தமிழ்வழிக் கல்வி ஆராய்ச்சி மாநாட்டில் ‘ஏஐ’ கற்பித்தல் பற்றி விளக்கம்

தமிழ்வழிக் கல்வி ஆராய்ச்சி மாநாட்டில் ‘ஏஐ’ கற்பித்தல் பற்றி விளக்கம்

2 mins read
56e7810b-aa74-4b11-a958-0991fbc6a147
தொழில்நுட்பப் பயிரலங்குகளைச் சிங்கப்பூரில் நடத்திவரும் திரு எஸ்.குணசேகரன், மலேசியாவின் சுல்தான் இத்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் உத்திகளைப் பற்றி உரையாற்றினார். - படம்: எஸ். குணசேகரன்

மலேசியாவின் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆறாவது தமிழ்வழிக் கல்வி ஆராய்ச்சி குறித்த அனைத்துலக மாநாட்டில் தமிழ்த்துறையில் செயற்கை நுண்ணறிவுப் புழக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தமிழ்வழிக் கல்வியில் உலகளாவிய மாற்றங்களின் தாக்கம் என்ற மையக் கருப்பொருளில் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் இம்மாதம் (மே) 9, 10ஆம் தேதிகளில் மாநாடு நடைபெற்றது.

பல்கலையின் மொழி, தகவல் தொடர்பியல் துறையும் இந்தியாவின் வாவூ வாஜீஹா மகளிர் கல்லூரியும் அதனை இணைந்து நடத்தின. மாநாட்டில் மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணிக் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் மொழியியல் ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு, புதிய ஊடகத் துறை ஆர்வலர் திரு எஸ்.குணசேகரன் அதில் பங்கேற்றார்.

‘தமிழ் வகுப்பறைகளில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம், கற்பித்தல் முறைகளைக் கையாளுதல்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

வீட்டில் பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் சூழலில் வளரும் தற்கால மாணவர்களின் தமிழ்ப்புழக்கத்தை அதிகரிக்கச் செயற்கை நுண்ணறிவு எந்த வகையில் உதவும் என்பது பற்றிய தமது யோசனைகளை அவர் விவரித்தார்.

மாணவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டும் வகையில், அவர்கள் வழங்கும் உள்ளீடுகளுக்கு ஏற்ப உடனுக்குடன் தமிழ்க் கதைகளையும் காட்சிகளையும் உருவாக்கும் தளங்கள் ஏராளமாக உள்ளன என்று அவர் கூறினார்.

தமிழ் வகுப்பறைகளில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம், கற்பித்தல் முறைகளைக் கையாளுதல் என்ற தலைப்பில் திரு குணசேகரன் உரையாற்றினார்.
தமிழ் வகுப்பறைகளில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம், கற்பித்தல் முறைகளைக் கையாளுதல் என்ற தலைப்பில் திரு குணசேகரன் உரையாற்றினார். - படம்: எஸ். குணசேகரன்

அதோடு, ஒரே வகுப்பறையில் இருக்கும் வெவ்வேறு மொழித்திறன் கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப மின்னிலக்கப் பாடங்களை வடிவமைக்கும் ‘வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல்’ நடைமுறை உத்திகளையும் திரு குணசேகரன் பகிர்ந்து கொண்டார்.

மேலும், சிங்கப்பூரின் உள்ளூர்ச் சூழலில் கலாசாரக் கதைகளை விளையாட்டு வழிக் கற்றலோடு இணைத்து ஆய்வொன்று நடத்தப்பட்டது. அதன் தொடர்பிலான தரவுகளை அவர் மாநாட்டில் விளக்கினார்.

மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புச் சவால்கள், சிங்கப்பூரின் தாய்மொழிப் பாடத்திட்ட அமைப்பிற்கும் இடையே உள்ள கற்பித்தல் முறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுமாநாடுஆராய்ச்சிஊடகம்