மூத்த ஆசிரியர்கள் இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்ட வேண்டும், இளம் ஆசிரியர்கள் கொண்டுவரும் புதிய கண்ணோட்டங்களிலிருந்து மூத்த ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார், இவ்வாண்டின் ‘நல்லாசிரியர் விருது 2026’ விழாவில் ஆற்றிய தொடக்கவுரையில் முன்வைத்த கருத்துகளில் ஒன்றாகும்.
வாழ்நாள் முழுவதும் கல்விக்காகச் சேவையாற்றி வரும் மூத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் புதிய உத்திகளோடு கல்வித்துறைக்குள் நுழையும் இளம் ஆசிரியர்களின் தாக்கத்தையும் இவ்விழா ஒருங்கே அங்கீகரிக்கிறது.
இவ்விழாவில், இவ்வாண்டுக்கான தேசியக் கல்விக் கழகத்தின் ‘சிறந்த பயிற்சி ஆசிரியர்’ விருதினை 23 வயது நந்தினி சிவக்குமார் வென்றுள்ளார்.
ஆசிரியர் என்பவர் ஒரு பாடத்தை மட்டும் கற்பிப்பவர் அல்லர். மாறாக ஒவ்வொரு மாணவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் செதுக்குபவர் என்பதைத் தமது தலையாய கொள்கையாகக் கொண்டு இவர் செயல்படுகிறார்.
ஒவ்வொரு குழந்தையாலும் கற்க இயலும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் விதைப்பதோடு, தமிழ் மொழியில் பொதிந்துள்ள செழுமையான பண்பாட்டையும் நற்பண்புகளையும் கற்பிப்பதே தமது கடமையாக இவர் கருதுகிறார்.
இளமைத் துடிப்போடு விளங்கும் நந்தினி சிவக்குமார், 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இளையர் பிரிவில் முதற்பரிசு வென்றவர்.
2025ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ‘கவிப்பெருக்கு’ அங்கத்திலும் பங்கேற்று, தமது இலக்கிய ஆர்வத்தை மேடையில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசிய மொழிகள், கலாசாரத் துறையின் தமிழ்மொழி மன்றப் பங்களிப்பாளரான இவர், உறியடித்தல், கோலமிடுதல் போன்ற பாரம்பரிய நயங்களுடனான பண்பாட்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
மேலும், 2023ல் மொரீஷியசில் நடைபெற்ற 14வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்த பெருமையும் இவரைச் சாரும்.
தமது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு ஆய்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், உயர்நிலைப் பள்ளித் தமிழ் வளங்களில் இலக்கியக் கூறுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை முன்மொழிந்துள்ளார்.
தமிழ் மீதான ஈடுபாடும் ஆசிரியர் பயணமும்
இன்று கிறைஸ்ட் சர்ச் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் நந்தினி சிவக்குமார், தமது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, கடந்த இரண்டு மாதங்களாக முழுநேர ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே தமிழ்க் கதைகளையும் நாடகங்களையும் வாசித்து வளர்ந்த இவருக்கு, தொடக்கக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றபோது மொழியின் மீதான ஈடுபாடு மேலும் வலுப்பெற்றது.
வகுப்பறையைத் தாண்டிய உறவு: வாழும் மொழியாகத் தமிழ்
மாணவர்கள் தங்களின் கவலைகளையும் பிரச்சினைகளையும் எவ்விதத் தயக்கமுமின்றிப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு தோழியாகத் தம்மை உணர வேண்டும் என்று நந்தினி சிவக்குமார் விரும்புகிறார்.
பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாடும் இன்றைய மாணவர்களின் போக்கைக் கவனித்திருப்பதாகக் கூறும் இவர், தமிழைத் தயக்கமின்றிப் பேசும் மொழியாக, வாழும் மொழியாக மாற்ற முயன்றுவருகிறார்.
ஆசிரியர் நந்தினி, நாடக உத்திகள், தொழில்நுட்பக் கருவிகள் போன்ற ஆக்கபூர்வமான கற்பித்தல் முறைகளையும் தமது பாடத்திட்டங்களில் இணைத்துத் தமிழ் மொழியைக் கற்பிக்கிறார்.
அதே வேளையில், மாணவர்களின் பின்னணியைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு கற்பிப்பதன் அவசியத்தையும், அதற்கான பொறுமையையும் தம் மாணவர்களிடமிருந்தே தாம் கற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்விருதைப் பெற்றிருப்பது தமக்குப் பெருமகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்திருப்பதாகக் கூறும் நந்தினி, எதிர்காலத்தில் தமது ஆசிரியர் பணியை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு இது பெரிதும் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.


