இலவச மருத்துவப் பரிசோதனை, நாற்காலியில் யோகா, பாலிவுட் ஸும்பா, கலாசார ஆடல் பாடல் அங்கங்கள் என பல்வேறு அங்கங்கள் நிறைந்த குடிபெயர்ந்த இந்திய இல்லப் பணிப்பெண்கள் விழா (Indian Migrant Domestic Workers Fiesta) சிங்கப்பூர்வாழ் இந்திய பணிப்பெண்களை மகிழ்வித்தது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 100க்கும் மேற்பட்ட பணிப்பெண்கள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் அனைத்து இந்தியப் பெண்களுக்கும் நேரத்துடன் முறையான உதவி கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்குடன் தோற்றுவிக்கப்பட்ட தூதரகத்தின் ஒன் ஸ்டாப் நிலையம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
நிதிச் சுதந்திரம், ஆதரவு, அடைக்கல சேவைகளைக் குறித்த விழிப்புணர்வு, உடல்நலம், மனநலம், தனிப்பட்ட வளர்ச்சி ஆகிய அம்சங்களில் பணிப்பெண்களுக்கு உதவும் நோக்குடன் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டதென அவ்வமைப்பு குறிப்பிட்டது.
பிஓஎஸ்பி வங்கி, பணிப்பெண்களுக்கான மையம் (The Centre for Domestic Employees), சிங்டெல், குடியேற்றப் பொருளியலுக்கான மனிதநேய அமைப்பு (Humanitarian Organization for Migration Economics -HOME), ட்ருகேர் மருந்தகம், சஹஜா யோகா உள்ளிட்ட பல்வேறு சமூகப் பங்குதாரர்கள் பங்கேற்பாளர்களுக்காக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
மகாராஷ்டிரா மண்டல் சிங்கப்பூர், சிங்கப்பூர் சிந்தி சங்கம், நுபுரா நடனக் கல்வி நிலையம் ஆகிய அமைப்புகள் சுவாரசியமான கலைப் படைப்புகளுடன் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தின.
“இந்த விழா நம் சமூகத்தை ஒன்றிணைப்பதைவிட பணிப்பெண்கள் சொந்தக் காலில் நிற்கத் தேவைப்படும் திறன்களைக் கற்பிப்பதை மையமாகக் கொண்டுள்ளது,” என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே விழாவில் கூறினார்.
“வங்கிக் கணக்கு தொடங்குவது, உடல்நலம், அடைக்கலம், சட்டம், மனநலம் என அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்கான உதவித்தளங்கள் இருப்பதை உணர்த்துவதே விழாவின் முக்கிய நோக்கம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் கடந்த ஆறு ஆண்டுகளாக இல்லப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துவரும் திருவாட்டி பாண்டி வள்ளிக்கண்ணுக்கு நிகழ்ச்சியில் பங்கெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
“முதன்முறையாக இத்தகைய நிகழ்ச்சியில் என் நண்பர்களுடன் கலந்துகொள்கிறேன். என் முதலாளிதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஊக்குவித்தார். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து அங்கங்களும் மனத்திற்கு நிறைவளித்தன,” என்றார் அவர்.
தமது விடுமுறை நாளைப் பொதுவாக ஆலயத்திலும் உறவினரின் இல்லத்திலும் கழிக்கும் திருவாட்டி முத்தையா அரியநாயகி, இந்நிகழ்ச்சி புத்துணர்ச்சி அளித்ததாக உணர்கிறார்.
“13 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில்லை. இந்தியாவில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டாது. ஆனால், இங்கு எங்களுக்கென சிறப்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நெகிழ்ச்சியளிக்கிறது,” என்று அவர் கூறினார்.


