சமூகச் சேவைத் துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தவும் அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடும் 48 வயதுடைய சங்கீதா இன்று தலைமைத்துவப் பொறுப்புக்கு முன்னேறியுள்ளார்.
தமது பயணத்தை 18 ஆண்டுகளுக்கு முன் ஓர் உடல் இயக்க சிகிச்சையாளராகத் தொடங்கிய மணிகண்டன் சங்கீதா, படுத்த படுக்கையாக இருந்த ஒரு சிறுமி 18 வயதை அடையும்வரை சிகிச்சை அளிக்க நேரிட்டது.
அச்சிறுமிக்கு உடற்குறை இருந்ததுடன் சரியாக நடக்க முடியாது. இதயக் கோளாறு காரணமாக ‘பேஸ்மேக்கர்’ எனப்படும் இதயமுடுக்கியை அவர் நம்பியிருந்தார்.
சிறுமியின் வாழ்க்கையில் தம்மால் இயன்ற மாற்றங்களைச் செய்ய முனைந்தார். இன்று அச்சிறுமி உயிருடன் இல்லை என்றாலும் ஊக்கத்தைக் கைவிடாது அறிவுசார் குறைபாடுகள் உள்ள பலரது வாழ்க்கையில் ஒளியேற்ற முயன்று வருகிறார்.
‘மைண்ட்ஸ்’ சமூகநல அமைப்பின் கிழக்குக் குழுமத் துணை இயக்குநராகச் செயலாற்றி வரும் சங்கீதா, உடல் இயக்க சிகிச்சைக்கான பட்டப்படிப்பை இந்தியாவில் மேற்கொண்டு திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் வந்து இன்று எட்டு சேவைகளுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அறிவுசார் குறைபாடுகள் உள்ளோரை உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் சங்கீதா ஈடுபடுவதுடன் புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்குக் குழுமத்தில் ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
உத்திபூர்வ திட்டமிடுதல், செயல்பாடுகளைக் கவனித்தல் ஆகியவையும் அவரது பொறுப்புகளில் அடங்கும்.
இன்றைய பெண்கள் குடும்பத்தையும் வேலையையும் சமநிலையில் வைத்து முன்னேறுவதற்கு முன்னுதாரணமாக சங்கீதா இருக்க விரும்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருக்கும் அவர், இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான பிறகும் விடுப்பு எடுக்காமல் வேலையில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.
சங்கீதாவின் இரு பிள்ளைகளும் மேற்கல்வி பயில்கின்றனர். கணவரும் உடல் இயக்க சிகிச்சையாளர் என்ற நிலையில், நேரத்தை நன்கு நிர்வகித்துத் தமது பொறுப்பைக் கையாள்கிறார் சங்கீதா.
மைண்ட்ஸ் அமைப்பில் புதிய சேவைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வரும் சங்கீதா, 18 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சேவைகளை ஒருங்கிணைந்த விதமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சியுடன் முழுச் சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அவர், புதிய சேவைகள், சமூக ஒருங்கிணைப்பு, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் புதிய வழிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூகச் சேவையில் பெண்கள் தங்கள் முயற்சியால் மாற்றங்கள் ஏற்படுத்தலாம் என்பதை சங்கீதா அதீதமாக நம்புபவர்.
“பெண்கள் சாதாரண நிலையிலிருந்து பதவி உயர்வு பெறும்போது அவர்கள் முதலில் தங்களின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். முடியும் என்று நினைத்தால்தான் அவர்களால் பணியில் முன்னேற முடியும்,” என்று சங்கீதா சொன்னார்.
பதவி உயர்வுக்குப் பிறகு முதல் ஆறு மாதங்கள் சவால்மிக்கதாக இருந்ததாகக் கூறிய சங்கீதா நன்கு திட்டமிட்டு, பொறுமை காத்து, ஆழ்ந்த சிந்தனையுடன் கையாண்டால் எந்த ஒரு சிக்கலையும் சமாளிக்கலாம் என்றார்.
மறுவாழ்வு அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ள சங்கீதா அதைத் திறன் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தி வருகிறார்.