ஏஐ கருவிகளைத் திறம்படப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட தமிழாசிரியர்கள்

எஸ்பிஎச் மீடியா ஏற்பாடு செய்த பயிலரங்கில் 100 பேர் பங்கேற்பு

ஏஐ கருவிகளைத் திறம்படப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட தமிழாசிரியர்கள்

படம்: செய்யது இப்ராகிம்

01 Nov 2026 - 7:46 am

2 mins read

தமிழாசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கான தமிழ்ப் பாடங்களைத் தயாரிக்கும்போது செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைத் திறம்படப் பயன்படுத்திக்கொள்வதற்கு உதவும் நோக்கில் எஸ்பிஎச் மீடியா ஒரு செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

எஸ்பிஎச் மீடியா கலையரங்கில் அக்டோபர் 22ஆம் தேதி இடம்பெற்ற அப்பயிலரங்கை ‘ஸ்டோரிலேப் அகாடமி’ நிறுவனர் சஞ்சய் முத்துகுமரன், 25, வழிநடத்தினார். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 100 தமிழாசிரியர்கள் அதில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

    

சிங்கப்பூர் முழுவதுமிருந்து ஏறக்குறைய 100 தமிழாசிரியர்கள்  பயிலரங்கில் கலந்துகொண்டனர்.   
சிங்கப்பூர் முழுவதுமிருந்து ஏறக்குறைய 100 தமிழாசிரியர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.    - படம்: செய்யது இப்ராகிம்

மாணவர்களைப் பாடங்களில் மேலும் ஈடுபாடுகொள்ளச் செய்வதற்குச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள தமக்கு ஆர்வம் இருந்ததாகச் சொன்னார் ஆண்டர்சன் - சிராங்கூன் தொடக்கக் கல்லூரி தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ, 40.

அத்திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள பயிலரங்கில் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தியபோது, குறிப்பாகத் தமிழில் பல எழுத்துப்பிழைகளும் ஏற்படுவதாகக் கூறினார் சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் பானு ப்ரியா பாபு.

“அத்தகைய பிழைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதையும், மாணவர்களுக்கான பயிற்சிகளை எவ்வாறு எளிமையாக உருவாக்குவது என்பதையும் பயிலரங்கில் கொடுக்கப்பட்ட பயிற்சிகள்மூலம் கற்றுக்கொண்டேன். இந்தப் பயிலரங்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது,” என்று அவர் கூறினார்.

‘ஸ்டோரிலேப் அகாடமி’ நிறுவனர் சஞ்சய் முத்துகுமரன் பயிலரங்கை வழிநடத்தினார்.
‘ஸ்டோரிலேப் அகாடமி’ நிறுவனர் சஞ்சய் முத்துகுமரன் பயிலரங்கை வழிநடத்தினார். - படங்கள்: செய்யது இப்ராகிம்

“ஏஐ பயிலரங்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிங்கப்பூர் முழுவதுமிருந்தும் கிட்டத்தட்ட 100 தமிழாசிரியர்கள் இந்தப் பயிலரங்கில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதற்குமுன் இருமுறை இந்தப் பயிலரங்கை நடத்தியுள்ளோம். அதனைப் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பயிலரங்கில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மூலமாக மேலும் பல ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள முடியும்,” என்று தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் கூறினார்.

பல்வேறு வகையான செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஆயினும், அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவதற்குச் சில அடிப்படைத் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.

அவ்வகையில், “ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பிழைகளைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளையும், தங்களுக்குத் தேவையான முடிவுகளை ஏஐ கருவிகள்மூலம் எவ்வாறு துல்லியமாகப் பெறுவது என்பதையும் ஆசிரியர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். இதன்மூலம் மாணவர்களுக்குப் பயிற்சித்தாள்கள், புதிர்கள் போன்ற பாடப்பயிற்சிகளைத் துல்லியமாக உருவாக்கலாம்,” என்று திரு சஞ்சய் கூறினார்.

செயற்கை நுண்ணறிவைத் திறம்படப் பயன்படுத்தும் வழிமுறைகளைத் தமிழாசிரியர்கள் கற்றுக்கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவைத் திறம்படப் பயன்படுத்தும் வழிமுறைகளைத் தமிழாசிரியர்கள் கற்றுக்கொண்டனர். - படம்: செய்யது இப்ராகிம்
குறிப்புச் சொற்கள்