தீபாவளியையொட்டி மேடம் டுஸாட்ஸ் அரும்பொருளகத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள்

தீபாவளியையொட்டி மேடம் டுஸாட்ஸ் அரும்பொருளகத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள்

1 of 2
படம்: யோகிதா அன்புச்செழியன்
படம்: யோகிதா அன்புச்செழியன்

08 Nov 2026 - 5:46 am

2 mins read

பாலிவுட் நட்சத்திரங்களின் மெழுகுச் சிலைகளைக் காணும் அனுபவத்தைத் தீபாவளிக் கொண்டாட்டத்துடன் இணைத்து வழங்குகிறது சிங்கப்பூர் செந்தோசாவில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகுச் சிலை அரும்பொருளகம்.

தீபாவளியை முன்னிட்டு, ‘மேக்மைட்ரிப்’ (MakeMyTrip) இந்திய பயணச் சேவை நிறுவனத்துடன் இணைந்து ‘ஐகான்ஸ் ஆஃப் இந்தியா’ (Icons of India) எனும் சிறப்பு நிகழ்ச்சியை அரும்பொருளகம் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பிரபல இந்திய நடிகை தீபிகா படுகோனின் முழு உருவ மெழுகுச் சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அழகிய சிவப்பு நிற ஆடையில், அலையலையான கூந்தல் அலங்காரத்துடன் காட்சியளிக்கும் அவரது சிலை, அரும்பொருளகத்தின் பாலிவுட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு கேன்ஸ் அனைத்துலகத் திரைப்பட விழாவில் நடுவராகப் பணியாற்றியதோடு, 2023ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் தீபிகா படுகோன் பங்கேற்றார்.

அவரது மெழுகுச் சிலையுடன், மற்ற பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், ரண்வீர் சிங், வருண் தவான் ஆகியோரின் சிலைகளும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இதன்மூலம், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இந்தியத் திரை நட்சத்திரங்களைக் காணும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.

இந்நிகழ்ச்சி குறித்துப் பேசிய மேடம் டுஸாட்ஸ் சிங்கப்பூரின் பொது மேலாளர் வேட் சாங், தீபாவளி ஒளி, மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்தும் முக்கியமான இந்தியப் பண்பாட்டுக் கொண்டாட்டம் என்றார்.

“இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நட்சத்திரங்களைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதுடன், அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்க விரும்புகிறோம். ‘மேக்மைட்ரிப்’ நிறுவனத்துடனான கூட்டாண்மை, இந்தியத் திரைப்படத் துறையின் சிறப்புகளைச் சிங்கப்பூரில் உள்ள அதிகமானோருடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது,” என்றார் அவர்.

பயணிகள் சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதுடன், தங்களது பயணத்தை நினைவில் நிற்கும் அனுபவமாக மாற்றும் நடவடிக்கைகளையும் நாடுகின்றனர் என்றார் மேக்மைட்ரிப் நிறுவனத்தின் விடுமுறை, அனுபவங்கள் பிரிவின் தலைமை வணிக அதிகாரி ஜஸ்மீத் சிங்.

“மேடம் டுஸாட்ஸ் சிங்கப்பூருடனான இந்தக் கூட்டாண்மை, இந்தியப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலா ஈர்ப்பை மேலும் அணுகக்கூடியதாக்குகிறது. தீபாவளிக் காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு, சிங்கப்பூர் பயணத்தைத் திட்டமிடுவதற்கு ‘ஐகான்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றொரு காரணமாக அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, ‘மேக்மைட்ரிப்’ இணையத்தளம் வழியாக நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்வோருக்கு ஒன்றை வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையும் வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்