வரவுசெலவுத் திட்டம் 2026: சிங்கப்பூர் நிறுவனங்கள் கருத்து

வரவுசெலவுத் திட்டம் 2026: சிங்கப்பூர் நிறுவனங்கள் கருத்து

5 mins read
aa504413-8442-472c-aa34-541405c03927
இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தாக்கல் செய்யப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிறுவனங்கள் சந்தையில் தாக்குப்பிடிக்கவும் வளர்ச்சி காணவும் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறு பொருளியல் உத்திகள் இடம்பெற்றன. 

பல்வேறு புதுப்பிக்கப்பட்ட சலுகைகள், திட்டங்கள், உத்திகளாக வடிவம் பெற்றுள்ளன. 

இந்நிலையில், இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் குறித்து சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு நிறுவனங்களின் கருத்துகளைத் திரட்டியது தமிழ் முரசு. 

அவற்றில் ஒன்று, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை. 

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நீல் பரேக்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நீல் பரேக். - படம்: சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை

“சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மீள்திறனை வலுப்படுத்தும் வகையில், வரவுசெலவுத் திட்டம் ஒரு நிலையான நடைமுறை சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

“நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு மாற்றங்களையும் அதிகரிக்கும் வர்த்தகச் செலவுகளும் கருத்தில்கொள்ளப்படுகிறது,” என்றார் தொழிற்சபையின் தலைவர் நீல் பரேக்.

மேலும், “உலகளாவிய நிச்சயமற்றத்தன்மை நிலவும் சூழலில், மின்னிலக்க ஆற்றல், வெளிநாட்டுச் சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்ய வரவுசெலவுத் திட்டம் நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இணைநிதி வழிமுறைகள்மூலம் பேரளவில் செலவைக் குறைப்பதற்குப் பதிலாக, உத்திபூர்வ விரிவாக்கத்தை ஊக்குவிக்கின்றன,” என்றார் திரு நீல். 

விண்ணப்பச் செயல்முறைகளை எளிமைப்படுத்தி, தொடர்புடைய அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்களை பயன்படுத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று விளக்கினார்.

போட்டித்தன்மைமிக்க சவால்கள் நிறைந்த உலகளாவிய சூழலில் வரத்தகங்கள் நிலைத்திருக்க வரவுசெலவுத் திட்டம் போதுமான ஆதரவை வழங்குகிறதா என்பது குறித்து கருத்துரைத்த திரு நீல், “உற்பத்தித்திறன், புதுமை, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு போன்ற அடித்தளங்களை வலுப்படுத்துகிறது. எனினும், இந்த வாய்ப்புகளை நிறுவனங்கள் எந்த அளவிற்கு திறம்படச் செயல்படுத்துகின்றன என்பதன் பொருட்டு போட்டித்தன்மை அமைகிறது,” என்றார்.

அரசாங்கம் வழங்கும் ஆதரவு ஓடுபாதையை அமைத்துத் தருகிறது. அந்த வாய்ப்புகளை உயரத்திற்குக் கொண்டு செல்வது நிறுவனங்களின் பொறுப்பு,” என்றார் அவர்.

நவீன ஆபரணங்கள் விற்கும் ‘தேசி பை தேசி’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் சுப்பிரமணியன், வரவுசெலவுத் திட்டம் குறித்து தமது கருத்துகளை முன்வைத்தார். 

‘தேசி பை தேசி’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் சுப்பிரமணியன்.
‘தேசி பை தேசி’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் சுப்பிரமணியன். - படம்: ஆனந்த் சுப்பிரமணியன்

40 விழுக்காட்டுப் பெருநிறுவன வருமான வரித் தள்ளுபடி, வர்த்தக அனைத்துலகமயமாக்கத் திட்டங்களில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகவும் இதனால் ஆண்டிறுதியில் வரிவிதிப்புச் செலவுகள் குறையும் எனக் குறிப்பிட்ட திரு ஆனந்த், பெரும்பான்மை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பயன்பெறும் என்றார். 

‘சந்தைத் தயார்நிலை உதவி மானியம்’ நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்தார் திரு ஆனந்த். 

இவ்வாண்டு வலைத்தளத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், வெளிநாடுகளில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வேலைப் பயிற்சி ஊழியர்களைப் பணியமர்த்துவது உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதனால், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு எங்களால் சேவைகளை விரிவுபடுத்த முடியும்,” என்றார். 

ஆனால், சரியான தளங்கள் வாயிலாகச் சென்று அதை எப்படிச் செயல்படுத்தலாம் என்பதை நன்கு ஆராய வேண்டும் என்றார் அவர்.

இருந்தபோதும், நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் நிலையை உறுதிப்படுத்தாமல் வெளிநாடுகளில் தங்கள் சேவையை விரிவுபடுத்துவார்களா என்ற சந்தேகம் இன்னும் உள்ளது எனக் குறிப்பிட்டார் திரு ஆனந்த். 

சேலைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை விற்கும் யாஜ்னசேனி நிறுவனம்.
சேலைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை விற்கும் யாஜ்னசேனி நிறுவனம். - படம்: வித்தியா அகிலன்

“உற்பத்தித்திறன், அனைத்துலகமயமாதல், மின்னிலக்கமயமாதல் ஆகிய அம்சங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவது, நிச்சயமற்ற சூழலுக்கிடையே சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து மீள்திறனுடனும் போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதன் அதன் கடப்பாட்டை வெளிப்படுத்துகிறது,” என்றார் யாஜ்னசேனி நிறுவனத்தின் நிறுவனர் வித்தியா அகிலன். 

