முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் இனி எல்லாருக்கும் சாத்தியம்

முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் இனி எல்லாருக்கும் சாத்தியம்

3 mins read
890f73df-71d3-405f-9f4c-d278aec3d17f
முப்பரிமாண அச்சுமுறையை முயன்று பார்க்க விரும்புவோர், தேசிய நூலக வாரியத்தின் ‘மேக்இட்’ திட்டத்தின்கீழ் வழங்கப்படும் முப்பரிமாண அச்சு வசதிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெறும் சில நூறு வெள்ளிக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருள்களை முப்பரிமாண அச்சுப்பொறியின் (3D-printing) துணையுடன் இப்போது உருவாக்கலாம்.

இத்தகைய முப்பரிமாண அச்சுப்பொறிகள் பொதுவாக ‘பாலிலாக்டிக்’ அமில இழைகளுடன் பயன்படுத்துவதற்கு ஏற்றவை. அந்த இழைகள் வீடு அல்லது அலுவலகத்துக்கு மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் முதன்மையான மை ஆகும்.

வணிகர்களைப் பொறுத்து அவற்றின் விலைகளும் வண்ணங்களும் மாறுபடும் என்றாலும், பல்வேறு வண்ணங்களைக் கொண்ட இழைச்சுருள் 15.89 வெள்ளிக்கு விற்பனையானது ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இழைகளை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், அது சிங்கப்பூரின் ஈரப்பதமான வானிலையில் அது ஒரு பெரிய சவாலாகும்.

“நான் வண்ண இழைச்சுருள்களைக் காற்று புகாத ஒரு நெகிழிப் பெட்டியில், ஒரு ஈரப்பத நீக்கியுடன் (dehumidifier) சேர்த்து வைத்துள்ளேன்,” என்றார் வூ லின்ஹான்.

அவர் 2021 முதல் 2024 வரை ஜெர்மானிய முப்பரிமாண அச்சு மென்பொருள் நிறுவனமான ‘ஹைப்பர்கானிக்’கில் பணிபுரிந்தார். அதன்பின் தனிப்பட்ட ஆர்வத்தில் அதனைச் செய்து வருகிறார்.

முப்பரிமாண அச்சுமுறையை முயன்று பார்க்க விரும்புவோர், தேசிய நூலக வாரியத்தின் ‘மேக்இட்’ (MakeIt) திட்டத்தின்கீழ் வழங்கப்படும் முப்பரிமாண அச்சு வசதிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

அங்குள்ள முப்பரிமாண அச்சப்பொறிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். என்றாலும், பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பாகப் பதிவுசெய்துகொண்டு, இலவச தொடக்கப் பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும்.

இரண்டரை மணி நேரம் நடைபெறும் தொடக்கப் பயிற்சிகளில் 13 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். அப்பயிற்சி உட்லண்ட்ஸ், பொங்கோல், தெம்பனிஸ், ஜூராங் ஆகிய நூலகங்களில் வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தொடக்கப் பயிற்சியில் பங்கேற்ற லிங் யிங் சுவான், 24, முப்பரிமாண அச்சிடல் குறித்த அடிப்படைகளையும் அச்சுப்பொறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொண்டார்.

சமூக ஊடகங்கள்வழி நூலகத்தின் இலவச முப்பரிமாண அச்சிடும் வசதிகளைப் பற்றி அறிந்து பதிவுசெய்ய முடிவு செய்தார் குமாரி லிங்.

“மக்கள் தங்களுக்கென பயன்படுத்தக்கூடிய பொருள்களை வடிவமைத்து, அவற்றை அச்சிட முடியும் என்பது எனக்கு சுவாரசியமாகத் தோன்றியது,” என்றார்.

தொடக்கப் பயிற்சியை முடித்து அச்சிடுவதற்காக முன்பதிவு செய்தவுடன், அச்சிட விரும்பும் பொருள் என்னவென்பதை குறித்த ஒரு திட்டத்தைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“இருப்பினும், அச்சிடுவதற்கு ஒவ்வொரு வண்ண இழையில் ஒன்று மட்டுமே உள்ளது. மேலும், அது எப்போதும் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும். அதனால், சில சமயங்களில் விரும்பும் வண்ணத்தில் அச்சிட முடியாமல் போகலாம்,” என்று அதன் சவால்கள் பற்றிக் குறிப்பிட்டார் குமாரி லிங்.

அவர் பெரும்பாலும் பெயர் அட்டைகள், சாவிக்கொத்து, தலைமுடிக் கவ்விகள் (hair clips) போன்ற சிறிய அலங்காரப் பொருள்களை அச்சிட்டுள்ளார்.

தேசிய நூலக வாரியத்தின் முப்பரிமாண அச்சுப்பொறிகளைப் பயன்படுத்தியதால் தனக்கென சொந்தமாக ஓர் அச்சுப்பொறியை வாங்க இப்போது நம்பிக்கை பிறந்துள்ளது என்று அவர் சொன்னார்.

“உங்களுக்கெனச் சொந்தமாக ஓர் அச்சுப்பொறி வேண்டும் என்பதில்லை. பதிவுசெய்து, கற்றுக்கொண்டால் போதும். நாமே வடிவமைத்த ஒரு பொருள் நம் கைகளுக்கு வந்துசேர்ந்துவிடும்,” என்கிறார் குமாரி லிங்.

குறிப்புச் சொற்கள்