21வது லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம்: விண்ணப்பங்களுக்கு அழைப்பு

21வது லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம்: விண்ணப்பங்களுக்கு அழைப்பு

2 mins read
73127038-7286-4c2c-954e-30a0209183f2
உபகாரச் சம்பளத்திற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 30 வரை சமர்ப்பிக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்தைப் பெற விரும்புவோர் இவ்வாண்டு (2026) ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான காலகட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தொடங்கியது.

மொழிகள், மொழியியல், மானுடவியல் பட்டப்படிப்புகளை உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் முழுநேரமாகப் பயிலும், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சரான மறைந்த திரு லிம் கிம் சானின் நினைவாக 2006லிருந்து உபகாரச்சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

‘எஸ்பிஎச்’ அறக்கட்டளை வழங்கும் நிதியாதரவுடன் கடந்த 20 ஆண்டுகளில் இந்த உபகாரச்சம்பளம் சுமார் 200 மாணவர்களுக்குக் கைகொடுத்துள்ளது.

திரு லிம் மக்களுக்குச் சேவையாற்றியதைப் போல் இதைப் பெறும் மாணவர்களும், பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, தொண்டூழியம் செய்து சமூகத்திற்குப் பங்காற்ற ஊக்குவிக்கப்படுகின்றனர்.

யார் விண்ணப்பம் செய்யலாம்?

(1) விண்ணப்பதாரர் சிங்கப்பூரராக இருக்கவேண்டும்.

(2) மாதாந்தரக் குடும்ப வருமானம் $5,000த்திற்குக் கீழ் இருக்கவேண்டும்; தனிநபர் வருமானம் $1,250க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

(3) கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள்

- உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுத் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருத்தல் அல்லது;

- சாதாரண நிலை (ஜிசிஇ ‘ஓ’ நிலை), வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

(4) இணைப்பாட நடவடிக்கைகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவோர்.

உபகாரச் சம்பளம் பெறும் மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்:

(1) தேர்வுக் கட்டணங்கள் உட்பட அனைத்துக் கல்விக் கட்டணங்களும் அளிக்கப்படும்.

(2) தங்குமிடச் செலவிற்காக ஒவ்வோர் ஆண்டும் $2,500 வழங்கப்படும்.

(3) புத்தகங்கள் வாங்குவதற்காக ஆண்டுக்கு $500 வழங்கப்படும்.

(4) ‘எஸ்பிஎச்’ ஊடகத்தில் தொழில் சார்ந்த பயிற்சிப் பணியிலும் ஈடுபட மாணவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படக்கூடும்.

கூடுதல் விவரங்களுக்கும் உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்யவும் sphfoundation.org.sg/application/lks-memorial-scholarship-application/ எனும் இணையத்தளத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்