கல்வியில் சிறப்புற்று விளங்கும் மாணவர்களின் கல்விப் பயணத்தை மேலும் வளமாக்க செட்டியார்கள் கோயில் குழுமம் 14வது ஆண்டாக நிதியுதவிகளை வழங்கியுள்ளது.
இனம், மொழி, சமயம் ஆகியவற்றைக் கடந்து, இந்த ஆண்டும் 275 மாணவர்களுக்கு ஏறத்தாழ $100,000 மதிப்பிலான உபகாரச் சம்பளம், கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வளாக மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தேசிய தினப் பேரணி உரையை நினைவுகூர்ந்து, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையும் மக்களின் ஒற்றுமையுமே நாட்டின் ஆகப்பெரிய பலம் என்ற திரு ஓங், சிறிய சமூகமான செட்டியார்கள் கோயில் குழுமம், அனைத்து இன மாணவர்களுக்கும் கல்வி விருதுகள் வழங்குவது பாராட்டுக்குரியது என்று கூறினார்.
மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஓங், திறந்தநிலைப் பொருளியலில் குடும்பச் சூழல்கள் மாறுபடலாம் என்றாலும், எளியோருக்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்; கல்வி, புத்தாக்கம், சுகாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதிசெய்யப்படும் என்றார்.
மேலும், கல்வியில் சிறந்து விளங்குவதோடு பெற்றோரை மதித்து நடப்பதும் அவசியம் என மாணவர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
கல்வி நிதியுதவியைப் பெற்ற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கணக்கியல், தரவு அறிவியல் - செயற்கை நுண்ணறிவு இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர் மணிகண்டன் பிரவீன், 23, இந்த உதவித்தொகை தமது படிப்பு சார்ந்த கூடுதல் கல்வி மேம்பாட்டுச் செலவுகளுக்குப் பெரிதும் கைகொடுக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவரது தாயார் திருமதி சிந்தாமணி மணிகண்டன் கூறுகையில், “என் மகன் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியில் மேலும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள இணையவழிச் சான்றிதழ் படிப்புகளை மேற்கொண்டு வருகிறான். அதற்கான கட்டணத்தைச் செலுத்த இந்த உதவித்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.
அதேபோல், திருவாட்டி தனபாக்கியத்தின் மகன்களான தொடக்கப்பள்ளி மாணவர் சூரியபிரதாபன், உயர்நிலைப்பள்ளி மாணவர் சிவசூரியன் இருவரும் இந்த நிதி உதவியைப் பெற்றனர்.
இது குறித்துப் பேசிய திருவாட்டி தனபாக்கியம், “ஒற்றைப் பெற்றோராகப் பிள்ளைகள் அடையும் இந்தச் சாதனை பெருமையளிக்கிறது. இத்தகைய நிதி உதவி குடும்பத்தின் கல்விச் செலவுச் சுமையைக் குறைப்பதுடன் தேர்வுக் காலத்தில் அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி வளங்களைப் பெறவும் துணைபுரியும். சமூக அளவில் கிடைக்கும் இந்த அங்கீகாரம் பிள்ளைகள் கல்வியில் இன்னும் சிறப்பாக விளங்க ஊக்குவிக்கும்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி குறித்துக் குறிப்பிட்ட செட்டியார்கள் கோயில் குழுமத்தின் தலைவர் மாணிக்கம் நாச்சியப்பன், “சமய நிறுவனமாக இருந்தாலும், சமூகத்திற்கான எங்கள் பொறுப்பு சொந்தச் சமூகத்தையும் தாண்டியது. பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், சிங்கப்பூரைப் பிணைக்கும் உறவுகளை வலுப்படுத்துவதில் எங்கள் பங்களிப்பைச் செய்கிறோம்,” என்றார்.


