சேலை உடுத்தக் கற்றுக்கொள்ள ‘அவள் இடம்’ சென்ற இளையர்கள்

சேலை உடுத்தக் கற்றுக்கொள்ள ‘அவள் இடம்’ சென்ற இளையர்கள்

படம்: அவள் இடம்

08 Nov 2026 - 7:23 am

2 mins read

தற்போதைய அவசர உலகில், எளிதில் உடுத்தும் வகையில் முன்னரே மடிக்கப்பட்ட  ‘ரெடிமேட்’ சேலைகளை இளம்பெண்கள் பலரும் நாடுகின்றனர். 

வழக்கமான சேலையை அணிய சிலருக்குப் பல மணி நேரம் ஆகிறது. முன்னரே மடிக்கப்பட்ட சேலை மடிப்புகளைக் கொண்ட ‘ரெடிமேட்’ சேலைகளைப் பாவாடையைப்போல சில நிமிடங்களில் அணிய முடியும். 

இந்நிலையில், வசதிக்காக வழக்கத்தை மறந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தமிழ்ப் பெண்கள், பிறர் உதவியின்றிச் சேலை கட்டும் கலையைக் கற்றுக்கொள்ளவும் ‘அவள் இடம்’ அமைப்பு அண்மையில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்கள், தமிழ் வகுப்பு, இணைப்பாட நடவடிக்கை ஆகியவற்றின் வழியான பண்பாட்டுத் தொடர்பு, வேலை செய்யும்போது நலிவதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான 26 வயது ஜனனி நடராஜன் கூறினார்.

“அந்தப் பிணைப்பு வேலை வாழ்க்கைக்குள் நுழைந்ததும் விட்டுப்போகிறது. அந்த இடைவெளியைக் குறைத்து, ஒரே மாதிரியான பண்பாட்டுப் பின்னணி கொண்ட இளம்பெண்கள் சந்தித்து நட்பை வளர்க்கவும் பாதுகாப்பான சூழலில் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளவும் தளம் அமைத்துத் தருவதே எங்களது முக்கிய நோக்கம்,” என்று அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான திருவாட்டி ஜனனி விளக்கினார்.

பயிலரங்கில் 29 வயது ஒப்பனைக் கலைஞர் மைதிலி எஸ் கே இளையர்களுக்குச் சேலை கட்டும் எளிய உத்திகளைக் கற்பித்தார்.

இளவயதில் மலிவான கட்டணத்தில் சேலை கட்டக் கற்றுக்கொள்வதில் தாம் எதிர்கொண்ட சிரமங்களை அவர் நினைவுகூர்ந்தார்.

அனைவரையும் நட்பார்ந்த முறையில் ஈடுபடுத்தி சேலை உடுத்தும் அனுபவத்தை மகிழ்ச்சியானதாக்குவதே தமது நோக்கம் என்று திருவாட்டி மைதிலி கூறினார்.

“சேலை கட்டும் கலையைக் கற்றுக்கொண்டதுடன், புதிய நட்புகளையும் பண்பாட்டுப் பிணைப்பையும் ஏற்படுத்திக்கொண்டது பெருமகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் பங்கேற்பாளர்களில் ஒருவரான திரெஷபிரியா சிதம்பரம், 22.

“என்னைப் போன்ற சக இளம்பெண்களோடு ஒன்றாக அமர்ந்து, ஒருவருக்கொருவர் உதவி, நேர்த்தியாகச் சேலை கட்டக் கற்றுக்கொண்டது தன்னம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்தது,” என்று ஷாலினி நடராஜன், 23, கூறினார்.

குறிப்புச் சொற்கள்