தியோச்சியூ, ஹொக்கியன், மலாய் மொழிகளை திருவாட்டி சுசீலா பெரியசாமி, 75, சரளமாகப் பேசுவதுண்டு. அவருக்கு மாண்டரின் மொழியும் கற்றுக்கொள்ள ஆர்வம் பிறந்தது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சிங்கப்பூர் காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அவருக்கு அண்மையில் மாண்டரின் கற்க வாய்ப்புக் கிடைத்தது.
சன்லவ் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் அடிப்படை மாண்டரின் மொழி வகுப்பில் சேர்ந்து தமது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் திருவாட்டி சுசீலா.
மாண்டரின் கற்றுக்கொள்வதுடன் வகுப்பில் உள்ள மற்றவர்களுடன் பழகுவது திருவாட்டி சுசீலாவுக்கு மகிழ்ச்சியான அனுபவம். மாண்டரினில் பேச தன்னம்பிக்கை இல்லாவிட்டாலும் அதைக் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார் திருவாட்டி சுசீலா.
“நான் தினமும் என் பேரனுடன் தொலைபேசி வழி மாண்டரினில் பேசப் பழகுகிறேன்,” என்றார் அவர்.
மாண்டரின் மொழியின் வெவ்வேறு உச்சரிப்புகள் அவருக்குச் சவாலாக இருக்கிறது. அதை சரியாகத் தெரிந்துகொள்ள மற்ற மூத்தோருடன் முடிந்தவரை வகுப்பில் அம்மொழியில் பேசிப் பழகுகிறார்.
முதியோர்கள் எளிய முறையில் மாண்டரினை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த உதவும் நோக்கத்துடன் அந்த வகுப்புத் தொடங்கப்பட்டதாகக் கூறினார் சன்லவ் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் மேலாளர் திரு ஆல்பர்ட் பெரேரா, 63.
நிலையத்தில் தற்போது 25 மூத்தோர் வாரம் ஒருமுறை அடிப்படை மாண்டரின் மொழி கற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த வகுப்பு நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளது. மூத்த சீனக் குடியிருப்பாளர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்,” என்று தெரிவித்தார் ஆல்பர்ட்.
ஹுவா சொங், ராஃபிள்ஸ் கல்விநிலையங்களைச் சேர்ந்த இளைய தொண்டூழியர்கள் மூத்தோருக்கு அடிப்படை மாண்டரின் கற்றுத் தருகின்றனர். மொழியைக் கற்பிக்க விளக்கக்காட்சிகள், நாடக உக்திகள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தற்போது வகுப்பு இரவு 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடந்து வருகிறது.
“வரும் எதிர்காலத்தில் மாண்டரின் மொழி வகுப்புகளுடன் அடிப்படை ஆங்கிலம், மலாய், இந்தோனீசிய மொழி வகுப்புகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு ஆல்பர்ட்.