சிங்கப்பூரின் எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு, இவ்வாண்டின் சிங்கப்பூர் கலை வாரத்தில் ‘பேஷன்ஆர்ட்ஸ்’ கலைத்திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள கலைப்படைப்பு ஒன்று நாட்டின் வரலாற்றுக்கும் அதை வலுப்படுத்தும் சமூக உணர்விற்கும் ஒரு தனித்துவமான அர்ப்பணிப்பை வழங்குகிறது.
‘தேசிய தொல்பொருள்கள் அணிவகுப்பு’ (National Antiquities Parade) என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கலைப்படைப்பு கண்காட்சி, மவுண்ட்பேட்டன் சமூகக் கலை, கலாசார மன்றங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. இது, 1973 முதல் 2006 வரை நடைபெற்ற தேசிய தின அணிவகுப்புகளில் மவுண்ட்பேட்டன் தொகுதியின் பங்கை நினைவூட்டும் ஒரு நினைவுச்சின்னமாக விளங்கும்.
மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் கண்காணிப்பில் காலாங் தேசிய அரங்கில் 2006ல் நடைபெற்ற கடைசி தேசிய தின அணிவகுப்பை நினைவுகூரும் வகையில், இந்தக் கலைப்படைப்பில் மரியாதை அணிவகுப்பு முதல் பெண் சாரணர் படை வரை வெவ்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கைவினைக் களிமண் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
தொழில்முறை கலைஞர்களின் வழிகாட்டுதலுடன் இச்சிலைகள், எட்டு முதல் 60 வயது வரையிலான மவுண்ட்பேட்டன் தொகுதி குடியிருப்பாளர்களாலும் பல்வேறு மவுண்ட்பேட்டன் தொகுதி சங்கங்களின் உறுப்பினர்களாலும் உருவாக்கப்பட்டன.
“இன்றைய கண்ணோட்டத்தில், தேசிய ஒற்றுமையை வளர்ப்பதில் தேசிய தினத்தின் பங்கை எப்படி தொல்பொருள் அகழாய்வு முறையில் சித்திரிக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்தோம்,” என்று இந்த கலைப்படைப்பின் முதன்மைக் கலைஞரான ரைஹான் ஹருன் கூறினார்.
குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு சிலையையும் எவ்வாறு கவனத்துடன் வடிவமைத்தார்கள் என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்தப் படைப்பில் சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“சிற்பங்களை உருவாக்க நாங்கள் நடத்திய பட்டறைகளில் கலந்துகொண்ட மவுண்ட்பேட்டன் குடியிருப்பாளர்களில் பலர், சிற்பக் கலையில் முதல் முறையாக ஈடுபட்டிருந்ததால் அடிப்படையான கலைப்பொருள்களில் ஒன்றான களிமண்ணை உபயோகிக்க நாங்கள் முடிவு செய்தோம்.
“களிமண்ணை வடிவமைக்க எளிய கருவிகளையோ விரல்களையோ பயன்படுத்தினால் போதும்,” என்று கலைப் பட்டறைகளை வழிநடத்திய கலைஞர்களில் ஒருவரான இந்திய-பிரிட்டிஷ் கலைஞரும் கலைப்படைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பூனம் சக்சேனா-டெய்லர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் பட்டறையில் பல வயதினரும் இனத்தவரும் கலைத் திறனுள்ளவர்களும் பங்கேற்றனர். நமது தேசத்தின் வரலாற்றில் மவுண்ட்பேட்டன் தொகுதி எவ்வளவு முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதையும் எங்களால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது,” என்றார் வங்கித் துறையில் பணிபுரியும் மவுண்ட்பேட்டன் குடியிருப்பாளர் ருக்மணி நாகநாதன், 52.
குறிப்பாக, தம்பதியர் ஒருவர் அவர்களின் பள்ளி, கல்லூரிக் காலத்தில் காலாங் தேசிய அரங்கில் தேசிய தின அணிவகுப்பை நேரடியாகப் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்தது, தனக்கு சுவாரசியமாக இருந்ததாகச் சொன்னார்.
இந்த அனுபவத்தால் தனது தேசிய உணர்வு மேலும் ஆழமானதாகவும் அந்தக் காலத்தில் நடந்த தேசிய தின அணிவகுப்புக்கு மீண்டும் உயிர் கொடுப்பதில் பங்காற்றியதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார்.
செதுக்கப்பட்ட களிமண் சிலைகளுக்கு வண்ணம் தீட்ட, ஜனவரி 17 முதல் 26 வரை சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்திலுள்ள வருகையாளர் நிலையத்திற்குப் பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். தனித்துவமான இந்தக் கலைப்படைப்பில் சிங்கப்பூர் சமூகத்தினர் தங்கள் தனித்துவமான முத்திரையைப் பதிப்பதற்கான வாய்ப்பாக இது அமையும் என நம்பப்படுகிறது.
தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.