பெரிய குடும்பங்களை மகிழ்விக்கும் திட்டம்
பிப்ரவரி 18ஆம் தேதி வெளியான பட்ஜெட்டில் குழந்தை மேம்பாட்டுக் கணக்கு தொடக்க மானியம், பெரிய குடும்பங்களுக்கான மெடிசேவ் மானியம், பெரிய குடும்பங்களுக்கான LifeSG சிறப்புத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
இது குறித்து பேசிய பாலர் பள்ளி ஆசிரியர் துர்கா மைக்கல், 35, பெரிய குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டம் மகிழ்ச்சி அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
“எனக்கு 10, 8, 6 வயதுகளில் பிள்ளைகள் இருக்கிறார்கள். 2019ல் பிறந்த என் மூன்றாவது பிள்ளைக்கு, ‘லைஃப்எஸ்ஜி’ சிறப்புத் தொகையான 1,000 வெள்ளி கிடைக்க உள்ளது.
“மேலும், 12 வயதுக்கும் குறைவான ஒவ்வொரு குழந்தைக்குமே தலா 500 வெள்ளியைக் குடும்பத்தினர் பெறுவர். இதில் எனக்கு மும்மடங்கு மகிழ்ச்சி என்றே கூறலாம். பிள்ளைகளுக்கான செலவுகள், குறிப்பாக துணைப்பாட நடவடிக்கைகளுக்கும் திறன் வகுப்புகளுக்குமான கட்டணங்களுக்கு இந்தத் தொகை உதவும்,” என்றார் அவர்.
குடும்பத்தில் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் திட்டம்
எல்லா வயதினரையும் உள்ளடக்கும் வரவு செலவுத் திட்டமாக இது உள்ளது.
பிள்ளைகள், இளையர்கள், மூத்தோர் எனக் குடும்பத்திலுள்ள அனைவரும் மகிழும் வண்ணம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
“இரண்டு பிள்ளைகளுக்குத் தாயார் என்ற முறையில், அவர்களின் திறன் மேம்பாட்டுக்கான செலவில் அரசாங்கம் உதவ உள்ளது என்பது சிறப்பான ஒன்று,” என்றார் தாதியாகப் பணியாற்றும் பிரமிளா கிளீட்டஸ்.
வாழ்நாள் கற்றலுக்கு வழிகாட்டி
இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பற்றிக் கேட்டபோது, வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கதெனக் கருத்துரைத்தார் கடந்த ஆண்டிறுதியில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் பிரேமா சுப்பிரமணியன், 72.
தொடர்புடைய செய்திகள்
பட்ஜெட் அறிக்கையில் இவரது கவனத்தை ஈர்த்துள்ள அம்சங்களில், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) அதன் புதிய வளாகத்தைப் பெறவுள்ளதாக வந்த அறிவிப்பே தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்றார்.
‘எஸ்யுஎஸ்எஸ்’, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் போன்ற ஓரளவு புதிய தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் நிதி திரட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் அறக்கட்டளை 2042ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் வோங் கூறியதும் இவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை நினைவுகூர்ந்தார் திருவாட்டி பிரேமா. “அப்போதெல்லாம் குறைந்த எண்ணிக்கையிலான பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்குத்தான் உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும்.
“எனவே, கல்விக்காக என் இரு பிள்ளைகளையும் அயல்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டியிருந்தது. தற்போது ‘எஸ்யுஎஸ்எஸ்’ புதிய கிளை, பலர் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் அமையவுள்ளதாக வந்த அறிவிப்பு நம் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகள் சிங்கப்பூரிலேயே கல்வியைத் தொடர்ந்திட கூடுதல் வழிகளை அமைத்துக் கொடுக்கும்,” என்று கூறினார் திருவாட்டி பிரேமா.
குழந்தைப் பராமரிப்புக்குக் கைகொடுக்கும்
குழந்தை மேம்பாட்டுக் கணக்கு தொடக்க மானியம் உள்ளிட்ட திட்டங்கள் தமது கவனத்தைப் பெற்றதாகக் குடும்பத் தலைவி பெனாசிர் ஹனிஃப் முகமது, 32, தெரிவித்தார்.
பணவீக்கம், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்கள் ஆகியவற்றின் மீதான அக்கறையைப் பதிவுசெய்தார் அவர்.
“குடும்பச் செலவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அன்பளிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்களின் பராமரிப்புக்கும் இதர தேவைகளுக்கும் நிதியுடன் கூடுதல் நேரமும் முதலீடு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் கருதும்போது, மற்றொரு குழந்தையை நான் பெற்றுக்கொள்ள கூடுதல் ஊக்குவிப்பு இல்லை,” என்று திருவாட்டி பெனாசிர் தெரிவித்தார்.
