இந்தியாவின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் ஏபிஜே அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் ஏற்பாடு செய்கின்றன.
சனிக்கிழமை (அக்டோபர் 12) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இந்நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவிருக்கிறது.
டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிந்த டாக்டர் பொன்ராஜ் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறவிருக்கிறது. ‘டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் மதிநுட்பமே! மனிதநேயமே!’ என்பது அதன் தலைப்பு.
‘மதிநுட்பமே’ என்ற அணியில் திருமதி அகிலா ராமு, திருமதி சக்திதேவி தமிழ்ச்செல்வன், செல்வி மோகன் ஹரிவர்த்தினி ஆகியோரும் ‘மனிதநேயமே’ என்ற அணியில் திரு ஜோதி மாணிக்கவாசகம், திருமதி வானதி பிரகாஷ், செல்வி முத்து சுவேதா ஆகியோரும் வாதிடுவர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அக்ஷைனி தனபாலன் பாடுவார். தொடர்ந்து P.B. ஷீரஜாவின் பாரம்பரிய நடனம் இடம்பெறும் எனக் கூறப்பட்டது.
அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தலைவர் அமீரலி வரவேற்புரை வழங்கியதும் சிறப்பு விருந்தினர் உரையாற்றுவார். வாழ்நாள் சாதனையாளர் விருதாளரை திரு அருமைச்சந்திரன் அறிவிப்பார். தொடர்ந்து விருது வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பட்டிமன்றம் தொடங்குமுன் திரு பரசு கல்யாண் மாணவர்களுடன் வழங்கும் அப்துல் கலாம் பற்றிய ஒரு பாடல் இசைக்கப்படும்.
பட்டிமன்றத்துடன் நிகழ்ச்சி இரவு 9 மணிக்குள் நிறைவடையும்.
மேல்விவரங்களுக்கு திரு ஜான் ராமமூர்த்தியை 9755 9653 என்ற எண்ணிலோ திரு ரஜித்தை 9001 6400 என்ற எண்ணிலோ அணுகவும்.

