தீபத் திருநாளை முன்னிட்டு சென்ற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5), வெளிநாட்டு ஊழியர்கள் ஏறத்தாழ 3,000 பேர் செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் ஒன்றுகூடிக் கொண்டாடினர்.
வெவ்வேறு இந்திய மொழிகளில் ஆடல், பாடல் அங்கங்களுடன் சுவையான பிரியாணி, பழச்சாறுகள் அவர்களுக்குப் பரிமாறப்பட்டன.
தீபாவளியைப் பிரதிபலிக்கும் விதமாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் முடியை விளக்கு வடிவத்தில் திருத்திக் கொண்டார்கள்.
இது முதல்முறையாக நடைபெறும் புதிய, இலவச முயற்சி என்றார் ‘மெட்ராஸ் பார்பர்ஸ்’ முடிதிருத்தும் கடையின் உரிமையாளர் ஆபிரகாம் ஆனந்த், 32.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 60ஆம் ஆண்டுநிறைவைப் பறைசாற்றும் நோக்கத்தில் விழாவுக்கு இந்தியத் தூதரகப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்கள் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டு ஊழியர்களில் 50 வயதான திரு குணசேகரனும் ஒருவர்.
“கடந்த 11 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் என் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன். காலையில் எழுந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுகிறோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கடலூரிலிருந்து வந்துள்ள இவர் தம் குடும்பத்துடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாட முடியாத்ததை எண்ணி வருந்துவதாகக் குறிப்பிட்டார்.
அவரைப் போன்றே, தீபாவளி நாளில் காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் செல்வது வழக்கம் என்று கூறினார் பிரபுதேவன், 27.
தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் கிட்டத்தட்ட ஓராண்டாகச் சிங்கப்பூரில் பணிபுரிவதாகச் சொன்னார்.
“இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமது கலாசாரத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன,” என்றார் பிரபுதேவன்.