பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா

பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா

படம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம்

29 Sep 2024 - 6:01 am

2 mins read

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை , மாலை 6 மணியளவில் சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் கிட்டத்தட்ட 200 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டு சிறப்புப் பேச்சாளராக உரையாற்றினார். சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் தலைவர் ரெ.செல்வராஜூ வரவேற்புரை ஆற்றினார். வருங்காலத்தில் சிங்கப்பூர் தமிழர் இயக்கம், சிண்டாவுடன் இணைந்து மாணவர்களின் கல்வி செலவுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய திரு தினகரன், சிங்கப்பூர் தமிழர் இயக்கம் 70 ஆண்டுகள் இயங்கி வருவதையும் அது தொடர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் சேவையாற்றி வருவதையும் பாராட்டினார். முனைவர் இறையன்பு, 90 நிமிடங்கள் பேசி பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தளித்தார். பேரறிஞர் அண்ணாவின் எளிமை, மொழி ஆளுமை, நினைவாற்றல், நகைச்சுவைத் திறன் பற்றி அவர் எடுத்துரைத்தார். ‘அகம் என்பது உணர்ந்து மகிழத்தக்கது, புறம் என்பது பகிர்ந்து மகிழ வேண்டியது’ என்று அகம், புறம் பற்றிய பேரறிஞர் அண்ணாவின் விளக்கத்தை அவர் எடுத்துரைத்தார் . நூல் வாசிப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், பேரறிஞர் அண்ணாவின் தினசரி வாசிக்கும் பழக்கமே அவரை உலகமறியும் அளவிற்கு பேரறிஞர் ஆக்கியது என்பதையும் சுட்டிக்காட்டினார் .

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி நாம் அறிந்திராத பற்பல தகவல்களையும் நிகழ்வுகளையும் நகைச்சுவை கலந்து முனைவர் இறையன்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு, பொன்மொழிகள் அடங்கிய நூல்கள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்