பணிப்பெண்-முதலாளி நல்லுறவுக்கு விருது

பணிப்பெண்-முதலாளி நல்லுறவுக்கு விருது

3 mins read
7251ffd1-6ca9-4bd1-86f2-4bcab7381cc7
கடந்த 27 ஆண்டுகளாகத் திருவாட்டி நா. நாச்சம்மையின் வீட்டில் (இடது) பணியாற்றி வருகிறார் 50 வயது இல்லப் பணிப்பெண் குமாரி மீனா. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

சிங்கப்பூர் வீடு ஒன்றில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சமையல், குழந்தைகளை பார்த்துக்கொள்வது, வீட்டைப் பராமரிப்பது எனச் சளைக்காமல் உழைத்து, அக்குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே மாறிவிட்டார் ‘மீனா’ என்று அழைக்கப்படும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் சின்னகருப்பன் கணபதி.

இந்தியாவின் காரைக்குடிக்கு அருகிலுள்ள வைரவன்பட்டியைச் சேர்ந்த இவர், 1998ஆம் ஆண்டு தமது 22வது வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். தந்தையின் திடீர் மறைவால் குடும்பம் வறுமையில் வாடிய நிலையில், வேலைக்காக வெளிநாடு வந்த அவருக்கு இந்த வேலை ஒரு வாழ்நாள் உறவாக மாறிப்போனது.

தமது முதல் முதலாளியான திருவாட்டி நா. நாச்சம்மையின் வீட்டில் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார் குமாரி மீனா. வேலைப்பளுவால் தவித்த திருவாட்டி நாச்சம்மைக்கும் அவரது கணவர்க்கும் துணையாக அவர்களது இரண்டு மகள்களையும், குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவர்களாகும்வரை கண்ணும் கருத்துமாக குமாரி மீனா பார்த்துக்கொண்டார்.

சிங்கப்பூர் வேலை நியமன முகவர்கள் சங்கத்தின் (AEAS) வருடாந்தர சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற்றது. அதில் 21வது ‘சிறந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண், முதலாளிக்கான விருதுகள்’ வழங்கப்பட்டன.

அந்த விழாவில், ‘நம்பிக்கை, மரியாதை, வெளிப்படையான தொடர்புக்கான விருதைப்’ (நீண்டகாலச் சேவை விருது) பெற்ற 10 முதலாளி-பணிப்பெண் இணைகளில் குமாரி மீனாவும் திருவாட்டி நாச்சம்மையும் அடங்குவர். குமாரி மீனா ஆண்டின் சிறந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் என்ற விருதில் ‘மெரிட்’ பிரிவிலும் விருது பெற்றார்.

கடந்த 27 ஆண்டுகளாகத் திருவாட்டி நா. நாச்சம்மையின் (இடது) வீட்டில் பணியாற்றி வருகிறார் 50 வயது இல்லப் பணிப்பெண் குமாரி மீனா.
கடந்த 27 ஆண்டுகளாகத் திருவாட்டி நா. நாச்சம்மையின் (இடது) வீட்டில் பணியாற்றி வருகிறார் 50 வயது இல்லப் பணிப்பெண் குமாரி மீனா. - படம்: சாவ்பாவ்

“இப்படி எனக்கு விருதுகள் கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை,” என்று தற்போது 50 வயதாகும் குமாரி மீனா நெகிழ்ச்சியுடன் கூறினார். “பெற்றோர் என்னுடன் இல்லை என்றாலும், அந்தக் குறையை நான் ஒருபோதும் பெரிதாக உணர்ந்ததில்லை. ஏனென்றால், இந்தக் குடும்பத்தினர் என்னைச் சொந்தக் குடும்ப உறுப்பினர் போலவே பார்த்துக்கொண்டனர்,” என்றார் அவர்.

குமாரி மீனா முதன்முதலில் சிங்கப்பூர் வந்தபோது, திருவாட்டி நாச்சம்மையின் மூத்த மகளுக்கு வயது மூன்று. சிறிது காலம் கழித்து இளைய மகள் பிறந்தார்.

இன்று, மூத்த மகளுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. “அவர்கள் வளர்ந்து சொந்தமாக நிற்பதைப் பார்ப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது,” என்றார் குமாரி மீனா. தமது குடும்பத்தின் நிதி நெருக்கடியைக் குறைத்து அவர்களுக்கு உதவவே தாம் இங்கு வந்ததாகவும் ஆனால், இதுவே தமது இரண்டாவது வீடாக மாறும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பல ஆண்டுகளாக நிலவும் புரிந்துணர்வால் தங்களுக்கு இடையிலான உறவு வலுவடைந்ததாக 56 வயது திருவாட்டி நாச்சம்மை தெரிவித்தார்.

“நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி, பழகி, விட்டுக்கொடுத்துச் செல்லக் கற்றுக்கொண்டோம். காலப்போக்கில், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். இது முதலாளி-பணிப்பெண் உறவு என்பதையும் தாண்டிய ஓர் உறவு,” என்றார் அவர்.

இந்த விருதுகள் தனிப்பட்ட அர்ப்பணிப்பையும் தாண்டி பலவற்றை அங்கீகரிப்பதாக, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“ஓர் உறவின் மையமாக நம்பிக்கை இருக்கும்போது, அது வெறும் வேலை சார்ந்த ஒப்பந்தம் என்பதைத் தாண்டி, நமது வாழ்க்கையை வளப்படுத்தி, சமூகத்தை மேலும் ஒன்றிணைக்கும் உண்மையான உறவாக வளர்கிறது,” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் வெறும் உதவியாளர்களாக மட்டும் பார்க்காமல், குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாகக் கருத வேண்டும் என்று முதலாளிகளை அவர் வலியுறுத்தினார்.

பொறுப்பான வேலைவாய்ப்பு உறவுகள் வெறும் விதிமுறைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று சங்கத்தின் தலைவர் கே. ஜெயபிரேமா தமது உரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் வேலை நியமன முகவர்கள் சங்கத் தலைவர் கே. ஜெயபிரேமா.
சிங்கப்பூர் வேலை நியமன முகவர்கள் சங்கத் தலைவர் கே. ஜெயபிரேமா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“முதலாளிகள், பணியாளர்கள் என்ற இருதரப்பினரின் மனநிலையும் அர்ப்பணிப்புமே மிகவும் முக்கியம். ஆட்சேர்ப்பு முறை தொடர்ந்து பொறுப்பானதாகவும், நெறிமுறைகள் சார்ந்ததாகவும், நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

“வேலைவாய்ப்பு முகவைகள் வெறும் இடைத்தரகர்களாக மட்டும் அல்லாமல், மனிதவளக் கட்டமைப்புக்குள் பொறுப்புள்ள தொழில்முறைப் பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களும் அவர்களது முதலாளிகளும் ஒன்றிணைந்து ‘லோ ஹெய்’ (lo hei), சீனப் புத்தாண்டு மதிய விருந்து, கலாசார நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து, சிறப்பாகக் கொண்டாடினர்.

குறிப்புச் சொற்கள்