சிங்கப்பூரில் இருக்கும் வசதி குறைந்தவர்களுக்குக் கைகொடுக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அதிபர் சவால் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் ஆதரவில் திரட்டப்படும் நிதி, அதிபர் அலுவலகம் தேர்ந்தெடுக்கும் அறப்பயனாளிகளைச் சேரும். இதற்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியாகார்ப் நிறுவனம் ஆதரவு வழங்கி வருகிறது.
இந்நிலையில், அதிபர் சவால் இயக்கத்துக்கெனத் திரட்டப்படும் நன்கொடையைக் கூட்டும் விதமாக மீடியாகார்ப், நாடளாவிய விளம்பர இயக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் முதல்முறையாக 12 மணிநேரம் நீடிக்கும் பெருநடை நிகழ்வுக்கும் அது ஏற்பாடு செய்துள்ளது.
இத்திட்டங்கள் அதிபர் சவால் இயக்கத்தில் இடம்பெற்றுள்ள 65 பயனாளிகளுக்காகத் திரட்டப்படும் பொது நன்கொடைகளை அதிகரிக்கும் நோக்கில் அமைந்திடும்.
கடந்த மாதம் நாடளாவிய விளம்பர இயக்கம் தொடங்கியதிலிருந்து பொதுமக்கள் ஈடுபாட்டை ஈர்க்க, வெவ்வேறு கடைத்தொகுதிகளில் நன்கொடைத் திரட்டு இடம்பெற்று வருகிறது. அக்டோபர் 6ஆம் தேதி 12 மணிநேரப் பெருநடை நிகழ்வு தொடங்கும். இதில் கலந்துகொள்பவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். இரண்டு வெவ்வேறு பாதைகளில் மேற்கொள்ளப்படும் பெருநடை, 90 கிலோமீட்டருக்கும் கூடுதலாக இருக்கும்.
இதில் கலந்துகொள்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான மீடியாகார்ப் கலைஞர்களுடன் பெருநடையை மேற்கொள்ளலாம். அவர்களில் ஒருவர் ஒலி 96.8 வானொலிக் கலைஞர் முகம்மது ரஃபி.
அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பெருநடையை ‘த டெர்னிங் பாயிண்ட்’ மறுவாழ்வு இல்லத்திலிருந்து தொடக்கி வைப்பார். பின்னர், பெருநடை மீடியாகார்ப் வளாகத்தில் முடிவுறும்.
அதிபர் சவால் இயக்கத்தின் முக்கிய அங்கமாக மீடியாகார்ப்பின் ‘அதிபர் சவால்’ நிதித் திரட்டு நிகழ்ச்சி, மீண்டும் இவ்வாண்டு உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களுடன் இரவில் களை கட்டவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆடல்பாடலுடன் அரங்கேறவிருக்கும் ‘அதிபர் சவால்’ நிகழ்ச்சியில் வசந்தம் கலைஞர் நவீன் குணசேகரன், 26, தமிழ்ப் பாடல்கள் பாடவுள்ளார். ‘வசந்தம் ஸ்டார்’ பாட்டுப் போட்டியில் கடந்தாண்டு வாகைசூடிய நவீன், கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற உன்னத நோக்கத்துக்காக பாடல்கள் பாடுவது இதுவே முதல்முறை என்றார்.
“இந்த நிகழ்ச்சியின் நோக்கம், நன்கொடை திரட்டுவது. இதில் நான் கலந்துகொள்வது முதல் முறை என்றாலும் என் மூலமாக பிறர் நன்கொடை அளிக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு,” என்றார் நவீன்.
நன்கொடை அளிக்க விரும்புவோர் ‘mediacorp.sg/pc’ இணையத்தளம், அல்லது அதிபர் சவால் இரவு நிகழ்ச்சியின்போது திரையில் காட்டப்படும் கியூஆர் குறியீட்டை வருடலாம். நன்கொடைகள் இம்மாதம் 13ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.


