சமூகப் பிணைப்புக்காகப் புதிய முயற்சியில் இணைந்த குடும்பக் குழு

சமூகப் பிணைப்புக்காகப் புதிய முயற்சியில் இணைந்த குடும்பக் குழு

4 mins read
சிங்கப்பூரில் தமிழ் சினிமா ரசிகர்களை இணைக்கும் கலாசார விளையாட்டு
2e0310d9-0423-49ad-bafc-4c5017e6ae14
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இணைந்து நடத்தும் ‘தி பிரவுன் பெஞ்ச் ப்ரொஜெக்ட்’. - படம்: ஜெகதீஷ்

தமிழ்த் திரைப்படம் என்பது பலரையும் இணைக்கும் ஒரு பாலம். அந்தப் பாலத்தின் வழியாகப் புதிய நட்புகளை உருவாக்குவதையும் சமூகத்தின் ஒற்றுமையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மொழி, இசை, திரைப்படம் என அனைத்தும் தமிழ்க் கலாசாரத்தை முன்னிறுத்தி அமைந்துள்ள இந்த முயற்சி தென்னிந்தியக் கலாசாரம், தமிழ்த் திரைப்படம் மீதான காதலைக் கொண்டாடும் தனித்துவமான களமாக உருவாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகளுக்கான இடமாக மட்டுமின்றித் தமிழ்த் திரையிசையின் தாளங்கள், திரைப்படங்களின் சுவாரஸ்யமான தருணங்கள், கோலிவுட் சார்ந்த வேடிக்கையான விளையாட்டுகள், ஒத்த சிந்தனையுடையவர்களின் சிறப்பான நட்பு என அனைத்தும் சங்கமிக்கும் கலாசார நிலையமாக உருவெடுத்துள்ளது, ‘தி பிரவுன் பெஞ்ச் ப்ரொஜெக்ட்’.

உலகத்தைக் கொவிட்-19 பெருந்தொற்று புரட்டிப்போட்ட பிறகு, பலர் சமூகத்திலிருந்து விலகிநின்றதாக உணர்ந்தார் வைகேஷ் மோகன், 33.

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு, குறைவாக இருந்ததால் வைகேஷ் அவருடைய இரு சகோதரர்களின் நண்பர்களையும் வாழ்க்கைத்துணைகளையும் வீட்டிற்கு அழைத்துச் சமூக ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தார்.

வீட்டில் இடம்பெற்ற சமூக ஒன்றுகூடலில், விளையாட்டு அங்கங்களும் இருந்தன.
வீட்டில் இடம்பெற்ற சமூக ஒன்றுகூடலில், விளையாட்டு அங்கங்களும் இருந்தன. - படம்: ‘தி பிரவுன் பெஞ்ச் ப்ரொஜெக்ட்’

விளையாட்டுகள், குறிப்பாகத் தமிழ்த் திரைப்படம் தொடர்பான விளையாட்டுகள் மூலம் வீட்டிற்கு வருபவர்களை இணைத்தபோது அவர்களிடையே நல்ல வரவேற்பு தென்பட்டது.

அதை ஏன் தமிழ்ச் சமூகத்தினரிடையே கொண்டுசேர்க்க கூடாது என்ற எண்ணத்தில் வைகேஷ், அவரின் இரு சகோதரர்கள், ஒரு சகோதரரின் துணைவியார் ஆகியோருடன் இணைந்து ‘தி பிரவுன் பெஞ்ச் புரொஜெக்ட்’ முயற்சியைத் தொடங்கினார். வைகே‌ஷின் முயற்சியில் அவரின் கணவரும் சேர்ந்துகொண்டார்.

“வெளியில் செல்லும்போது நம்மில் பலர் நமக்குப் பிடித்தவர்களுடன்தான் இருக்க விரும்புவோம். ஆனால் இத்தகைய விளையாட்டுகளில் குழுக்களில் பங்கேற்பாளர்களைப் பிரிக்கும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நட்புறவை வளர்த்துக்கொள்ள முடியும்,” என்றார் வைகேஷ்.

தனது சகோதரரின் துணைவிக்குத் தமிழ் பேசத் தெரியாமல் இருந்தாலும் அவர் இந்த முயற்சியில் பங்கெடுத்ததால் அவரால் தமிழ்த் திரைப்படக் கலாசாரத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள முடிவதாக வைகேஷ் சொன்னார்.

வீட்டிற்கு அப்பால் விளையாட்டு அங்கத்தை ஏற்பாடு செய்ய ஓரிடம் அமைய வேண்டும். இடம் அளிப்பதற்குப் பல வர்த்தகங்கள் முன்வந்ததாக வைகேஷின் துணைவர் கண்ணன் வீரபாண்டியன், 36, பகிர்ந்துகொண்டார்.

ஒருவர், இவர்களின் விளையாட்டு அங்கத்திற்குப் பதிவு செய்யும்போது தனது குழுவில் வேறு யார் இருப்பார் என்று அவருக்குத் தெரியாது. பிறரைச் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைவதோடு தமிழ்த் திரைப்படங்கள், பாடல்கள் சார்ந்த பல கேள்விகள் விளையாட்டு அங்கத்தில் இடம்பெறும்.

