சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 147வது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) மாலை 4 மணிக்கு, விக்டோரியா ஸ்த்ரீட்டில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் 5ஆம் தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
உள்ளூர்ப் படைப்புகளைப்பற்றி நடைபெறும் நூல் கலந்துரையாடல் அங்கத்தில் முனைவர் மன்னை க.இராஜகோபாலனின் ‘இதயம் தொட்ட இலங்கை’ நூலின் அறிமுகமும் அதுபற்றிய கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.
நூலின் அறிமுகத்தைத் திருவாட்டி மஹ்ஜபீன் வழங்கவுள்ளார். திரு இராம்குமார் சந்தானமும் திருவாட்டி ஷோபா குமரேசனும் நூலாசிரியருடன் கலந்துரையாடலில் பங்கேற்பர். கழகத்தின் உறுப்பினர் செல்வி லோஷிணி மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்படுவார்.
‘இதயத்தில் நின்றவை’ அங்கத்தில் வாசகர்கள் தங்கள் மனத்தில் நிலைத்திருக்கும் புனைவுகள் குறித்து உரையாற்றுவர்.
மேலும், கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். நிகழ்வில் அண்மையில் மறைந்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவரும் பேச்சாளருமான திரு சாலமன் பாப்பையாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
நவம்பர் மாதப் போட்டிகள்
நூல் அறிமுகப் போட்டிக்குச் சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசு உண்டு.
சிறுகதைப் போட்டிக்கான தொடக்கவரிகள்
1. உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200-300 சொற்களுக்குள் எழுத வேண்டும். “’இது என்னுடையது இல்லை!’ என்று அவன் சொன்னபோது, வகுப்பறையில் இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் அவனைப் பார்த்தனர்.”
2. இளையர் பிரிவு: 300-400 சொற்களுக்குள் எழுத வேண்டும். “அந்த நாளிலிருந்து, அவள் தனது பெயரை யாராவது அழைத்தால், திரும்பிப் பார்ப்பதை நிறுத்திவிட்டாள்.”
3. பொதுப்பிரிவு: 400-500 சொற்களுக்குள் எழுத வேண்டும். “அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை; ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதன் வாசலில் ஒரு ஜோடி செருப்புகள் மட்டும் புதிதாகக் காணப்பட்டன.”
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்படிவத்தின் வழியாக அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16
தொடர்புக்கு: மணிமாலா மதியழகன் - 8725 8701, பிரேமா மகாலிங்கம் - 9169 6996.
