தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களின் சாதனைகளுக்கு அங்கீகாரம்

2 mins read
f297df8f-b057-4c8f-bf1a-b2f838cd9858
ஒட்டுமொத்தமாக சிறந்து விளங்கிய மாணவர் விருதுபெறும் ஆஷிஷ் சிஜு. - படம்: சுந்தர நடராஜ்

கல்விப் பயணம் கரடுமுரடாக இருந்தாலும் அதை மீள்திறனுடன் எதிர்கொண்டு வெற்றிகாண வேண்டும் என்பது 17 வயதாகும் ஆஷிஷ் சிஜுவின் தாரக மந்திரம்.

தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெறாததால் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) துணைப்பாட வகுப்புகளை இவர் நாடினார்.

சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும், நண்பர்களின் ஊக்கத்தாலும், பெற்றோரின் மாறாத ஆதரவால் ஆஷிஷ் சவால்களை எதிர்கொண்டு சாதித்தார்.

சென்ற ஆண்டு சாதாரண நிலைத் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற ஆஷிஷுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) விருது வழங்கப்பட்டது.

கடந்த 22 ஆண்டுகளாக சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யூரேசியர் சங்கம், சிண்டா, மெண்டாக்கி ஆகிய நான்கு சுயஉதவி அமைப்புகள் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி வருகின்றன.

தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு, சாதாரண நிலை, வழக்கநிலைத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிபெற்ற சீன, மலாய், இந்திய, யூரேசிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தலா $150ம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தலா $200ம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக சிறந்து விளங்கிய 16 மாணவர்கள் உட்பட மொத்தம் 1,717 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக சிறந்து விளங்கிய 16 மாணவர்களில் ஆஷிஷும் ஒருவர்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இடம்பெற்ற விழாவில் கல்வி துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“நான்கு அமைப்புகளும் இணைந்து 22 ஆண்டுகளாக அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த விருதுகளை வழங்கி வருவது பாராட்டுக்குரிய ஒன்று. பெற்றோர் அவர்கள் பிள்ளைகளின் கல்வி சாதனைக்கு அப்பாற்பட்டு அவர்களின் நற்குணங்களையும் மனநலனையும் பேண ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று திருவாட்டி லாவ் தெரிவித்தார்.

சிண்டாவின் துணைப்பாட வகுப்பிற்குச் சென்று தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வில் சிறந்த தேர்ச்சி மாணவி விஜயகுமார் வாசுமித்ரா, 13, விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தார்.

தொடக்கநிலை 1ல் கணிதப் பாடத்தில் சிறப்பாகச் செய்யாவிட்டாலும் அவர், தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் அப்பாடத்தில் சிறப்பாகச் செய்திருந்தார்.

“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறு பிள்ளையாக இருந்தபோது நான் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இப்போது வாழ்க்கையில் சாதித்து பிறருக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன்,” என்றார் வாசுமித்ரா.

விஜயகுமார் வாசுமித்ரா.
விஜயகுமார் வாசுமித்ரா. - படம்: சுந்தர நடராஜ்

“ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது விழாவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய மாணவர்கள் தேசிய தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெறுகின்றனர் எனும் உத்தரவாதம் கிடைக்கிறது. சிண்டாவின் துணைப்பாட வகுப்புகளுக்கு வந்த பிறகு அவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதால் இது துணைப்பாட வகுப்புகளின் தரத்தையும் வெளிக்காட்டுகிறது,” என்று கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.

நான்கு சுயஉதவி அமைப்புகளும் சேர்ந்து துணைப்பாட வகுப்புகளை வெற்றிகரமாக நடத்துவதாகக் குறிப்பிட்ட திரு அன்பரசு, இதர அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்போது சிங்கப்பூரின் தனித்துவமும் வெளிப்படுவதாகச் சொன்னார்.

தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வுப் பிரிவில் விருது வாங்கும் மற்றொரு மாணவர் ஷேலன் கேஷ்வர் சண்முகம், 13.
தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வுப் பிரிவில் விருது வாங்கும் மற்றொரு மாணவர் ஷேலன் கேஷ்வர் சண்முகம், 13. - படம்: சுந்தர நடராஜ்
குறிப்புச் சொற்கள்