கடந்த இருபது ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வேலைசெய்துவரும் 43 வயது திரு பள்ளிகொண்டபெருமாள் ஜெயசேகரின் கனவு சமூக சேவைத் துறையில் பணியாற்றுவது.
அவர் ஈராண்டுகளாக ‘ஹெல்த்சர்வ்’ நட்பாதரவுத் தலைவராக இருந்துள்ளார். ‘ஃபேஸ்’ தொண்டூழியராகவும் உள்ளார். “கொவிட்-19 காலகட்டத்தின்போது நாம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்த பலருக்கும் உதவினோம். அப்போதுதான் நட்பாதரவுத் தலைவர் திட்டம் பற்றி எனக்குத் தெரியவந்தது. தங்குமிடம் எங்களையும் அத்திட்டத்திற்காக முன்மொழிந்தது,” என்றார் அவர்.
சிங்கப்பூர்க் காவல்துறையின் ‘புளூ யூனிட்டி’ திட்டத்தில் உறுப்பினராக இருக்கும் திரு ஜெயசேகர், எவ்வாறு மோசடிகளில் ஏமாறாமல் இருப்பது போன்ற விஷயங்களைச் சக ஊழியர்களுக்குக் கற்பிக்கிறார். சிறந்த தந்தையாக இருந்து படிப்பினைகளைக் கற்றுத்தரும் ‘தங்குமிடங்களில் தந்தைகள்’ திட்டத்திலும் அவர் இணைந்துள்ளார்.
“மனவுளைச்சலில் இருப்பவர்கள் சிலர் என்னைத் தொடர்புகொள்வர். அப்போது நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன். நிறுவனம் மாற விரும்பினால் அவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உதவுவேன்,” என்றார் அவர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்குக் குரல்கொடுக்கும் ராசல்
மூத்த மேலாளரான திரு ராசல், 38, ஓராண்டு ‘ஹெல்த்சர்வ்’ நட்பாதரவுத் தலைவராக இருந்துள்ளார். ஃபேஸ் தொண்டூழியராகவும் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதராகவும் சேவையாற்றுகிறார். நிறுவனம் ஏற்பாடுசெய்யும் நடவடிக்கைகளுக்குத் தம் சக ஊழியர்களையும் அழைத்துச் செல்கிறார்.
வெளிநாட்டு ஊழியர்களின் பிரதிநிதியாக அவர்களின் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுக்கிறார் திரு ராசல். “சிங்கப்பூரில் தொழில்நுட்பம் வளர வளர, இணைய வங்கி/சிங்பாஸ் தொடர்பான விஷயங்களைச் செய்வதில் சில ஊழியர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு நான் உதவி செய்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“இதைத் தொடர்ந்து நான் அதிகாரிகள், அறநிறுவனங்களுடன் இணைந்து ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, சில தங்குமிடங்களில் வாழ்க்கைத் தரம் நன்றாக இருந்தாலும், மற்ற பலவற்றிலும் வாழ்க்கைத் தரம் மேம்படும் என எதிர்பார்க்கிறோம்; சிறிய இடத்தில் அதிகமானோர் தங்குகின்றனர். சில தங்குமிடங்களில் ஒரே ஒரு உணவகம்தான் உள்ளது. அடுக்குப் படுக்கைகளுக்குப் பதிலாக ஒற்றைப் படுக்கை இருந்தால் நன்றாக இருக்கும். அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர் நலனில் அக்கறை செலுத்துவதால் இவற்றுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார் திரு ராசல்.
சிபிஆர் பயிற்சியை வலியுறுத்திய கார்த்திக்
தங்குமிடத்தில் சக ஊழியர் ஒருவர் மாரடைப்பால் இறந்தபோது, ‘சிபிஆர் முதலுதவி செய்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம்’ எனத் தெரியவந்ததும் மனமுடைந்துபோனார் வெளிநாட்டு ஊழியர் தங்கம் கார்த்திக், 34.
தொடர்புடைய செய்திகள்
இனி அத்தகைய நிலைமை வந்தால் உயிரைக் காக்கும் திறன் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும் என அவர் முடிவுசெய்தார்.
‘ஃபேஸ்’ எனும் ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ (FACE) தொண்டூழியரான அவர், அதுபற்றி உடனே ‘ஃபேஸ்’ ஜூரோங் பிரிவு நிர்வாகியிடம் கூறினார். ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனம் ஏற்பாடுசெய்த முதலுதவி/சிபிஆர் பயிலரங்கில் பங்கேற்கும்படி தன் தங்குமிடத்திலுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து ஊக்குவித்தார் திரு கார்த்திக். அதன்வழி, 249 ஊழியர்கள் அப்பயிலரங்கில் பங்கேற்றனர்.