எனினும், அரசாங்கம் குடும்பங்களைச் சார்ந்து வகுத்துள்ள ஆதரவுத் திட்டங்களும் அவற்றில் அடங்கியுள்ள முயற்சிகளும் பாராட்டிற்குரியவை என்றார் திருவாட்டி பெனாசிர்.
வீடுகள் குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பு
பட்ஜெட் குறித்துப் பேசிய இளையர் விஜய் பெரியண்ணன், குறுகியகால சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டினார்.
“எதிர்பார்த்தபடி குறுகியகால சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், நீண்டகால கவலைகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக வீட்டு வசதி தொடர்பில் மிக முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை. சந்தையில் வீட்டு விலைகளைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு இல்லை.
“அதிக குழந்தைகளைப் பெற்று வளர்க்க, சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலை, பெற்றோரின் ஆதரவு சார்ந்த விடுப்புகள் போன்ற நீண்டகால அனுகூலங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என்றார் அவர்.
ஊழியரணி மேம்பாட்டுக்கான ஆதரவு வரவேற்கத்தக்கது
அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், வரிக்கழிவுகள் உள்ளிட்டவை பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறினார் பிக்சிபிட் நிறுவனத்தின் இயக்குநர் சி குணசேகரன்.
“நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்ட அனுகூலங்கள் என் நிறுவனம் போன்ற சிறு நிறுவனங்கள், தங்களின் ஊழியர் அணியை மேம்படுத்தி, கூடுதல் சிங்கப்பூரர்களைப் பணியமர்த்த உதவும். என் நிறுவனம் இந்தியாவிற்கு விரிவடைய முயற்சிகள் எடுத்து வருவதால் கூடுதல் சிங்கப்பூரர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டங்களையும் நான் வரவேற்கிறேன்,” என்றார்.
புத்தாக்க இந்தியக் கலையகத்தின் நிறுவனருமான திரு குணசேகரன், அறிவிக்கப்பட்டுள்ள கலாசார சலுகை குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார். உள்ளூர்க் கலைகள், கலைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சிறந்த தளமாக இது அமையும் என்றார் இவர்.
சமநோக்கைப் போற்றுதல்
யாராக இருந்தாலும் தனிநபர் ஒவ்வொருவருக்கும் அனுகூலங்களைத் தரவுள்ள இந்தத் திட்டம், பாராட்டும் விதத்தில் பார்க்கப்படும் எனத் தாம் கருதுவதாக சோலாரிஸ் ஸ்ட்ரெட்டஜிஸ் சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் முஸ்தஃபா இசுடின் கூறினார்.
“ஒருபுறம் தாராளமான தொகையை அரசாங்கம் கவனத்துடன் செலவு செய்திருக்கிறது. பொருளியல், சமூகம், அரசியல் என்று மூன்று தூண்களைக் கொண்டுள்ளது இந்தத் திட்டம். பணவீக்கத்தின் பாதிப்பைத் தணிப்பது, திட்டத்தின் முக்கியப் பொருளியல் நோக்கமாகும். சுதந்திர சிங்கப்பூரின் 60ஆம் நிறைவாண்டைக் கொண்டாடும் திட்டமாகவும் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள ஆண்டில் வெளியிடப்படும் திட்டமாகவும் இது திகழ்கிறது,” என்றார் முனைவர் முஸ்தஃபா இசுடின்.
நற்செய்தியாக அமைந்த வர்த்தக வருமான வரித் தள்ளுபடி
இந்நிலையில், 750 வெள்ளிக்கும் அதிகமான சம்பளத்தைப் பெறும் 55 முதல் 60 வயது வரையிலான ஊழியர்களுக்கான முதலாளிகளின் மத்திய சேமநிதிப் பங்களிப்பு 16 புள்ளிகளுக்கு அதிகரிக்கும் என்று வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
“முதலாளிகள் சார்பில் மூத்தோருக்கான மத்திய சேமநிதிப் பங்களிப்பு சற்று அதிகரித்தாலும், அதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. எங்கள் ஊழியரணியில் 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் 50 வயதைத் தாண்டியவர்கள். அவர்களின் அனுபவம் நமக்குத் தேவை. நெடுங்காலப் பராமரிப்புச் சேவைகளுக்காக அரசாங்கம் அறிவித்த சலுகைகள், நம் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று சிங்கப்பூர் ஆம்புலன்ஸ் சர்வீசஸ் அண்ட் டிரெய்னிங் நிறுவனத்தின் பொது மேலாளர் விக்னேஸ்வரன் பிள்ளை, 51, கூறினார்.
