காலத்தை வென்ற இல்லறம்

காலத்தை வென்ற இல்லறம்

4 mins read
150fbe6e-0924-402a-a055-f72fcac9aee7
திரு பூகே‌ஷ் நடேசனும் திருவாட்டி சொர்ணம் துரைச்சாமியும் 1972ல் சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். - படம்: த.கவி

நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமான திறவுகோல் பரஸ்பர புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்தான் என்று தொடர்ந்து 52 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருமண வாழ்க்‌கையை நடத்திவரும் ஒரு தம்பதியர் கூறுகிறார்கள்.

தமிழகத்தின் மன்னார்குடியின் காரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நீண்டகால நண்பர்களான தங்கள் தந்தையர் இருவரும் ஏற்பாடு செய்த திருமணத்தின்மூலம் திரு பூகே‌ஷ் நடேசனும் திருவாட்டி சொர்ணம் துரைச்சாமியும் 1972ல் சிங்கப்பூரில் தம்பதியரானார்கள்.

திருமணத்திற்கு முன் இருவரும் பேசி, பழகிப் பார்ப்பதற்கு நேரம் வழங்கப்படவில்லை. அந்தக்‌ கால‌கட்டத்தில் இது வழக்கமாக இருந்த ஒரு பழக்‌கம் என்று இவர்கள் கூறினர்.

இருப்பினும், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, வாழ்க்கையின் சவால்களை ஒன்றாக எதிர்கொண்டு, தங்களுக்கிடையே வலுவான பந்தத்தை இருவரும் அமைத்துக்கொண்டனர்.

திரு பூகே‌ஷ் நடேசனும், 81, திருவாட்டி சொர்ணம் துரைச்சாமியும், 74.
திரு பூகே‌ஷ் நடேசனும், 81, திருவாட்டி சொர்ணம் துரைச்சாமியும், 74. - படம்: த.கவி

“வெற்றிகரமான மணவாழ்க்கை வேண்டுமென்றால், மனத்தில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசி, சில விஷயங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். கணவன், மனைவி இடையில் விரிசல் ஏற்பட்டால்‌ அவற்றை தக்‌கவகையில் கையாண்டு, ஒன்றாக முன்னேறுவது அவசியம்,” என்று திருவாட்டி சொர்ணம், 74, கூறினார்.

1980களில் நிதிப் பிரச்சினையை எதிர்கொண்டபோது அதை எப்படிச் சமாளித்தோம் என்பதை இவர்கள் கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தனர்.

“இளநிலை ஊழியராக மாதம் சுமார் $200 மட்டுமே நான் அப்போது சம்பாதித்தேன். அந்த வருமானத்தில் எங்களது குடும்பத்தின் அனைத்துச் செலவுகளையும் சமாளிக்‌க வேண்டிய நிலைமை இருந்தது,” என்று திரு நடேசன் கூறினார்.

தங்கள் மூன்று மகள்களின் கல்விக்கு முன்னுரிமை அளித்து, தங்கள் இருவருக்கும் கிடைக்‌காத வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கினார்கள்.

விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள திரு நடேசன், 81, முதிர்ந்த வயதிலும் தொடர்ந்து நெடுந்தூர ஓட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட ஓட்டங்களை இவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

“எனக்கு ஓடுவது பிடிக்கும் என்பது என் மனைவிக்கு நன்கு தெரியும் என்பதால் நான் கவனத்துடன் செயல்படும்வரை, அவர் என்னை இன்றும் ஓட அனுமதிக்கிறார்,” என்று அவர் சிரித்தபடி கூறினார்.

ஒருவரின் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடாமல் இருப்பதும் திருமணத்தின் ஓர் அங்கம் என்று சொன்ன திருவாட்டி சொர்ணம், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்கூட காதலும் அன்பும் வளரலாம் என்றார்.

திரு பூகே‌ஷ் நடேசனும் திருவாட்டி சொர்ணம் துரைச்சாமியும் (நடுவில்) தங்கள் இரண்டு மகள்களுடனும் மூத்த பேரப்பிள்ளையுடனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திரு பூகே‌ஷ் நடேசனும் திருவாட்டி சொர்ணம் துரைச்சாமியும் (நடுவில்) தங்கள் இரண்டு மகள்களுடனும் மூத்த பேரப்பிள்ளையுடனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: த.கவி

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெற்ற ‘கோல்டன் ஜுபிலி’ திருமண விழாவில் கௌரவிக்கப்பட்ட 202 தம்பதிகளில் திரு நடேசனும் திருவாட்டி சொர்ணமும் அடங்குவர்.

