சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்களிடையே மட்டுமின்றி உலக அளவிலும் சமயப் பற்றோடு மொழிப் பற்றையும் ஒருசேர வளர்க்க உதவிய இருபெரும் ஆளுமைகளின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அவர்களைப் பற்றி சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.இலியாஸ் எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இசை நிகழ்ச்சியும் அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது.
சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது, இசை முரசு நாகூர் ஹனிஃபா இருவர் குறித்து திரு இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’, ‘நல்லிணக்கக் குரல் - இசை முரசு நாகூர் ஹனிஃபா’ எனும் இரு நூல்கள் வெளியீடு கண்டன.
ராயல் கிங்ஸ் குழுமத்தின் ஆதரவுடன் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்த இவ்விழா, ஜனவரி 31ஆம் தேதி சுல்தான் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற்றது.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஹாஜி நசீர் கனி தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் முன்னாள் துணைத் தலைவருமான கே.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
நூலாசிரியரின் நண்பர் புதிய நிலா மு.ஜஹாங்கீர் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் டாக்டர் அ.வீரமணி, தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் இருவரும் வாழ்த்துரை வழங்கினர். உலகத் தமிழ்மாமணி, நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் ஆர்.தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டுப் பேசினார்.
சிராஜுல் மில்லத், இசை முரசு நூற்றாண்டு நினைவாக, தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் கல்வி உதவிநிதிக்கு நூல் விற்பனைத் தொகை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் பாடகர் ஹாஜி எம்.ஃபரிஹுல்லா தலைமையில், பிரபலப் பாடகர்கள் ‘சூப்பர் சிங்கர் புகழ்’ கழுத்து கார்த்திக், தீனிசைத் தென்றல் நாகூர் சதாம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இருபெரும் ஆளுமைகள்
எழுத்தாளராகவும் புகழ்பெற்ற பேச்சாளராகவும் ‘மணி விளக்கு’ மாத இதழ், ‘அறமுரசு’ நாளிதழ், ‘மணிச்சுடர்’ வார, நாளிதழ்களின் ஆசிரியராகவும் இருந்தவர் அப்துஸ் ஸமது.
தொடர்புடைய செய்திகள்
அவர் தொடங்கிய ‘மணிச்சுடர்’ இதழ் இன்றளவும் தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் தலைவராகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் இருந்தார் அவர்.
கண்ணியமிகு காயிதெ மில்லத்தின் வழியில் பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்தவர்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர், ‘சிராஜுல் மில்லத்’ என்று மார்க்க அறிஞர்களால் பட்டம் சூட்டப்பட்ட அப்துஸ் ஸமது.
‘இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கத்தை தமிழ் முஸ்லிம்களின் முழக்க வரியாகவும் முகவரியாகவும் தந்தவர்.
1966 ஜூலை 17ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய அரங்கத்தில், காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் எம்.பி. தலைமையில் நடைபெற்ற திருக்குர்ஆன் மாநாட்டை தொடங்கிவைத்தவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ. அம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய பெருமை மிக்கவர் அப்துஸ் ஸமது. தமிழவேள் கோ.சாரங்கபாணி உட்பட பல சமயத் தலைவர்களும் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
திரு அப்துஸ் ஸமது, தமிழவேள் கோ. சாரங்கபாணியுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகூர் ஹனிஃபாவை அறியாதவர் இருக்க முடியாது. அவரது தனித்துவமான உரக்க கணீர் குரல், உலகப் புகழ்பெற்ற பாடகராக அவரை உயர்த்தியது.
அவர் பாடிய ‘தென்றல் காற்றே! கொஞ்சம் நில்லு!’ என்ற பாடல், ‘அன்னக்கிளி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதற்கு முன்பே இசை முரசுக்கு இசையமைத்த பாடலாகும்.
‘இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என நாகூர் ஹனிஃபா பாடிய பாடல், சமய வேறுபாடின்றி அனைவரும் விரும்பிக் கேட்கும் பாடலாகும்.
குன்றக்குடி அடிகளாரும், மதுரை ஆதீனகர்த்தரும் அவரது பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசியவை மிகப் பிரபலம்.
சிங்கப்பூர் கவிஞர் இ.எம்.நைனா எழுதிய ‘பேரோங்கும் சிங்கப்பூர் நாடு’, ஆசியான் கவிஞர் க.து.மு. இக்பால் எழுதிய ‘சின்னஞ்சிறு எழில் நாடு; சிந்தனையில் உயர்நாடு’ ஆகிய பாடல்கள், சிங்கப்பூரைப் பற்றி அவர் பாடிய மிகப் புகழ்பெற்ற பாடல்களாகும்.
1976ல் சிங்கப்பூர் தேசிய அரங்கில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.ராஜரத்தினம் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