அதிக அளவில் இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையில் விளையாட்டு அங்கம் வெளியில் நடத்தப்படுகிறது.
அதிக அளவில் இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையில் விளையாட்டு அங்கம் வெளியில் நடத்தப்படுகிறது. - படம்: ‘தி பிரவுன் பெஞ்ச் ப்ரொஜெக்ட்’

“18 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்துகொள்ளலாம். 1960களிலிருந்து, 2000ஆம் ஆண்டு வரையிலான பாடல்கள், திரைப்படங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்,” என்று கூறினார் வைகேஷின் சகோதரர் கவிந்தரன் மோகன், 37.

விளையாட்டு அங்கத்தை ஏற்பாடு செய்யும் முன்னர் பல திட்டமிடுதல்கள் உள்ளதாக விளக்கிய கவிந்திரன், ஐவரும் அவரவர் ஆற்றலுக்கேற்ப இந்த முயற்சிக்குப் பங்களிப்பதாகச் சொன்னார்.

நண்பர்களை மட்டும் அழைத்துவருவதற்குப் பதிலாக குடும்ப உறுப்பினர்களையும் விளையாட்டு அங்கத்திற்கு அழைத்துவரும்போது தலைமுறைகளுக்கு இடையிலான இணைப்பு அதிகரிக்கும் என்று கண்ணன் நம்புகிறார்.

“ஒருவருக்கு அவரின் தாயார் வளர்ந்த காலத்தில் வெளிவந்த பாடல் தெரியாமல் இருக்கலாம். தாயாரை எங்கள் விளையாட்டு அங்கத்திற்கு அழைத்துவரும்போது தனது தாயார் இத்தகைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தார் என்பது தெரியவரும்,” என்று தெரிவித்தார் கண்ணன்.

சிங்கப்பூரில் ஓர் இடத்தைத் தேடி விளையாட்டு அங்கத்தை ஏற்பாடு செய்வதைச் சவாலாகக் கருதும் கவிந்திரன், இவர்கள் பெரும்பாலும் இந்திய வர்த்தர்களுடன் கைகோப்பதாகச் சொன்னார்.

“இந்திய வர்த்தகங்கள் அவர்களின் இடத்தை எங்களுக்கு வழங்கும்போது அவர்களின் வியாபாரத்திற்கும் ஏற்றம் கிடைக்கும். இறுதியில் சமூகமாக இணைந்து ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவுவதே இதன் அடிப்படை,” என்றார் கவிந்தரன்.

மலாய் மொழி பேசும் வைகேஷின் சகோதரரின் துணைவியான ஷரிஃபா தர்விந்தரன், 36, தி பிரவுன் பெஞ்ச் புரொஜெக்ட்டின் விளையாட்டு அங்கங்கள் அனைத்திலும் பொழுதுபோக்கு அம்சம் இருப்பதாகக் கூறினார்.

“காலம் காலமாக நம்முடைய அடையாளத்தை உருவாக்குவதில் திரைப்படம் பெரும் பங்கு வகித்திருக்கிறது. தமிழர்களாகிய நம் பலருடைய வாழ்க்கையை இந்தியத் திரைப்படம் ஆழமாகச் செதுக்கியுள்ளது. அதுவே இன்று நம் அடையாளத்தின் ஒரு முக்கியப் பகுதியாகவும் மாறிவிட்டது,” என்றார் ஷரிஃபா.

தனக்குத் தமிழ் பேசத் தெரியாமல் இருந்தாலும் வளரும்போது தமிழ்ச் சமூகத்தோடு தன்னை இணைத்துக்கொள்ள இதே திரைப்படத் தளம்தான் தனக்குப் பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமான எங்கள் வீட்டிலிருந்து இதைத் தொடங்கி பின்னர் இன்னும் பலருக்கும் பாதுகாப்பளிக்கும் வகையில் இதை ஒரு பெரிய தளமாக விரிவுபடுத்தினோம். இப்போது உணவகங்கள் போன்ற இடங்களுக்கும் இதை விரிவுபடுத்தியிருப்பதன் மூலம் நமக்குரிய பாதுகாப்பான தளங்களை நாங்கள் இன்னும் அதிகமாக உருவாக்கியுள்ளோம்,” என்று சொன்னார் ஷரிஃபா.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அனைவரையும் வரவேற்றுத் தாங்கள் நடத்தும் பொதுவான நிகழ்வுகளைத் தவிர, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சில வர்த்தகங்களும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்காகவும் ஊழியர்களுக்காகவும் தனிப்பட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்துத் தருமாறு தங்களை அணுகுவதாகப் பகிர்ந்துகொண்டார் ஷரிஃபாவின் துணைவர் தர்விந்தரன் மோகன், 35.

“இந்த வகையான கூட்டு முயற்சிகள் மிகவும் சிறப்பானவை. இப்படிப்பட்ட ஒரு தளமாகவே நாங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புகிறோம். நம் மக்களும் நம் சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகங்களும் தங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும் உதவும் வகையில் அனைவரையும் பாகுபாடின்றி அரவணைக்கும் பாதுகாப்பான தளமாக நாங்கள் இருக்க விரும்புகிறோம்,” என்று சொன்னார் தர்விந்தரன்.

குறிப்புச் சொற்கள்