வருமான வரித் தள்ளுபடி குறித்துப் பேசிய அவர், தம்மைப் போன்ற தனிநபர்களுக்கு இது பொருந்துமா எனத் தெரியவில்லை என்றும் சிறிய நிறுவனங்களுக்குத் தெளிவான விளக்கமோ பரிசீலனையோ செய்யலாம் என்றும் கூறினார். 

தமது வரத்தகக் குழுவை விரிவுபடுத்த எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறிய திருமதி வித்தியா, குத்தகைக் காலம் குறித்த நிச்சயமற்றத்தன்மை, உயர்ந்துவரும் வாடகைக் கட்டணம், வெளிநாட்டு வர்த்தகங்களிடமிருந்து நேரடியாக வாங்கும் போக்கு போன்ற சவால்களைச் சுட்டி, வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். 

தற்போது வர்த்தகச் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல், நிலையான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

‘ராயல் கிங்ஸ்’ ஆலோசனை குழுமத்தின் (Royal Kings Consultancy Group) மூத்த வணிக விரிவாக்க மேலாளர் முகம்மது ஹரிஸ்.
‘ராயல் கிங்ஸ்’ ஆலோசனை குழுமத்தின் (Royal Kings Consultancy Group) மூத்த வணிக விரிவாக்க மேலாளர் முகம்மது ஹரிஸ். - படம்: முகம்மது ஹரிஸ்

எம்ப்ளாய்மென்ட் பாஸ், எஸ் பாஸ் வேலை அனுமதி அட்டைகளுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. 

இதனால் வர்த்தகங்களுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்று கருத்துரைத்தார் ‘ராயல் கிங்ஸ் கன்சல்டன்சி’யின் மூத்த வணிக விரிவாக்க மேலாளர் முகம்மது ஹரிஸ்.

“திறமைமிக்க வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்ட வர்த்தகங்களின் செலவுகள் அதிகரிக்கும். இதனால் அவர்கள் குறைவான திறன்களைக் கொண்ட உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்தவும், திறன் இடைவெளியை நிரப்ப அவர்களைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்குக் அனுப்பவும் வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் புதிய வேளாண் விளைபொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் சூப்பர்ஸ்டார் டிரேடர்ஸ் நிறுவனம், அண்மையில் உணவுத் தயாரிப்புத் துறையில் கால்பதித்துள்ளது. 

“உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியம், தொழில்நிறுவனப் புத்தாக்கத் திட்டம் ஆகியவை விரிவடைவது எங்களைப் போன்ற சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் அமைந்த தீர்வுகளை ஏற்க ஊக்குவிக்கும்,” என்றார் நிறுவன இயக்குநர் கார்த்திகேயன் முத்துபாண்டியன்.

ஏற்கெனவே, விற்பனைப் பகுப்பாய்வு, தேவை முன்னுரைப்பு ஆகியவற்றுக்குச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், “இத்திட்டம் செயல்முறைகளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த சேவையை வழங்க உதவுகிறது,” என்றார்.

வரும் ஆண்டுகளில் வரவுசெலவுத் திட்டத்திற்கான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள்

“சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தலைமைத்துவத் திறன், தலைமைத்துவப் புதுப்பிப்புக்குத் திட்டமிடுதல் ஆகியவற்றுக்கு வலுவான ஆதரவை. அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் முதலீடு செய்வது, அவற்றின் வட்டார அளவிலான வளர்ச்சியை நிர்ணயிக்கும்,” எனத் தெரிவித்தார் திரு நீல் பரேக்.

மேலும், பிளவுபட்ட உலகச் சூழலில் நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் திகழ எல்லை கடந்த சந்தை அணுகுதல், மின்னிலக்கக் கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவது முக்கியம் என்றார் அவர். 

வணிக இட வாடகை சட்டத்திற்கான ஒரு கட்டமைப்பு நிச்சயம் தேவை. வரும் ஆண்டுகளின் வரவுசெலவுத் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தலாம் என்றார் திரு ஆனந்த். 

30 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்ட, தகுதியுள்ள சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோர், தங்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) தொகையைப் பயன்படுத்தியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
30 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்ட, தகுதியுள்ள சிங்கப்பூரர்களில் பாதிக்கும் அதிகமானோர், தங்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) தொகையைப் பயன்படுத்தியுள்ளதாகப் பதிவாகியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இன்னும் கூடுதலான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகையையும் அது காலாவதியாகும் தேதி அகற்றப்படும் என எதிர்பார்த்ததாகவும் திரு ஹரிஸ் தெரிவித்தார். 

லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளில் சில்லறை வர்த்தகங்களுக்குள்ள சவாலைச் சுட்டிய திருமதி வித்தியா அகிலன், அதற்கான கூடுதல் ஆதரவை எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டார். 

மேலும், சிறிய வர்த்தகங்களுக்கும் தனிநபர்கர்களுக்கும் வரும் ஆண்டுகளின் வரவுசெலவுத் திட்டங்களில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், வாடகைச் செலவு போன்ற நிலையான செலவுகளைச் சமாளிக்க உதவுவதில் அதிகக் கவனம் செலுத்தலாம் என்றார். 

கடந்த சில வரவுசெலவுத் திட்டங்களைப்போல, படிப்படியாக உயரும் சம்பள உதவித்தொகைத் திட்டம் அதிக அளவில் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறிய அவர், உள்ளூர் நிறுவனங்கள் தொடர்ந்து உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்த ஊக்குவிக்கும் இன்னும் பல திட்டங்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

விரைவான ஒப்புதல்களும் நிதி வழங்குதல்களும் கொண்ட எளிமையான, விரைவான மானிய செயல்முறை தேவைப்படுகிறது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் வேகமாகச் செயல்படுகின்றன. எனவே, காலத்திற்கேற்ற ஆதரவு வழங்கப்படுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றார் திரு கார்த்திகேயன். 

குறிப்புச் சொற்கள்