மொழி என்பது ஒருவரது அடையாளம். ஒரு சமூகத்தின் மூச்சு. அந்த அடையாளத்தை வளமாகவும் உறுதியானதாகவும் வளர்க்க பிள்ளைப் பருவத்திலிருந்தே அதன் மீதான ஆர்வம் வருவது அவசியம். தமிழின் இனிமையையும் அதன் தனிச்சிறப்பையும் விளையாட்டுத் தோழனாகப் பிள்ளைகளிடம் கொண்டு செல்கிறது பாலர் முரசு.
கேலிச் சித்திரங்கள், பாடல்கள், நடவடிக்கைகள், சிந்தனைத் தூண்டுதல்கள் போன்ற வழிகளில் குழந்தைகள் தமிழ் சொல்லாடலிலும் வாசிப்பிலும் ஆர்வம்கொள்ள பாலர் முரசு 2017ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘கற்றல்’ என்பது சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இதழின் நோக்கம் என்றார் பாலர் முரசு நாளிதழின் முதல் துணை ஆசிரியர் மாதரசி கண்ணன்.
“பாலர் பள்ளிக் குழந்தைகளுக்கு மொழியை மிக எளிதாக அறிமுகப்படுத்துவதற்கு மிகக் குறைந்த வளங்களே உள்ளதால், தமிழ் முரசு இப்பணியை முன்னெடுத்தது,” என்றார் அவர்.
12 பக்கங்கள் கொண்ட மொத்தம் 52 இதழ்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாலர் பள்ளிகளைச் சென்றடைந்தன. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களுக்கு ஒரு கூடுதல் வளமாகப் பாலர் முரசு அமைந்தது. பிறகு 8 பக்கங்கள் கொண்ட இதழாக மாறியது.
“நாளடைவில் தொடக்கப்பள்ளிகளும் பாலர் முரசு இதழ் பயன்படுத்தத் தொடங்கினர். வீட்டுக்கு வெளியே தமிழ் கற்றலை எளிதாக்க பாலர் முரசு உதவியது என்றால் மிகையாகாது,” என்றார் மாதரசி.
பாலர் முரசின் கற்பித்தல் முறை மாணவர்களின் கவனம், ஆர்வம், புரிதல், பங்கேற்பு அனைத்து அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார் தமிழாசிரியர் ஆனந்தவள்ளி.
“விளையாட்டு வழி கற்றல் முறைமூலம் குழந்தைகள் மொழியை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கின்றனர். அதேபோல், தினசரி வாழ்க்கையில் பயன்படும் சொற்களை அறிமுகப்படுத்தி, சுவாரஸ்யமான கதைகள் வழியாக மொழிப் புரிதலை மேம்படுத்துகிறது,” என்றார் திருவாட்டி ஆனந்தவள்ளி.
பல்வேறு பண்டிகைகள், பண்பாட்டு விழுமியங்கள், நல்ல பழக்கவழக்கங்கள், அறிவியல் கருத்துகள், கணிதம் அனைத்தும் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் பாலர் முரசு ஒரு முழுமையான கற்றல் களஞ்சியமாக விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குப் பாலர் முரசு வித்திட்டது என்று நம்புகிறேன்,” என்றார் திருவாட்டி ஆனந்தவள்ளி.
பாலர் முரசு நாளிதழ் வழி, தமிழ் மொழி ஆர்வத்தை வளர்த்து வரும் மாணவிகளில் ஒருவர் எனிஷ்கா ஸ்ரீ.
சிறு வயதில் கால்சா பாலர் பள்ளியில் பயின்ற அவருக்குப் பாலர் முரசு, மொழி வளத்தைப் பெருக்குவதுடன், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் ஒரு கருவியாக இருந்தது என்றார் தாயார் நாகேஸ்வரி ஸ்ரீதர், 42.
“நாங்கள் வேறு தமிழ்ப் புத்தகங்களைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. மொழியின் மீதான கவனத்தை வளர்க்க பாலர் முரசு அவளுக்குப் பெரிதும் உதவியது,” என்றார் திருவாட்டி நாகேஸ்வரி.
வீட்டில் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் எனிஷ்காவுக்கு தமிழ் மொழி வளத்தை பாலர் முரசு கொடுத்தது என்றார் அவர்.
தற்போது 14 வயதாகும் எனிஷ்கா, உயர் தமிழ் படிக்கிறார்.
“தமிழ் மொழியில் ஆர்வமும் பற்றும் ஏற்படுத்திய பாலர் முரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்றார் திருவாட்டி நாகேஸ்வரி.
விளையாட்டாகக் கற்கும் அனுபவம் பிள்ளைகளுக்கு ஒரு புதிய தமிழ் உலகத்தைத் திறக்கிறது. தமிழில் பேச, தமிழில் சிந்திக்க, தமிழில் கனவு காண சிறு வயதிலிருந்தே தாய்மொழியின் தனிச்சுவையை உணர்த்தும் கருவி பாலர் முரசு.