‘சைவநெறி அறம் வாழ்வுக்கு உரம்’

2 mins read
c3df43dd-d006-49bf-a84f-4567c68317d5
சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு ஶ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. - படம்: சுவாமிநாதன் விஸ்வா
multi-img1 of 3

அறிவியல் அடிப்படைகளின் வெளிப்பாடாகவே சைவ சமய குறியீடுகளும் புரிதல்களும் அமைந்துள்ளன.

நிலை ஆற்றலாக சிவமும், இயக்க ஆற்றலாக சக்தியும் உணரப்பட்டு அதற்கேற்பவே பழங்கால சைவ சமய வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இவை பல்வேறு தெளிவுகளோடு சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டில் சிறப்புப் பேச்சாளர் டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கியவை. 

சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு ஜூலை 26, 27, 28 தேதிகளில் ஶ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் 500 பேர் வரை இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நேரலையாக மூன்று நாள் நிகழ்வுகளும் யூடியூப் தளத்திலும் வலம்வந்தன.

இல்லத்தில் தமிழ்மொழிப் புழக்கம் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார் ஜூலை 26ஆம் தேதி திருமுறை மாநாட்டைத் துவக்கிவைத்த சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.

சிங்கப்பூர் இந்திய குடும்பங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேற்பட்டோர் ஆங்கிலம் பேசுகின்றனர்; ஏறக்குறைய 27% மட்டுமே தமிழ் பயன்படுத்துகின்றனர் எனும் தரவை அடிகோடிட்ட அவர், “திருமுறை மாநாடு போன்ற முன்னெடுப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ்மொழியையும் அடையாளத்தையும் வாழ்க்கைநெறிகளையும் கொண்டு செல்கின்றன,” என்றார். 

விஞ்ஞானமும் மெய்ஞானமும் சந்திக்கும் இடங்களை ஆராய்ந்தார், மூன்று நாள்களும் சொற்பொழிவுகள் ஆற்றிய சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன்.

மருத்துவ நோக்கில், அறிவியல் நோக்கில், மகளிர் நோக்கில் திருமுறை என மூன்று தலைப்புகளில் அவர் சைவ சமய சிந்தனைகளை எளிமையாக எடுத்தியம்பினார்.

நாயன்மார் புராணங்களில், திருமந்திரத்தில் காணப்படும் அறிவியல்சார் தகவல்களை மேற்கோள் காட்டி அவற்றை தற்போதைய வளங்களுக்கு அவர் தொடர்புபடுத்தியது மக்களின் சிந்தனையைத் தூண்டியது. 

ஞாயிறு காலை அன்று ஶ்ரீ முருகன் திருக்குன்றம் கோயிலில் 63 நாயன்மார் குருபூசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இடம்பெற்ற டாக்டர் சுதா சேஷய்யனுடனான கேள்வி பதில் அங்கத்தில் மூடநம்பிக்கைகள், சமயத்தில் பெண்களின் பங்கு, சைவம் போதிக்கும் தத்துவங்கள் முதலியன குறித்த பல சந்தேகங்கள் கலந்தாராயப்பட்டன. 

பல்வேறு ஆலயங்களில் பணியாற்றும் திருமுறை ஓதுவார்களின் திருமுறை இன்னிசை மழை அரங்கத்தில் பொழிந்தது.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களைக் காணும் திருமுறை போட்டிகளில் வெற்றி பெற்றோரின் பேச்சு, இசைப் படைப்புகள் ஆகியவை நிகழ்வுக்குச் சுவையூட்டின. 

இளையரின் கைகளில் சைவ சமயம் தழைப்பது தங்களின் நீண்டநாள் கனவு என்றார் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் திரு கண்ணா கண்ணப்பன். அண்மையில் அமைக்கப்பட்ட திருமுறை மாநாடு இளையர் பிரிவு ஆலயச் சேவை, திருமுறை முகாம் முதலிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது.  

மேல்விவரங்களுக்கு singaithirumurai.org தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்