மங்கோலியப் பயணம் மேற்கொண்ட ‘வயோதிக வாலிபர்கள்’

மங்கோலியப் பயணம் மேற்கொண்ட ‘வயோதிக வாலிபர்கள்’

2 mins read
78e158f4-5b0e-4b79-9f3f-68f8fc479ca9
மங்கோலியாவின் டர்ட்டல் பாறையில் சிங்கப்பூரைச் சேர்ந்த குழு பயணம். - படம்: அனில் சச்தேவா

மங்கோலியாவின் இயற்கை எழிலை முழுமையாகக் காண விரும்புவோர், மோட்டார் வாகனங்களையே நம்பியிருப்பது சாத்தியமன்று. கால்கடுக்கப் பயணம் செய்து வியர்த்துவிட வேண்டும்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் அனில் சச்தேவாவும் அவரது 12 நண்பர்களும் இதைத்தான் செய்துள்ளனர். பயணத்தில் இணைந்தவர்கள் 50, 60 வயது மதிக்கத்தக்கவர்கள்.

எங்குச் சென்றாலும் வாடகை உந்துகளையே நாடும் சுற்றுப்பயணிகளுக்கு இடையே இந்தக் குழுவினரைப் போன்ற சிலர், காடு மேடுகளில் நடந்தே செல்கின்றனர்.

நேப்பாளம், இந்தியா, பூட்டான், வியட்னாம், பாலி, தாஸ்மேனியா, ஹாங்காங், தைவான் ஆகிய இடங்களுக்கு இந்தக் குழுவினர் ஏற்கெனவே சென்று, இயற்கை எழிலை முழுமையாக அனுபவித்துள்ளனர்.

மங்கோலியாவின் பரபரப்பான தலைநகரமான உலான்பாட்டோரில் அவர்களுடைய ஐந்து நாள் பயணம் தொடங்கியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தன் மடாலயம், தேசிய வரலாற்று அருங்காட்சியகம், சுக்பாட்டோர் சதுக்கம் ஆகியவற்றுக்கு இந்தக் குழுவினர் சென்றனர்.

ஆயினும், மங்கோலியாவின் மயக்கும் அழகினைக் கண்டுகளிக்க விரும்புவோருக்கு, அத்தகைய எழில் அந்நாட்டின் நகர்ப்புறங்களுக்கு வெளியில்தான் உள்ளது.

‘யாக்’ எருமை மீது உல்லாசச் சவாரி.
‘யாக்’ எருமை மீது உல்லாசச் சவாரி. - படம்: அனில் சச்சிதேவா

மங்கோலிய நாடோடி நிகழ்ச்சி ஒன்றில் இயற்கையுடன் இயைந்து வாழும் ஆயர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை இந்தக் குழுவினர் பெற்றனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அடர்ந்த முடிகளைக் கொண்ட ‘யாக்’ எனப்படும் காட்டு எருமைகளை நேரில் கண்ட அனுபவம் மறக்க முடியாததாக அமைந்திருந்தது.

கடினமான சூழ்நிலைகளையும் தாங்கி வாழும் இந்த விலங்குகள், நாடோடிச் சமூகங்களால் பால், இறைச்சி, கம்பளி ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ‘யாக்’ விலங்குகள், பயணிகளுக்கு வாகனங்களாகவும் செயல்படுகின்றன.

அத்துடன், இரண்டு திமில்களைக் கொண்டு தனித்துவமாக விளங்கும் பாக்டிரியன் (Bactrian) ஒட்டகங்களில் பயணம் செய்த அனுபவம் தங்களைப் பழங்காலத்தில் இருந்தது போன்ற உணர்வைத் தந்ததாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான 72 வயது அனில் சச்சிதேவா கூறினார்.

இந்த விலங்குகள் நீண்டகாலமாக அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வருவதை அந்தப் பயணிகள் அறிந்துகொண்டனர்.

குதிரைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கால்நடைகள், ஒட்டகங்கள் ஆகிய ஐந்து விலங்குகளும் இன்றுவரை மங்கோலிய நாடோடி வாழ்க்கையின் மையப்புள்ளியாகத் திகழ்கின்றன.

டெரெல்ஜ் தேசியப் பூங்காவிலுள்ள ‘செங்கிஸ் கான்’ சிலை, டர்ட்டல் ராக் என்ற மரகதப் பச்சை நிறப் பள்ளத்தாக்கு, கிரானைட் பாறைகள் ஆகியவற்றைக் கண்டு அவர்கள் மெய்மறந்து நின்றனர். 

அயராபால் தியானக் கோயிலுக்கான (Ayarabal Meditation Temple) மலைப்பயணம் இந்தப் பயணத்தின் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்தது. 

மலையின் சரிவில் அமைந்திருந்த அந்தக் கோயில், சுற்றியுள்ள பகுதியின் பரந்த அழகிய காட்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுற்றியுள்ள மலைகள் ஆழமான அமைதியை வெளிப்படுத்திய வேளையில், தென்றல் காற்று மெல்ல வீசியது.

பயணத்தின் முத்தாய்ப்பாக, உலகின் மிகப்பழமையான பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றினுள் அமைந்துள்ள போக்ட் கான் மலைப்பயணம் அமைந்தது.

இனிய நினைவுகளை அள்ளித்தந்துள்ள இந்தப் பயணம், உலகில் இயற்கை எழில் இன்னும் நிறைந்திருப்பதை நினைவூட்டுகிறது என்று திரு அனில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்