சமூக நலனுக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மாணவர்கள்

சமூக நலனுக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மாணவர்கள்

படம்: கிறிஸ்டோ லியோன்

28 Sep 2026 - 5:30 am

3 mins read

செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்பாடுகளில் உடல், அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவுவது முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த குழு, தொடர்புகொள்வதில் சிரமம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ‘மெண்ட்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது.

பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான பதில்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வகையில் அந்தச் செயலியில் பல்வேறு தெரிவுகள் வழங்கப்படுகின்றன. அதன்மூலம் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடல்களில் எளிதாகப் பங்கேற்க முடியும்.

“மாணவர்களாக இருந்தும் எப்படி ஆக்கபூர்வமான வழிகள் மூலம் தேவைப்படுவோர்க்குக் கைகொடுக்கலாம் என்பதை இதன்மூலம் அறிந்துகொண்டேன்,” என்றார் தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 18 வயது செந்தில் நாதன். இவ்வாண்டு நடைபெற்ற ‘டெல் இன்னொவேட் ஃபெஸ்ட்’ (Dell InnovateFest) போட்டியின் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பிரிவில் ‘மெண்ட்’ செயலி மூன்றாம் பரிசை வென்றது.

‘டெல் இன்னொவேட் ஃபெஸ்ட்’ என்பது ஆண்டுதோறும் நடைபெறும் இடைநிலைக் கல்வி நிறுவனங்களுக்கிடையிலான ‘ஹேக்கத்தான்’ போட்டியாகும்.

செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற இறுதிச் சுற்றில் பத்துப் பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 52 மாணவர்கள் குழுவாகத் தங்கள் படைப்புகளைக் காட்டினர். அந்நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மாணவர்களின் படைப்புகள், சிங்கப்பூரின் ‘உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மைண்ட்ஸ், (MINDS) எஸ்பிடி (SPD) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டன.

மாணவர்கள் பராமரிப்பு நிலையங்களுக்குச் சென்று, பயனாளர்களுடன் கலந்துரையாடி, தாங்கள் உருவாக்கிய முன்மாதிரிகளை உண்மையான பயனாளர்களைக் கொண்டு சோதித்துப் பார்த்தனர்.

“மாற்றம் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் பணிபுரியும் முறையையும் நிறுவனங்கள் செயல்படும் முறையையும் அது மாற்றி வருகிறது. சிங்கப்பூரில் பெரிய உள்நாட்டுச் சந்தையோ இயற்கை வளங்களோ இல்லை. திறமை, படைப்பாற்றல் மூலம் அந்தச் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தால் நமக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம்,” என்றார் அமைச்சர் டோங்.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த அணி பக்கவாதம், பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பேச்சுத் திறனில் சிரமம் உள்ளவர்களுக்காக ‘மெண்ட்’ செயலியை  உருவாக்கியது.

‘மெண்ட்’ செயலி படங்கள் மூலமாக அதன் சுற்றுச்சூழலை பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு அதற்கு தகுந்த உரையாடல் தூண்டுதல்களை அளிக்கும்.

பயனாளர் விரும்பிய பதிலைத் தேர்ந்தெடுத்ததும் அதனை அவர்களின் சொந்தக் குரலில் செயலி ஒலிக்கச் செய்யும். இதன்மூலம் அவர்கள் உரையாடல்களில் எளிதாகப் பங்கேற்க முடியும்.

சைஃபுல்லா என்ற பயனாளர் தாம் அந்தச் செயலியைப் பயன்படுத்திப் பார்த்ததாகவும் அதன்மூலம் மற்றவர்களுடன் உரையாடுவது மிகவும் எளிதாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

“சைஃபுல்லா  எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைப் பார்த்தபோது, எங்களது அறிவைப் பயன்படுத்தி சமூகத்துக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது,” என்றார் செந்தில் நாதன்.

கோபிநாத் காவ்யாவும் (இடமிருந்து மூன்றாவது) சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது குழுவும்.
கோபிநாத் காவ்யாவும் (இடமிருந்து மூன்றாவது) சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது குழுவும். - படம்: கிறிஸ்டோ லியோன்

சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணி, போட்டியின் பல்கலைக்கழகப் பிரிவில் இரண்டாம் பரிசை வென்றது. 

‘புளூம் அப்’ செயலி, மைண்ட்ஸ் சிங்கப்பூரின் உடற்குறையுள்ளோருக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள பயனாளர்கள் அன்றாடப் பணிகளைத் தாங்களாகவே செய்ய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் பணியில் சிக்கல் ஏற்பட்டால், பயனாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் கருவியை படம் எடுத்து செயலியில் பதிவேற்றினால், அதற்கேற்ற வழிகாட்டுதலை அது காட்டும்.

அதன்மூலம் பயனாளர்கள் படிப்படியாக அன்றாடப் பணிகளைத் தாங்களாகவே செய்யக் கற்றுக்கொள்வதே அக்குழுவின் இலக்கு.

“அவர்கள் பணிகளைத் தாங்களாகவே செய்யக்கூடிய ஒரு முறையை உருவாக்க விரும்பினோம். இறுதியில், எங்கள் செயலியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே அவர்களுக்கு தேவைப்படக்கூடாது என்பதே எங்களது இலக்கு,” என்றார் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல், வடிவமைப்புத் துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 21 வயது கோபிநாத் காவ்யா.

குறிப்புச் சொற்கள்
மாணவர்கள்தொழில்நுட்பம்செயற்கை நுண்ணறிவுபோட்டி