வரலாற்றுக்கு முந்திய காலகட்டம், தீவிர வெப்பம் அல்லது குளிர் பருவநிலை கொண்ட வாழ்விடங்கள், நுண்ணிய சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆழ்கடல் போன்ற இதர சுற்றுச்சூழல் அமைப்புகளை வரும் மார்ச் 3ஆம் தேதிமுதல் அனைத்து வயதினரும் கண்டு மகிழலாம்.
தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய உட்புற, இயற்கை கருப்பொருள் கொண்ட பல்லூடகக் கண்காட்சியில் ஒன்றான ‘எக்ஸ்ப்ளோரியா’, மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் திறக்கப்படவுள்ளது.
10,000 சதுர மீட்டர் பரப்பளவில் ‘எக்ஸ்ப்ளோரியா’ கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன, இனங்கள் எவ்வாறு தகவமைத்துக்கொள்கின்றன, மனிதர்கள் கிரகத்தின் வாழ்க்கை சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றனர் என்பது பற்றிய புரிதலைப் பார்வையாளர்கள் இடையே ‘எக்ஸ்ப்ளோரியா’ ஆழப்படுத்தும் என்று தெரிவித்தார் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென்னட் நியோ.
இயற்கையில் உள்ள அனைத்தும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை பார்வையாளர்கள் உணர முடியும்.
பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த மறுசுழற்சி செய்யக்கூடிய ரேடியோ-அதிர்வெண் அடையாளக் கருவிகள் (Radio-Frequency Identification) அளிக்கப்படும். இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி கண்காட்சியில் ஊடாடும் காட்சிகளை ஆராயலாம்.
அத்துடன், அவர்களைப்போல் ஒரு மின்னிலக்க அவதாரத்தை உருவாக்கி, கண்காட்சியில் செல்லும் வழி பார்வையாளர்கள் வெகுமதிகளைப் பெறலாம்.
‘எக்ஸ்ப்ளோரியா’ பல்லூடகக் கண்காட்சி, வாரநாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வாரயிறுதி நாள்கள், பொது விடுமுறை நாள்களில் இரவு 9 மணி வரையிலும் செயல்படும்.
தொடர்புடைய செய்திகள்
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் கண்காட்சியை அணுகலாம்.
வழக்கமான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு $38. குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு $28.
நுழைவுச்சீட்டுகளை வாங்கவும் கூடுதல் தகவல்களுக்கும் https://www.mandai.com/en/exploria.html இணையப்பக்கத்தை நாடலாம்.

