சிங்கப்பூரில் கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் சேது ராஜா, 41. கிடைக்கும் வாரயிறுதி நாள்களை ஓய்வுநாளாக அல்லாமல் தமிழ் மக்களுடன் உறவாடும் நாள்களாகப் பார்ப்பதே இவரது வழக்கம்.
‘பூமலை’ என்ற ஒற்றைச் சொல்லால் சொக்கிப்போன வெளிநாட்டு ஊழியர்
‘‘வேலைச் சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் தமிழ் மொழியில் எழுதுவதற்குப் பரவலாக வாய்ப்பில்லை.
‘‘என்றாலும், தமிழ் மொழியைப் பேசுவதற்கு இங்கு முன்னுரிமை வழங்கப்படுவது சிறப்பு. அவ்வகையில் ‘லிஷா’ (லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம்) போன்ற அமைப்புகள் ஒருங்கிணைக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் மொழியுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த உதவுகின்றன,’’ என்றார் திரு ராஜா.
‘‘இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில்கூட விளம்பரப் பலகைகளில் ஆங்கில எழுத்துகளைத் தமிழில் போடுவதைக் காணலாம். ஆனால் சிங்கப்பூர் ரயில் பயணங்களின்போது ‘பொட்டானிக் கார்டன்’ எனும் இடத்தின் பெயருக்கு ‘பூமலை’ என்ற சொல் ஒலிக்கும்போது ஏற்படும் உணர்வை விவரிக்க இயலாது,’’ என்றார் அவர்.
ஊர் மாறினாலும் தமிழர் என்ற உணர்வு மாறாது
‘‘பொருள் ஈட்டத்தான் சிங்கப்பூர் வந்தேன். ஆனால், சிங்கப்பூரில் தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் உன்னத இடம், மொழிமீது இந்த நாட்டினர் கொண்டிருக்கும் அன்பை உணர்த்துவது மட்டுமல்லாமல், எனது தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும் ஊக்கம் அளிக்கிறது,’’ என்றார் திரு நாராயணன் கேசவன், 25.
இவர் சிங்கப்பூர் வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ளன. மின்னணுத் தொழில்நுட்பராகப் பணியாற்றும் இவர், கடல்கடந்து வாழ்ந்தாலும் தமிழ்ப் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்றார்.
‘‘பல்லினச் சமூகமான சிங்கப்பூரில் தமிழுடனான எனது தொடர்பைத் தக்கவைக்க கோவில், தேவாலயங்களுக்குச் செல்வேன். சமய வழிபாட்டு இடங்களில் உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் எனப் பலரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
“ஆலயங்களில் ஒலிக்கும் தமிழ் என் மொழி ஆர்வத்தை ஈர்க்கிறது. இத்தகைய ஒன்றுகூடல்கள் வாயிலாகத் தமிழ் நண்பர்கள் கிடைப்பார்கள். எங்களுக்கு இடையில் மொழி சார்ந்த ஒற்றுமை உள்ளதால் அவர்களுடன் உரையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கும்,’’ என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அவ்வகையில், இந்த ஆண்டு தமிழ் மொழிமீதான தன் ஈடுபாட்டை வெளிப்படுத்த முதன்முறையாகப் பட்டிமன்றத்தில் பங்கேற்றதாகவும் கூறினார் திரு கேசவன்.
தொடர்ந்து தமிழ் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாகச் சொன்னவர், மொழியுடன் தொடர்பில் இருக்க உதவும் வகையில் சிங்கப்பூரில் பல்வேறு அமைப்புகள் இயங்கிவருவது பாராட்டிற்குரியது என்றார்.
சிங்கப்பூரர்களுடன் பழகி மகிழத் தமிழ் மொழி போதும்
பணியிட மொழியாக ஆங்கிலம் இருந்தாலும் சிங்கப்பூரர்கள் தங்களுடன் பேசும்போது தமிழில் பேசுவதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அவ்வகையில், ‘‘தமிழ் மூலம் உள்ளூர்வாசிகளுடன் பழகுவது சமூகத்துடன் இணைவதற்கான தடைகளைத் தகர்க்கிறது,’’ என்றார் திரு பழனிவேல் புருஷோத்தமன், 41.
‘‘ஆனந்தகுடி எனும் கிராமம் எனது சொந்த ஊர். சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழியாகத் தமிழ் இருப்பதால் வேலையிடங்களிலும், வெளியிடங்களிலும் தமிழால் இணைவது நல்ல மனநிலையைத் தருகிறது.
‘‘சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்குச் செல்கையில் எப்படிப் பிழைக்கப்போகிறோம் என்று ஏற்படும் அச்சத்தைத் தாய்மொழிப் புழக்கம் களைகிறது,” என்றார் அவர்.
பேருந்துகள் தொடங்கி எங்குச் சென்றாலும் தமிழ் மொழியைக் கேட்க முடிவதால் உள்ளூர்ச் சூழலைச் சிறப்பாகப் புரிந்து கொள்ள இயல்கிறது. குறிப்பாக லிட்டில் இந்தியா வட்டாரம், தேக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாக்கள், அங்கு வருகை தரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் என ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலைக்கச் செய்யக் கைகொடுக்கும்,’’ என்றார் திரு புருஷோத்தமன்.
வேலையிட நட்புக்குக் கைகொடுக்கும் தமிழ்
வேலையிடத்தில் ‘வாட்டர்’ எனக் கேட்கும் பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு ’தண்ணீர்’’ எனும் தமிழ்ச்சொல்லைக் கற்றுக்கொடுப்பது, தமிழ் மொழி சார்ந்த விழாக்களில் பேச்சாளர், பங்கேற்பாளர், தொண்டூழியர் எனப் பங்கேற்பது எனத் தமிழுடன் தொடர்ந்து பயணம் செய்யும் ஆர்வலராக விளங்குகிறார் திரு நல்லான் கதிரேசன்,35.
மொழி ஆர்வத்தை வலுவாக்க, தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார் அவர்.
சிங்கப்பூர், தமிழ் நிலைத்திருக்கும் நாடு என்பதால் தாய்மொழியுடனான தொடர்பு நீடிக்கிறது என்றார் திரு நல்லான்.
கட்டுமானத் துறையில் பாதுகாப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் அவர், சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டுச் சூழலுடன் தமிழ் மொழி தம்மைச் சீருடன் இணைத்தது என்றும் கூறினார்.
‘‘வெளிநாட்டு ஊழியர்களுக்காகத் தரப்படும் வழிகாட்டிக் கையேடுகளும் தமிழ் மொழியில் கிடைப்பதால் உழைக்கும் இடத்தில் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் செயல்பட தமிழ் உதவுகிறது,’’ என்று சொன்ன திரு நல்லான், ”என் பணியிடத்தில் பங்ளாதேஷ், மியன்மார், தாய்லாந்து நாட்டினர் உள்ளனர். அவர்களுக்கும் எளிய தமிழ்ச்சொற்களைக் கற்றுத் தருகிறேன்,” என்றார்.
தமிழ் இலக்கிய விழாக்கள், கலை நிகழ்ச்சிகளைத் தவறாமல் நடத்தி வரும் உள்ளூர் அமைப்புகள், வெளிநாட்டு ஊழியர்களைச் சமூகத்துடன் ஒன்றிணைக்க உதவுகின்றன. நட்பை வளர்க்கவும் அவை வழிவகுக்கின்றன,’’ என்றார் திரு நல்லான்.

