தமிழ் முரசின் 90 ஆண்டுத் தொடர்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில் ஃபேஸ்புக் பதிவுகளை வெளியிட்டுள்ள அரசியல், சமூகத் தலைவர்கள், அந்நாளிதழின் சமூகப் பங்களிப்பு முக்கியம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஊழியர் உரிமைகள், அரசியல் சீர்திருத்தம், பாகுபாடின்மை ஆகியவற்றுக்குக் குரல் கொடுத்திருந்த தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் வார இதழாகத் தொடங்கிய வரலாறு குறித்து சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், தமது வாழ்த்துப் பதிவில் குறிப்பிட்டார்.
“சிறப்புமிக்க இந்தத் தருணத்தைக் கொண்டாடும் வேளையில் 2035ல் இடம்பெறும் அதன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை நாங்கள் பெருமையுடன் எதிர்நோக்குகிறோம். தலைமுறைகளை ஒன்றிணைத்து தொடர்ந்து பங்களிக்க வேண்டும்,” என்று எட்வின் டோங் பதிவிட்டுள்ளார்.
செய்தி வணிகத்திற்குச் சிரமமான இக்காலகட்டத்தில், பல்வேறு புகழ்பெற்ற பத்திரிகைகள் மூடுவிழா காணும் அல்லது பதிப்புகளைக் குறைத்துக்கொள்ளும் நிலையில், தமிழ் முரசு நிலைத்திருப்பது சாதாரணமானது அன்று என செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் தெரிவித்தார்.
“தமிழ் முரசுக்கு அச்சிதழும் இணையத்தளமும் உள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் கணக்குகளைக் கொண்டுள்ள தமிழ் முரசு, நீண்டகாலமாக நிலைத்திருக்கும் செய்தி இதழாக இருந்தாலும் காலத்துடன் மாற முயல்கிறது,” என்று அவர் கூறினார்.
கொண்டாட்டத்தின்போது தமிழ் முரசுடன் சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது. அதன்மூலமாக, இரு இரண்டு நிறுவனங்களுமே ஒன்றிணைந்து இந்தியச் சமூகத்தைப் பரந்த அளவில் ஈடுபடுத்தி, உதவி தேவைப்படுவோரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முற்படும் என்று சிண்டா தலைவர் ரா. அன்பரசு தெரிவித்தார்.
சிங்கப்பூரின் ஆகப் பழைமையான தமிழ் நாளிதழ் என்ற முறையில் தமிழ் முரசு, சமூகத்தின் நம்பகத்தன்மைமிக்க குரலாகத் திகழ்கிறது என்றும் மொழி, மரபு, அடையாளம் ஆகியவற்றைக் கட்டிக்காத்து வருகிறது என்றும் நற்பணிப் பேரவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
“தமிழ் முரசுடன் நீடித்த உறவு பாராட்டுவதில் பெருமை கொள்கிறோம். காலங்காலமாக அவர்கள் எங்களுக்கு அளித்து வந்த ஆதரவை எண்ணிப் பெருமை அடைகிறோம்,” என்று அப்பதிவு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தமிழ் முரசுக்காக மேலும் 90 ஆண்டுகள் நிற்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் தெரிவித்தார்.
“ஆம், சவால்கள் உண்மையானதுதான். அச்சிதழ் வாசிப்பும் அன்றாட தமிழ்ப் புழக்கமும் குறைந்து வருகிறது. ஆனால், நாம் இணைந்து மொழி, பண்பாடு உள்ளிட்டவற்றைக் கட்டிக்காக்கப் பாடுபடுவோம்,” என்று திரு ஹமீது கூறினார்.
இன்னும் 90 ஆண்டுகளுக்கும் அதற்கும் மேலாக, நமது தாய்மொழியையும் தமிழ் முரசு நாளிதழையும் ஆதரித்து பாதுகாக்க முடியும் என்பதில் தமக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தம் பதிவில் தமிழிலேயே குறிப்பிட்டார்.
தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவின் வழியாக இதழின் பங்காளிகள், தங்களுக்கு இடையேயான உறவுகளைப் புதுப்பித்து புதிய உறவுகளையும் ஏற்படுத்த முடிந்ததாக சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தலைவர் ராஜ் முஹம்மது தெரிவித்தார்.