கனடாவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு

கனடாவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு

2 mins read
b1636502-4cc1-43b3-9c2b-4018a1984c50
15வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின்போது நிகழ்ச்சி மேடையில் பேராளர்கள். - படம்: சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்
multi-img1 of 2
Google News Preferred Icon

கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ வளாகத்தில் ஜூன் 1 முதல் 3 வரை 15வது உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற்றது. ‘தலைமுறை கடந்தும் தமிழர் வாழ்வியல் வழி கற்றல், கற்பித்தல்’ எனும் கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.

உலகத் தமிழாசிரியர் மாநாடு 1992ல் சிங்கப்பூரில் தொடக்கம் கண்டது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது. இது, பல்வேறு நாடுகளில் மாநாடுகள் நடைபெற உதவியும் ஆலோசனை வழங்கியும் வருகிறது.

“இவ்வாண்டு மாநாட்டில் 65 சிங்கப்பூர் பேராளர்களும் 12 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 50 பேராளர்களும் கலந்துகொண்டனர். மேலும், கனடாவைச் சேர்ந்த 200 பேராளர்களும் பங்குபெற்றனர்,” என்று உலகத் தமிழாசிரியர் பேரவையின் தலைவரான திரு சாமிகண்ணு, 75, கூறினார்.

இம்மாநாடு மொரிஷியஸ், சிங்கப்பூர், இந்தியா போன்ற பல நாடுகளில் நடந்துள்ளதாகவும் முதல்முறையாக இவ்வாண்டு கனடாவில் நடைபெற்றதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்க் கற்றல், கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளும் சிந்தனைகளும் தமிழை இரண்டாம், மூன்றாம் மொழியாகப் பயிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் முறை, தமிழ் கற்றல், கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பேச்சுப் புழக்கத்திற்கான முறை போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியரான திருவாட்டி மூ.கீதா, இம்மாநாட்டில் மென்பொருள்களைப் பயன்படுத்தி சிறுகதை எழுதுவதைப் பற்றிப் படைத்தார். 

அவரது படைப்பு இருவழி தொடர்பாக அமைந்தது. விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு அவர் நடத்திய பாடத்தை மாநாட்டில் குழுமியிருந்த பேராளர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

பேராளர்கள் அனைவரும் தங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தி மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்து முன்னுணர்வுக் கருத்தறிதல், தெரிவுவிடைக் கருத்தறிதல், கேள்வி பதில் ஆகியவற்றில் கலந்துகொண்டனர். 

“இந்தப் பகிர்வு மிகவும் வித்தியாசமாக அமைந்தது. பேராளர்களின் பாராட்டையும் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. நல்லதொரு படைப்பைப் படைத்ததை எண்ணி மனநிறைவு அடைகிறேன்,” என்று திருவாட்டி கீதா கூறினார். சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் செயலவை உறுப்பினரும் இவ்வாண்டு மாநாட்டிற்குச் சென்ற சிங்கப்பூர் தமிழாசிரியர்களின் ஒருங்கிணைப்பாளருமான திரு வசந்தவேலன், 35, சிங்கப்பூரில் தமிழ் நிலவரத்தை விவரிக்கும் நாட்டறிக்கையைப் படைத்ததில் பெருமிதம் கொண்டார்.

ஈசூன் தொடக்கப்பள்ளி தமிழாசிரியரான அவர், “இந்த அனுபவம் எனக்குப் புதியதாக இருந்ததோடு புத்துணர்ச்சியும் அளித்தது. உலக மேடையில் சிங்கை தமிழ் மேலோங்கித் திகழ்வது எனக்கு பேரின்பத்தைக் கொடுக்கிறது. மேலும் சிங்கப்பூரில் தமிழை வளர்க்க என்னை ஊக்குவித்துள்ளது,” என்று கூறினார்.

அடுத்து, 16வது முறையாக உலகத் தமிழாசிரியர் மாநாடு 2026ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்
கனடாமாநாடுதமிழ்