களைப் புதுப்பித்துள்ளன.
நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற மன்றத்தின் மாவட்டக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
நியோ கா கியாட் கலை விருதுகள் நிகழ்ச்சியுடன் இணைந்து நடைபெற்ற இக்கூட்டத்தில், சமூக உதவித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும் விரிவுபடுத்தவும் தேவையான நிதி, நிபுணத்துவம், தொண்டூழியர்களின் பங்களிப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செயல்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
அக்கறை, இணைப்பு, ஒத்துழைப்பு, உள்ளடக்கம் ஆகிய நான்கு கொள்கைகளின் அடிப்படையில் செயல்படவுள்ள மன்றம், குடியிருப்பாளர்களுக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதோடு, குடும்பங்களுக்கும் சமூகத்தினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வடகிழக்கு வட்டார மேயர் பே யாம் கெங்கும் பங்கேற்றார்.
“குடியிருப்பாளர்களுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதையும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதையும் சமூகத்தில் தங்களுக்கென ஓர் இடம் இருப்பதை அவர்கள் உணர்வதையும் உறுதிசெய்வதே எங்களது முன்னுரிமை,” என்றார் திரு பே.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பள்ளி, மருத்துவமனைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதி, நிதியுதவி போன்றவற்றின் மூலம் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.
வேலைவாய்ப்புச் சந்தைகள் மூலம் குறிப்பிட்ட துறைகளில் குடியிருப்பாளர்கள் வேலை தேடுவதற்கும் உதவப்படும்.
குடும்பங்களுக்கான நிகழ்ச்சிகள், தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், இளையர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொண்டூழியத்திலும் சமூக நடவடிக்கைகளிலும் இளையர்கள் அதிகம் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
மாற்றுத்திறனாளிக் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் கணெக்ட்’ (Shaping Hearts Connect) என்ற திட்டமும் தொடங்கப்படவுள்ளது. இதன்வழி நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களது நிபுணத்துவத்தையும் தொடர்புகளையும் பயன்படுத்தி, கலைஞர்களின் படைப்புகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம்.
மாவட்டக் கூட்டத்தில் நடைபெற்ற கலைப்படைப்பு ஏலம் விடப்பட்டதைத் தொடர்ந்து, ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் 2026’ திட்டத்தின் மூலம் $769,385 திரட்டப்பட்டது.
நன்கொடைகள், கலைப்படைப்புகளின், ஏல விற்பனை மூலம் திரட்டப்பட்ட நிதி, மாற்றுத்திறனாளிக் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்களது படைப்புகளை மக்களிடம் கொண்டுசேர்த்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும்.
இவ்வாண்டு இத்திட்டத்தில் 253 கலைஞர்களும் 41 சமூகச் சேவை அமைப்புகளும் பங்கேற்றன.
“ஒவ்வொரு கலைஞரின் திறமையும் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதனால்தான் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்துக்கும் ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’ திட்டத்துக்கும் ஆதரவளிப்பதை முக்கியமாகக் கருதுகிறேன்,” என்றார் திரு நியோ கா கியாட்.
