ஆங்கர்வேல் சமூக மன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பொங்கல் விழா, குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்கும் விறுவிறுப்பான நிகழ்வாக அமைந்தது.
ஆங்கர்வேல் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்டனர்.
விழாவின் சிறப்புக்கூறாக, திறந்தவெளியில் மூன்று பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. ஏறத்தாழ 13 பெண்கள் இணைந்து பால், நீர், அரிசி, பருப்பு இட்டுப் பொங்கல் வைத்தனர்.
செங்காங் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகரான டாக்டர் லாம் பின் மின், பானையில் 11 கரண்டி அரிசியை இட்டு விழாவைச் சிறப்பித்தார்.
பொங்கல் பொங்கியதைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்கவும் பொய்க்கால் குதிரை ஆட்டத்துடனும் குடியிருப்பாளர்கள் பன்னோக்கு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆங்கர்வேல் குடியிருப்பாளர் ஒருவரே பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் ஈடுபட்டது நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு.
ஆங்கர்வேல் சமூக மன்றத் தலைவர் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் பாடல்களில் நடன அங்கங்கள் இடம்பெற்றன. பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் உரியடி அங்கமும் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
சிறாரை ஈர்க்கும் வகையில் பல விளையாட்டுக் கூடங்களும் இடம்பெற்றன.
ஆங்கர்வேல் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் கலவகுண்ட ஸ்ரீதர், இந்த ஆண்டு பொங்கலின் முக்கியத்துவம் என்ன என்பதை இளையர்களுக்கு எடுத்துரைப்பதே நோக்கம் எனக் கூறினார்.
“ஒவ்வொரு வழக்கத்திற்குப் பின்னாலும் உள்ள அறத்தை விளக்கினோம். எடுத்துக்காட்டாக, பொருள்களை எரிப்பதற்கான போகிப் பண்டிகை, வேண்டாத நினைவுகளைக் கைவிடுவதற்கான நேரம் என்பதைச் சொன்னோம்,” என்றார் முனைவர் ஸ்ரீதர்.

