ரவி சிங்காரம்
சமூக அக்கறைக்கு வயது ஒரு தடையன்று என்பதை நிரூபித்துள்ளனர் சகோதரர்களான ஜெய் ராம்நாராயணன், 8 - நீல் ராம்நாராயணன், 11.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்களது கிரிக்கெட் பயிற்சிக்குச் செல்லும் வழியில், தெம்பனிஸ் பகுதியில் உள்ள திறந்தவெளிப் புல்திடலில் வெளிநாட்டு ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடுவதை இரு சகோதரர்களும் கவனித்தனர்.
சமமில்லாத தரையில் சிரமப்பட்டு அவர்கள் விளையாடுவதைப் பார்க்கும்போது தாங்கள் நாளும் தரமான திடலில் பயிற்சிசெய்வது அவர்களுக்கு நினைவிற்கு வந்தது.
அதனால், சிங்கப்பூர் அமெரிக்கப் பள்ளியில் படிக்கும் நீலும் ஜெய்யும் தம் பெற்றோரின் உதவியுடன் தமது பிறந்தநாளையொட்டி சென்ற ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களுடன் ஒருநாள் நட்புறவு ஆட்டத்தை நடத்தினர்.
வீட்டின் அருகே இருந்த கட்டுமானத் தளத்தில் பணியாற்றிவந்த ஊழியர்களையும் அவர்களது நண்பர்களையும் அழைத்தனர். அறிவிப்புப் பலகைகள் அச்சிட்டு, ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அமைப்பின் உதவியையும் நாடி அதிக ஊழியர்களை வரவேற்றனர்.
நான்கு அணிகள், 40 ஊழியர்கள், கிரிக்கெட்டுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதாக நடைபெற்றது. வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, பழங்கள், பானங்கள் போன்றவைக் கொண்டாட்டத்துக்குச் சிறப்புசேர்த்தன.
முதல் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவே, அடுத்தமுறை இன்னும் பெரிய அளவிலான ‘வெளிநாட்டு ஊழியர் பிரீமியர் லீக்’ எனும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்க அவர்கள் குடும்பமாக முடிவுசெய்தனர்.
2025 மே முதல் ஆகஸ்ட் வரை 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எட்டு அணிகளாகப் பிரிந்து ‘தி கேஜ்@டெம்சி’ உட்புறக் கூடத்தில் விளையாடினர். நடுவர்கள், மின்னணு மதிப்பெண் பதிவு உள்ளிட்ட தொழில்முறை அம்சங்களும் இடம்பெற்றன.
“அனைத்துப் பொறுப்புகளையும் எங்கள் மகன்களே ஏற்றுக்கொண்டனர்,” எனப் பெருமையுடன் கூறினார் தாயார் காயத்ரி ராம்நாராயணன்.
தம் முயற்சியில் வெற்றிகண்ட சகோதரர்கள், இவ்வாண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் போட்டியை விரிவுபடுத்தினர்.
ஸ்கார்ப்பியன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சரிகா பிரசாத்துடன் இணைந்து, ஜூன் 7 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை வார இறுதிகளில் யுனைடெட் வோர்ல்டு கல்லூரி தென்கிழக்காசியா (கிழக்கு) வளாகத்தில் போட்டியை நடத்தினர். சுவையான உணவை ‘கிருஷ்ணாஸ் ஃபிரீ மீல்ஸ்’ வழங்கியது.
“வெளிநாட்டு ஊழியர்கள் பலருக்கும் ஞாயிற்றுக்கிழமைதான் ஒரே விடுமுறை நாள்; இப்போட்டிமூலம் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்; மன உளைச்சல் குறையும்,” என்றார் சகோதரர்களின் தந்தை திரு ராஜிவ் ராம்நாராயணன்.
முதலிடத்தில் வந்த ‘ராயல் ஸ்டிரைக்கர்ஸ்’ அணிக்கு $1,600, இரண்டாம் நிலையில் வந்த ‘நோ ஃபியர்ஸ்’ அணிக்கு $1,000, சிறந்த பந்துவீச்சாளருக்கு $200, ஆட்டநாயகனுக்கு $500, முதல் நான்கு நிலையில் வந்த அணிகளுக்குப் பதக்கங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மூன்றாம் நிலையில் ‘என்டிடியன்ஸ்’ அணியும் நான்காம் நிலையில் ‘ஆர்எஸ்பி’ அணியும் வந்தன.
“நாங்கள் பத்து ஆண்டுகளுக்குமுன் இந்த அணியைத் தொடங்கினோம். விளையாட்டாளர்கள் பெரும்பாலும் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள். இப்போட்டியை நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர்,” என்றார் ‘ராயல் ஸ்டிரைக்கர்ஸ்’ அணியின் ராஜேஷ், 32.
‘ஆர்எஸ்பி’, ‘எஸ்ஜிஐ’ அணியின் மேலாளர்செல்லையா ராம்குமார், 45, இரு சகோதரர்களின் சமூக உணர்வையும் பாராட்டினார். “ராம்நாராயணன் குடும்பத்தார், திரு சரிகா போன்றோர் வெளிநாட்டு ஊழியர்களுடன் நன்றாகப் பழகி எங்களை ஊக்குவிக்கின்றனர்,” என்றார் அவர்.
“சிறுவயதிலிருந்தே எனக்கு கிரிக்கெட் பெருமகிழ்ச்சி தரும் விளையாட்டு. பக்கத்து ஊருக்குச் சென்று விளையாடுவேன்; மாவட்டப் போட்டிகளில்கூட கலந்துகொள்வேன்,” என்றார் திரு ராம்குமார். 2011ல் சிங்கப்பூருக்கு வந்த அவர், 2017ல் ‘எஸ்ஜிஐ’ அணியைத் தொடங்கினார்; அதை இந்தியாவில் பதிவுசெய்தும் உள்ளார்.
தொடர்ந்து மற்ற நிறுவனங்களுடன் இணைந்து இம்முயற்சியை விரிவாக்க விரும்புவதாக ராம்நாராயணன் குடும்பத்தார் கூறினர்.
அதன் முதற்படியாக, ‘யுனைடெட் வில்லோ’ எனும் லாப நோக்கற்ற அமைப்பையும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.
“விளையாட்டுகள்மூலம் மக்களை இணைப்பதே எங்கள் நோக்கம்,” என்றார் சகோதரர்களின் தந்தையார் திரு ராஜிவ் ராம்நாராயணன்.
“விளையாட்டாளர்கள் நம்மை வாழ்த்தும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணையில்லை,” என்றார் நீல்.