வாழ்வுக்கான குடும்பங்கள் மன்றம், திருமணப் பதிவகம், முஸ்லிம் திருமணங்கள் பதிவகம் முதலிய அமைப்புகளால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 50 ஆண்டுகள் கடந்தும் இணை பிரியாமல் தங்களது திருமண வாழ்க்கையை இனிதே நடத்திவரும் இத்தம்பதிகளுக்‌கு நினைவுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட மற்றொரு தம்பதியரான 76 வயது திரு ஜக்தார் சிங்கும் இவரின் 68 வயது துணைவியார் பல்விந்தர் கோரும் 50 ஆண்டுகளாக ஒன்றாக இல்லறம் நடத்தி வருகிறார்கள்.

திரு ஜக்தார் சிங்கும் திருவாட்டி பல்விந்தர் கோரும் 1974ல் திருமணம் செய்துகொண்டனர்.
திரு ஜக்தார் சிங்கும் திருவாட்டி பல்விந்தர் கோரும் 1974ல் திருமணம் செய்துகொண்டனர். - படம்: த.கவி

திருவாட்டி பல்விந்தர், 14 வயதில் வாம்போவில் ஒரு புதிய வீட்டிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தபோது இவர்கள் இருவரின் காதல் கதை தொடங்கியது.

அதே புளோக்கில் வசித்த திரு ஜக்தார், அவர்களை வாம்போவுக்கு வரவேற்றதோடு, அவர்களின் பொருள்களைச் சுமக்கவும் உதவினார்.

“அவரை முதல்முறையாக அப்போதுதான் பார்த்தேன். அவர் பார்ப்பதற்குத் திரைப்பட நடிகர்போல் மிகவும் அழகாக இருந்தார்,” என்று திருவாட்டி பல்விந்தர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

இவர்களின் காதல் மெதுவாகவும் அழகாகவும் மலர்ந்தது. கைப்பேசி இல்லாத அந்தக்‌ காலகட்டத்தில் திரு ஜக்தார் தமது இளைய சகோதரர் மூலம் காதல் கடிதங்களைத் திருவாட்டி பல்விந்தருக்கு அனுப்பி வைத்து, இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். கண்டிப்பான தந்தையின் கண்காணிப்பில் இருந்த திருவாட்டி பல்விந்தர், தமது குடும்பத்தினரிடம் தையல் வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, திரு ஜக்தாரை சந்திக்க ரகசியமாக வெளியே சென்றார்.

திருவாட்டி பல்விந்தர் தனது 18 வயதில், தம் தந்தையின் ஆசிர்வாதத்துடன் திரு ஜக்தாரை 1974ல் திருமணம் செய்துகொண்டார்.

“எங்களின் காதல் கதை மிகவும் இயல்பாக நடந்தது,” என்றார் திரு ஜக்தார்.

முன்னாள் காவல்துறை அதிகாரியான இவர், அதே சமயத்தில் உணவு தயாரித்து பரிமாறும் தொழிலில் பகுதி நேரமாகப் பணிபுரிந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, கணவரின் இடத்தில் திருவாட்டி பல்விந்தர் இரவு நேரம் வரை வேலை செய்து உதவினார்.

76 வயதான திரு ஜக்தார் சிங்கும் 68 வயதான துணைவியார் பல்விந்தர் கோரும்.
76 வயதான திரு ஜக்தார் சிங்கும் 68 வயதான துணைவியார் பல்விந்தர் கோரும். - படம்: த.கவி

“திருமணம் என்பது காதல், அர்ப்பணிப்பு, நம்பிக்கை, மரியாதை, பொறுமை ஆகியவற்றால் செழித்து வளரும் ஒரு வாழ்நாள் பயணம். நாங்கள் என்றென்றும் ஒருவரையொருவர் நம்பி செயல்படுகிறோம்,” என்றார் திருவாட்டி பல்விந்தர்.

இளம் தம்பதியர் தங்கள் ஓய்வுநேரத்தை அர்த்தமுள்ளதாகவும் அன்பு நிறைந்ததாகவும் அமைத்துக்கொள்வதன் மூலம் தங்கள் திருமண வாழ்க்கைக்கு மேலும் மகிழ்ச்சி சேர்க்கலாம் என்று இவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்