வீட்டிலும் வேலையிடத்திலும் கைகொடுக்கும் செயற்கை நுண்ணறிவு

வீட்டிலும் வேலையிடத்திலும் கைகொடுக்கும் செயற்கை நுண்ணறிவு

படம்: வீணா சுப்பிரமணியம்

07 Nov 2026 - 5:20 am

2 mins read

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்குள்ளாக மனித வாழ்க்கையை மாற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் முதன்மையாகப் பேசப்படுவது செயற்கை நுண்ணறிவு.

சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான அது, இணையத்திலும் மெய்நிகர்ப் பயன்பாடுகளிலும் இயங்கி, தற்போது ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவாக உருவெடுத்திருக்கிறது.

மாணவர்களின் கல்விப் பயணத்தில் சேட் ஜிபிடி, ஜெமினை, கோ-பைலட் போன்ற பல செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் கற்கவும் அவர்களின் படைப்புகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.

இவ்வகையில் மகளை பிஎஸ்எல்இ தேர்வுக்குத் தயார் செய்வது, வேலையிடத்தில் செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெறுவது என இரண்டையும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சமாளித்ததாகக் கூறினார் பணியிலிருக்கும் தாயாரான வீணா சுப்பிரமணியம்.

திருவாட்டி வீணா, சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் இயக்குநர் குழு உறுப்பினராகவும், ஆங்கர் கிரீன் தொடக்கப்பள்ளியின் பள்ளி ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் என்டியுசியின் ‘இ2ஐ’ அமைப்பின் உதவி இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் வீட்டையும் வேலையையும் சரியாகக் கையாள முடியும் என்று நம்பினார் வீணா.

இவ்வாண்டு மகளின் பிஎஸ்எல்இ தேர்வுக்காக வீணா மூன்று மாதங்களுக்கு அரைநாள் வேலை செய்தார். அந்த நேரத்தில் வேலைப்பளுவைக் குறைக்க அவர் செயற்கை நுண்ணறிவைக் கையிலெடுத்தார்.

‘ஏஐ’ கருவியின் உதவியால் மின்னஞ்சல்களுக்கான பதில்கள் காலையில் அவர் அலுவலகம் செல்லுமுன்பே தயாராக இருந்தன. அதனால், பிற்பகல் வேளைகளில் தாம் இல்லாததால் ஏற்பட்ட வேலைப்பளு குறைந்தது என்றார் வீணா.

இவ்வாறு தமது நேரத்தைச் சரியாக நிர்வகித்து வேலையிடத்தில் நடைபெற்ற ஏஐ ஹேக்கத்தானிலும் 4 பேர் கொண்ட குழுவாக 17 குழுக்களுடன் போட்டியிட்டு வீணா வெற்றி பெற்றார்.

ஏஐ ஹேக்கத்தானில் வெற்றி பெற்ற தனது குழுவுடன் திருவாட்டி வீணா சுப்பிரமணியம்.
ஏஐ ஹேக்கத்தானில் வெற்றி பெற்ற தனது குழுவுடன் திருவாட்டி வீணா சுப்பிரமணியம். - படம்: வீணா சுப்பிரமணியம்

“செயற்கை நுண்ணறிவு ஒரு திறனை வளர்க்கும் கருவியாகவும் மனிதர்களை மேலும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக உருவாக்கவும் பயன்பட வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.

வீட்டில் பிற்பகல் வேளைகளில், மகளின் தேர்வுத் தயாரிப்புக்கு ஏஐ ஒரு சிறந்த மெய்நிகர் உதவியாளராகச் செயல்பட்டது என்றார் திருவாட்டி வீணா.

கணிதப் பாடத்திட்டம் கற்பிக்கும் முறைகள் மாறியுள்ளதால், சேட் ஜிபிடியின் உதவியை அவர் நாடினார்.

“கணிதத்தின் புதிய பாடத்திட்டம் என்னவென்றும், அதற்கான விடையை எவ்வாறு பெறுவது என்றும் நான் ஏஐயிடம் கேட்டேன். அது விடையை மட்டும் அளிக்காமல், அதைச் செய்யும் படிநிலைகளையும் வரைபடங்களையும் விரிவாக வழங்கியது,” என்றார் திருவாட்டி வீணா.

ஆனால், பிள்ளைகளைத் தொழில்நுட்பத்துடன் தனியாக விடக்கூடாது என்பதில் பெற்றோர் என்ற முறையில் அவர் உறுதியாக உள்ளார்.

“நான் எப்போதும் என் பிள்ளைகள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், பக்கத்தில் உட்கார்ந்து கண்காணிப்பேன். திரை நேரத்தைக் கட்டுப்படுத்தவும், தொழில்நுட்பத்திற்கு அடிமையாவதைத் தடுக்கவும் பெற்றோரின் கண்காணிப்பு மிகவும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்