மற்றொரு தருணத்தில், புற்றுநோயால் அவதிப்பட்ட சக ஊழியருக்காகத் தம் நண்பர்களுடன் சேர்ந்து சமைத்துக் கொடுப்பது முதல் கழிவறைக்கு அழைத்துச் செல்வது வரை பல்வேறு உதவிகளைச் செய்தார் திரு கார்த்திக்.
இவ்வாறு பலருக்கும் தன்னால் ஆன உதவிகளைச் செய்ய ‘ஹெல்த்சர்வ்’ அமைப்பின் ‘நட்பாதரவுத் தலைவர்’ (Peer Support Leader) திட்டம் அவருக்குக் கைகொடுத்தது.
“2023 டிசம்பரில் என் தந்தை தவறிவிட்டார். நான் செய்வதறியாது திகைத்தபோது, என் மூத்த மேற்பார்வையாளர் எனக்கு உதவினார். எனக்குப் பயணச்சீட்டுகளை வாங்கித் தந்து விமான நிலையம் வரையிலும் வந்து வழியனுப்பினார். அவரைப் போல் நானும் மற்ற ஊழியர்களுக்கு உதவ விரும்பி, 2024ல் நட்பாதரவுத் தலைவராகினேன்,” என்றார் திரு கார்த்திக். அவர் இவ்வாண்டிற்கான மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ தலைவர் விருதையும் பெற்றார்.
காணாமல் போனவரைக் கண்டுபிடித்து உதவி
நான்கு ஆண்டுகளாக ‘ஹெல்த்சர்வ்’ நட்பாதரவுத் தலைவராக இருந்துள்ள திரு பாண்டியன் செல்வமுருகன், 36, ஃபேஸ் தொண்டூழியராகவும், வெளிநாட்டு ஊழியர் தலைவராகவும் திகழ்கிறார்; இருமுறை மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ தலைவர் விருதையும் பெற்றுள்ளார்.
“அண்மையில் நான் ஊழியர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடைய தம்பி சிங்கப்பூரில் காணாமல் போய்விட்டதால் அவர் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தார். நானும் என் நண்பர்களும் அவருடன் பேசினோம். எங்கள் நட்பு வட்டாரத்தில் அவருடைய தம்பியின் புகைப்படத்தைப் பகிர்ந்தோம். அம்முயற்சியின் பலனாக, ஒருவர் அவரைப் பார்த்ததாகத் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்,” என்றார் திரு செல்வமுருகன்.
எந்நாட்டிலும் உதவ முடியும்
‘சேவை மனப்பான்மை’ விருதைப் பெற்ற திரு ஹசான் காலித், 38, ஈராண்டுகளுக்கும் மேலாக ‘ஹெல்த்சர்வ்’ நட்பாதரவுத் தலைவர் பயிற்சி உதவியாளராக (training facilitator) இருந்துள்ளார். தன் சொந்த வேலைகளுக்கிடையே பிற ஊழியர்களுக்கும் பயிற்சி வழங்குகிறார்.
பங்ளாதேஷில் 2024 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சக ஊழியரின் குடும்பத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் ஏற்பாடுசெய்தார். லிட்டில் இந்தியாவில் ஒருமுறை மூன்று ஊழியர்களுக்கிடையே சண்டை மூண்டபோது அவர் குறுக்கிட்டுத் தடுத்தார்.
“அவர்களில் ஒருவர் என்மீது குத்துவிட்டபோதும் நான் கோபப்படாமல் நிலைமையைக் கையாண்டேன். நட்பாதரவுத் தலைவர் பயிற்சி இல்லாவிடில் நான் கோபப்பட்டிருப்பேன்,” என்றார் திரு ஹசான்.
சேவை மனப்பான்மை கொண்ட ராணுவ வீரர்
சிங்கப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றும் முழுநேர வீரர் மாஸ்டர் சார்ஜண்ட் ஸ்டூவர்ட் ஆவ் ஷங் காங், 32, வெளிநாட்டில் பேரிடர் உதவி, மனிதநேய உதவி வழங்குவதோடு சிங்கப்பூரிலும் ஹெல்த்சர்வ் வழியாக வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேவையாற்றுகிறார். வாரம் மும்முறை ஹெல்த்சர்வ் மருந்தகத்துக்கு வந்து மருந்துகளைப் பொட்டலமிடுவது, பரிசோதனைகளை நடத்துவது உள்ளிட்ட உதவிகளைப் புரிகிறார்.
“சில முறை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்படும்போது காப்பீடுமூலம் பணம் கிடைப்பதற்கு நெடுங்காலம் எடுக்கிறது. சிறப்பு அனுமதியில் (Special Pass) இருப்பவர்களால் சம்பளமும் பெற முடியாது; வீட்டிற்கும் திரும்பமுடியாது. அப்போது ஹெல்த்சர்வ் வழங்கும் சலுகைகொண்ட மருத்துவ உதவி பெரிதும் உதவுகிறது,” என்றார் அவர்.
வந்திருந்த ஊழியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் எஸ்ஜி60 பதக்கமும் வழங்கப்பட்டது.

