ஒவ்வோர் ஆண்டும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில் கல்வி உதவி நிதி வழங்கி வருகிறது.
இவ்வாண்டு 30வது முறையாகக் கோயில் 93 மாணவர்களைச் சிறப்பித்தது. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களிலிருந்து, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் வரை இதன்மூலம் பயன்பெற்றனர்.
சனிக்கிழமை (ஜனவரி 10) காலையில் ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில் வளாகத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துகொண்டு $200 முதல் $1,000 வரையிலான உதவி நிதியைப் பெற்றுக்கொண்டனர்.
தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
குடும்ப நிதிச் சூழலுக்கு உதவும் வகையில் இந்தக் கல்வி உதவி நிதி அமையும் என்று நம்பும் இம்மானுவல் தேவநேசன் கார்த்திகேசன், 18, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் முதலாம் ஆண்டு பயில்கிறார்.
கல்வியில் சிறந்து விளங்கினால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்பும் இவர், இந்தத் தொகை கல்விச் செலவுகளுக்கும் பெற்றோர்களின் செலவுகளுக்கும் ஏதுவாக இருக்கும் என்றார்.
சகோதரிகள் சி. நிஷா, 27, சி. திவ்யதர்ஷினி, 24, இருவரும் ஒன்றாகக் கல்வி உதவி நிதி பெற்றுக்கொண்டனர்.
இரண்டாவது முறையாக உதவி நிதியைப் பெற்றுக்கொண்ட நிஷா, அது தமது கல்விச் செலவுகளுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இருவருக்கும் கல்விச் செலவுகள் பல உள்ளன. மாணவர் விடுதியில் தங்குவதால் செலவுகள் அதிகமாக இருப்பதாகக்கூறும் நிஷா, வார இறுதி நாள்களில் பகுதி நேரவேலையும் செய்து வருகிறார்.
சகோதரிகளாக ஒன்றாகக் கல்வி உதவி நிதி பெற்றதை நினைத்துப் பெருமிதம் கொள்ளும் திவ்யதர்ஷினி, நிதியைச் சேமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஆய்வாளர்களாகப் பணிபுரிய விரும்பும் இவ்விருவரும் இளையர்கள் கல்வியில் சிறந்து விளங்கினால் இத்தகைய கல்வி நிதி மூலம் பயன் பெறலாம் என்பதை அறிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும் என்றனர்.
தொடக்கப்பள்ளிப் பிரிவில் உதவி நிதி பெற்றுக்கொண்ட ஹரிஹரன் ராமமூர்த்தி, 13, இது தன் தம்பிக்கு ஊக்கம் அளிக்கும் என்று நம்புவதாகச் சொன்னார்.

