மரினா பே சேண்ட்சை வலம்வரும் திருவள்ளுவர், கைக்கடிகாரத்தின் உதவியுடன் காலத்தைக் கடக்கும் சிறுவன், நவீனத்தில் உழன்று, பின் மனிதத்தை உணரும் விஞ்ஞானி என மாணவர்களின் கற்பனைக் கதைகளுக்கு உயிரூட்டியது செயற்கை நுண்ணறிவு.
மொழியாற்றல், மொழி சொல்லும் நீதி ஆகியவற்றுடன் மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற காணொளி உருவாக்கும் போட்டியின் இறுதிச் சுற்றில் மாணவர்கள் படைத்த காணொளிகள் நடுவர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர்க் குழு, ‘தமிழில் ஈடுபாடு, தலையாயக் கடப்பாடு’ எனும் தலைப்பில் நடத்திய போட்டிகளின் இறுதிச் சுற்று உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடைபெற்றது.
கொடுக்கப்பட்ட கருப்பொருளையொட்டி கதை ஒன்றினை உருவாக்கி, அக்கதையைச் செயற்கை நுண்ணறிவு இணையத்தளங்களின் உதவியுடன் காணொளிகளாக்கிப் படைக்கவேண்டும். போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பாக பிப்ரவரி மாதம், மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான பயிலரங்கு நடைபெற்றது. இதில் 250 மாணவர்கள் பங்கேற்றனர்.
பின்னர், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. கீழ் உயர்நிலை மாணவர்கள், ஆத்திசூடி, நீதிக் கதைகள், பழமொழிகள் ஆகிய கருப்பொருள்களை ஒட்டியும் மேல் உயர்நிலை மாணவர்கள் திருக்குறளை ஒட்டியும் கதைகள் உருவாக்க வேண்டும்.
இருபிரிவுகளிலும் மொத்தம் 54 குழுக்கள் போட்டியில் பங்கேற்றன. அவற்றிலிருந்து, சிறந்த பத்துப் படைப்புகள் இறுதிச்சுற்றில் மேடையேறின.
கீழ் உயர்நிலைப் பிரிவில் சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, பெரமநாதன் விகாஸ்னி, தேவா ஸ்ரீ சஷ்வின், விஷக் ஓம் கார்த்திகேசு ஆகியோர் முதல் பரிசினை வென்றனர்.
மேல் உயர்நிலைப் பிரிவில், தெமாசெக் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த பிரத்யுன் அசோக்ராஜ், தமிழழகன் குருபரன், ஜெயபாலன் நரேன் ராம் ஆகியோர் வெற்றிக்கோப்பைகளைத் தட்டிச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிகழ்ச்சியில், தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைப் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“மாறிவரும் காலத்திற்கேற்ப தொழில்நுட்பத்தை இணைத்தால், தமிழை அதிகம் பயன்படுத்துவார்கள் என்பது இதன் நோக்கம்,” என்றார் குழுவின் முன்னாள் பொருளாளர் முத்தழகு மெய்யப்பன், 77.
“இப்போட்டியின் மூலம் நான் பல செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன். என்னைப்போல் மாணவர்கள் பலரும் இது போன்ற போட்டிகளில் பங்கெடுத்து தமிழையும் செயற்கை நுண்ணறிவையும் பிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்,” என்றார் தெமாசெக் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த ஜெயபாலன் நரேன் ராம், 16.
“இது போன்ற போட்டிகள் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் உள்ள கதாபத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள நல்ல தளமாக உள்ளது,” என்று கூறினார் மாணவர்களை வழிநடத்திய சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் பாலசுப்ரமணியம் மோகனவள்ளி.
ஊட்ரம் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் சுப்பு சுபா சக்திதேவி, “மனனப் போட்டிகளைப் போலின்றி, இது போன்ற மாறுபட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கின்றன”, என்று கூறினார்.
இப்போட்டியின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளரும், பயிலரங்கை வழிநடத்தியவருமான முனைவர் கிருஷ்ணமூர்த்தி பாஸ்கரன், “மாணவர்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக செயலாற்றியுள்ளனர்,” என்று பெருமையோடு குறிப்பிட்டார்.
அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர்க் குழு தொடங்கியதிலிருந்து தமிழ்மொழி மாதத்தில் மாணவர்களுக்கான பயிலரங்குகளையும் அதனைத் தொடர்ந்து போட்டிகளையும் நடத்திவருவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

