காலஞ்சென்ற முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்துல் கலாம் லட்சியக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சி அக்டோபர் 18 ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
மாணவர்களிடமும் இளையர்களிடமும் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில், அமரர் கலாமுடன் முன்னதாகப் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டம் எவ்வாறு உருவானது என்பது குறித்தும், நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்த சந்திரயான் திட்டத்தின் முழுமையான பயணத்தையும் அவர் மாணவர்களுக்கு விளக்கினார்.
குறிப்பாக, 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை நிலவு குறித்த ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டிருந்தாலும் தொடர் தோல்விகளால் அவை அந்த முயற்சிகளைக் கைவிட்ட நிலையில், இந்தியா எப்படி அந்தத் தோல்விகளை ஆராய்ந்து அதில் வெற்றி கண்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“மற்ற நாடுகளின் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றைத் திருத்திக்கொண்டதே இந்தியாவின் மிகப்பெரிய சாதனைக்குக் காரணம்,” என்று அவர் கூறினார்.
தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பரவலாகப் பேசப்பட்டாலும், விண்வெளித் துறையில் கடந்த 25 ஆண்டுகளாகவே அது பயன்படுத்தப்பட்டு வருவதையும் திரு மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டார்.
இன்றைய காலகட்டத்தில் இளையர்கள் தொடர் கற்றலில் ஈடுபட வேண்டிய தேவையை வலியுறுத்திய அவர், “நாம் நமது வசதியான எல்லையைவிட்டு வெளியே வந்து புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பின்தங்கிவிடுவோம்,” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அது மட்டுமன்றி, தாய்மொழிக் கல்வியின் சிறப்பையும் அவர் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார். “எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்துப் பள்ளியில், ஒரு கட்டடம்கூட இல்லாமல் திறந்தவெளியில் தாய்மொழியான தமிழில் கல்வி கற்றுத் தான் நான் இந்த மாபெரும் நிலையை அடைந்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.
தாய்மொழியில் ஒரு தகவலைக் கற்கும் போதுதான் அதை முழுமையாக உள்வாங்கிச் செயல்பட முடியும் என்பது அவருடைய ஆணித்தரமான கருத்தாக அமைந்தது.
சிங்கப்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு திரு கேசவபாணி அவர்களின் தலைமையின்கீழ் ‘அப்துல் கலாம் லட்சியக் கழகம்’ தொடங்கப்பட்டது.
டாக்டர் கலாமின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும்.
மனிதநேயத்தைப் பரப்புதல், மரம் நடுவது, தூய்மையான பசுமைத் தாயகத்தை உருவாக்குவது போன்ற டாக்டர் கலாமின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் இந்த அமைப்பு தனித்துவமாகச் செயல்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு விருந்தினரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் திவாரி, டாக்டர் கலாம் அவர்களின் மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.
ஏவுகணைத் திட்டங்களில் தோல்வி ஏற்பட்டபோது, அந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஒரு தலைவராக அவர் எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதையும், அதே திட்டம் வெற்றி பெற்றபோது அந்த வெற்றியின் பெருமையை எப்படித் தம் குழுவினருக்குச் சமர்ப்பித்தார் என்பதையும் திரு திவாரி சுட்டிக்காட்டினார்.
“உண்மையான ஒரு தலைவர் என்பவர் தோல்வியைத் தன் தோளில் சுமந்து, வெற்றியைத் தம் குழுவினரோடு கொண்டாடுபவராக இருக்க வேண்டும் என்ற கலாமின் வாழ்க்கை முறை அனைவரையும் கவர்ந்தது. அவரது வாழ்க்கை வெற்றிகளால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை. பல தோல்விகளைச் சந்தித்து, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறியதே அவருடைய உண்மையான வெற்றி,” என்று திரு திவாரி சொன்னார்.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சியில் பல சிறப்பங்கங்கள் இடம்பெற்றிருந்தன. தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 20 பேருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தொடக்கநிலை மாணவர்களுக்கான உதவித்தொகையை திரு அமீர் அலி தலைமையிலான குழுவும், உயர்நிலை மாணவர்களுக்கான உதவித்தொகையைத் திரு ரமா சங்கரன் தலைமையிலான குழுவும் தேர்ந்தெடுத்து வழங்கின. தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 20 மாணவர்கள் மேடையில் ஏறி டாக்டர் கலாமின் பொன்மொழிகளைப் பகிர்ந்துகொண்டனர்.