தனியார்க் கடன்பற்று வளர்ச்சி நிதியால் நன்மை
அதிவேக வளர்ச்சி உடைய நிறுவனங்களுக்குப் புதிதாக 1 பில்லியன் வெள்ளி தனியார்க் கடன்பற்று வளர்ச்சி நிதி அறிமுகம் செய்யப்படும் என்றும் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
இது குறித்த தம் கருத்துகளைத் தெரிவித்த கார்டினல் ஆலோசகர்கள் தலைமை நிர்வாகி குமரன் பரதன், “புதிய தனியார்க் கடன்பற்று வளர்ச்சி நிதி நல்ல முயற்சி. ஆனால், சிறு, நடுத்தர வர்த்தகங்கள் உண்மையில் பயன்பெறுமா என்பது அதன் செயல்பாட்டைப் பொறுத்தது. சிங்கப்பூர்ப் பங்குச்சந்தைக்கான சலுகைகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், உலகப் பொருளாதார நிலையைப் பொறுத்தும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வர்,” என்றார்.
பேருதவியாக உள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள்
“இல்லப் பராமரிப்பு மானிய அதிகரிப்பும் சிடிசி, எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளும் மற்ற சலுகைகளும் எனக்குப் பயன் தரும். என் மருத்துவப் பராமரிப்பு, வீட்டு வாடகை, தண்ணீர், மளிகைப் பொருள் செலவுகளுக்கு இவை உதவும்,” என்றார் இரு கால்களையும் இழந்த இதய நோயாளி வள்ளியம்மை சத்தியப்பன், 66.
அற அமைப்புகளுக்கு ஆதரவு
இதற்கிடையே, 250 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள புதிய ‘எஸ்ஜி கிவ்ஸ்’ வழங்கீட்டுத் திட்டத்தின்படி சமூக உண்டியல், அதிபர் சவால் உள்ளிட்ட திட்டங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வெள்ளிக்கு வெள்ளி நிகரான நன்கொடை வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஏழு முதியோர் இல்லங்களையும் மூன்று குழந்தைப் பராமரிப்பு நிலையங்களையும் நடத்தும் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஃபரீஹூல்லாஹ, 58, இந்த அறிவிப்பைத் தாம் வரவேற்பதாகக் கூறினார்.
“பேரளவில் நன்கொடையளிப்போருக்கு வெள்ளிக்கு $1.50 போன்று அறிமுகமாகும் இணை நிதிகள், எங்கள் ஏழு முதியோர் இல்லங்களுக்கும் உதவும். இதனால் சமூக சேவையும் பெருகும்,” என்று தெரிவித்தார்.
வர்த்தகங்கள் மகிழ்ச்சி
டிரைஸ்டார்ஸ் பொறியியல் சேவைகள் நிறுவனர் குமார் ராஜன், 51, வரவுசெலவுத் திட்டம் வர்த்தகங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறினார்.
“50 விழுக்காட்டு நிறுவன வருமான வரித் தள்ளுபடி நமக்கு நல்ல செய்தி. சாங்கி விமான நிலையக் குழுமத்துக்குக் கூடுதல் $5 பில்லியன் ஒதுக்கீடு நம்மைப் போன்ற கட்டுமான நிறுவனங்களுக்குப் பயனளிக்கும்,” என்றார் அவர்.
எதிர்பார்ப்புகள் இம்முறை ஈடேறவில்லை
இதற்கிடையே, சமூகப் பராமரிப்புத் துறையில் சம்பள உயர்வு இருக்கும் என்று தாம் எதிர்பார்த்ததாக அத்துறையில் பணியாற்றும் 28 வயது ஜெசிகா தெரிவித்தார்.
“தற்போது சமூகப் பராமரிப்புத் துறையில் வழங்கப்படும் சம்பளம், ஒரு குடும்பத்தை வழிநடத்தும் அளவுக்குப் போதுமானதல்ல,” என்றார் அவர்.
வேலைத் தேடலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஜோனோ ஷாருல், 57, வரவுசெலவுத் திட்டம் குறித்த தமது எதிர்பார்ப்பையும் முன்வைத்தார்.
“நான் பல ஆண்டுகளாக வேலைத் தேடிக்கொண்டிருக்கிறேன். முதியோருக்கு வேலை கிடைப்பது கடினம். இவ்வாண்டு தொடங்கிய ‘வேலைத் தேடுவோருக்கான ஆதரவுத் திட்டம்’ அண்மையில் வேலையிழந்தோருக்கே பயனுள்ளதாக இருக்கிறது. எங்களைப் போன்றோருக்கு வேலை தேடிக்கொள்ள உதவும் திட்டங்களை நான் எதிர்பார்த்திருந்தேன்,” என்றார் அவர்.