வாழ்நாள் கற்றல்வழி முன்னேறும் தமிழ் ஆர்வலர்

வாழ்நாள் கற்றல்வழி முன்னேறும் தமிழ் ஆர்வலர்

2 mins read
56d730c2-731f-4b00-a34c-34e7884ae535
வாழ்நாள் கற்றல்வழி மின்னிலக்க, கணினியல் துறைகளில் தடம்பதித்து வருகிறார் சி.குணசேகரன். - படம்: சி.குணசேகரன்
Google News Preferred Icon

பலரும் 60 வயதிற்கும் மேல் பணி ஓய்வைப் பற்றிச் சிந்தித்துக் கற்றலிலிருந்து விலகும் வேளையில், தொடர்ந்து வாழ்நாள் கற்றலில் ஈடுபட்டு செயற்கை நுண்ணறிவு, கணினியல், மின்னிலக்கம் ஆகிய துறைகளில் தடம்பதித்து வருகிறார் 62 வயது திரு சி.குணசேகரன்.

இளமையில் ஊடகத் துறையில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் தொடங்கிய பயணத்தைக் காலப்போக்கில் வேறு திசையில் முன்னெடுக்க முடிவெடுத்ததாக இவர் பகிர்ந்துகொண்டார்.

“கலைத் துறையில் நல்ல அனுபவங்கள், நினைவுகள், மனிதர்கள் ஆகியவற்றைச் சம்பாதித்த பின்னர், வாழ்வாதாரத்திற்கான பணத்தையும் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது,” என்றார் குணசேகரன்.

அதனால் நிலையான வாழ்வியலைத் தேடி, தொழில்நுட்பத் துறையில் காலடி எடுத்துவைத்தார் இவர்.

“2000ஆம் ஆண்டுகளில் இப்போது இருப்பதுபோல் மின்னிலக்கமும் தொழில்நுட்பமும் பரவலாக இல்லை. அக்கட்டத்தில் அரசாங்கம் பலரையும் கணினியல் கற்க ஊக்குவித்து, உதவியும் வழங்கியது.

“அத்துறைகளில் அக்கட்டத்தில் போட்டித்தன்மை குறைவாக இருப்பதை உணர்ந்து அரசாங்கம் ஏற்பாடு செய்த பயிலரங்குகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றேன்,” என்றார் குணசேகரன்.

கணினியலிலும் செயற்கை நுண்ணறிவிலும் தமிழை ஓர் அங்கமாக்குவதில் இவர் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

தாம் பங்கேற்கும் பயிலரங்குகளிலும் பாடங்களிலும் வழங்கப்படும் பயிற்சிகளில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது, உட்புகுத்துவது எனப் பல்வேறு வழிகளில் இவர் அம்முயற்சியைக் கையாண்டு வருகிறார்.

“செயற்கை நுண்ணறிவிலும் கணினியலிலும் தமிழ் மொழிக்கான இடமும் வளர்ச்சியும் குறைவாக இருந்து வருகிறது. இந்தப்போக்கை மாற்ற தமிழ்ச் சமூகத்தினர் ஒன்றிணைந்து இத்திறன்களைக் கற்பது அவசியம்,” என்று குணசேகரன் சொன்னார்.

எதிர்காலம் செயற்கை நுண்ணறிவை நோக்கிச் செல்லும் வேளையில் தமிழ் மொழியும் அதற்கேற்றவாறு வளர்வது அவசியமென இவர் கருதுகிறார்.

அத்தகைய திறன்களைக் கற்பதன்வழி தமிழர்களுக்குப் பல்வேறு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் வாய்ப்புள்ளதென்று இவர் நம்புகிறார்.

இவரின் பிக்சிபிட் நிறுவனம். எதிர்காலத்தில் பிரபலமடையக்கூடிய அணியும் சாதனங்களான மின்னிலக்கக் கண்ணாடிகள் போன்றவற்றில் தமிழை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக குணசேகரன் பகிர்ந்துகொண்டார்.

இயந்திரவியலில் தமிழை அறிமுகப்படுத்தவும் சிங்கப்பூரில் தமிழ்ச் செயற்கை நுண்ணறிவு மன்றம் ஒன்றைத் தோற்றுவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இவர் கூறினார்.

“என் நிறுவனத்தின் சமூக முயற்சிகளுக்கு அரசாங்கம் மானியங்கள்வழி சிறந்த பக்கபலமாக இருந்து வருகிறது. அதே போல, அனைவரும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சிறப்பாக இருக்கும்,” என்றார் குணசேகரன்.

தமிழ்ச் சமூகத்தினரைத் தொடர்ந்து வாழ்நாள் கற்றலில் ஈடுபட இவர் ஊக்குவிக்கிறார். தொடர்கல்வி மனத்தையும் மூளையையும் சீராக வைத்திருக்க உதவுமென ஆணித்தரமாக நம்புகிறார் திரு குணசேகரன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்