சீனப் புத்தாண்டு: மூதாட்டியின் முகமலர்ச்சியில் மனநிறைவு காணும் நல்லுள்ளங்கள்

சீனப் புத்தாண்டு: மூதாட்டியின் முகமலர்ச்சியில் மனநிறைவு காணும் நல்லுள்ளங்கள்

2 mins read
9406674e-35bd-4073-b123-265cc246e24e
தாதியர் ஜெ.அர்ச்சனா (வலக்கோடி) உள்ளிட்ட சன்லவ் இல்லப் பணியாளர்களுடனும் மகனுடனும் சீனப் புத்தாண்டை 87 வயது சுங் வாய் ஃபாங் புன்னகையுடன் வரவேற்றார். - படம்: செய்யது இப்ராகிம்
Google News Preferred Icon

இளம் வயதில் தாதியராக இருந்த திருவாட்டி சுங் வாய் ஃபாங், பின்னர் தம் கணவர் ஓட்டிய பள்ளிப் பேருந்தில் உதவியாளராகவும் பணியாற்றினார்.

87 வயதை எட்டியுள்ள அவரால் இப்போது எளிதாக நடமாட முடிவதில்லை. 60 வயது மதிக்கத்தக்க அவரின் ஒரே மகன் மட்டுமே அவரைப் பராமரித்து வருகிறார். அவருக்குத் துணையாக, சன்லவ் இல்லத்தைச் சேர்ந்த தாதியர், திருவாட்டி சுங்கின் வீட்டுக்குச் சென்று அவரைப் பராமரிக்கின்றனர்.

காலாங் வட்டாரத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அவரது இறுதிக்காலம், இப்போது எளிமையில் கழிகிறது.

சன்லவ் இல்லத் தாதியரான ஜே அர்ச்சனா (இடது), கடந்த ஐந்து மாதங்களாக வாரத்திற்கு இருமுறை திருவாட்டி சுங்கைக் காணச் செல்கிறார்.
சன்லவ் இல்லத் தாதியரான ஜே அர்ச்சனா (இடது), கடந்த ஐந்து மாதங்களாக வாரத்திற்கு இருமுறை திருவாட்டி சுங்கைக் காணச் செல்கிறார். - படம்: செய்யது இப்ராகிம்

இருந்தபோதும் அவர் முற்றிலும் மறக்கப்படவில்லை. சீனப் புத்தாண்டின் முதல் நாளில், ‘சன்லவ்’ இல்லத்தினர் திருவாட்டி சுங் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடினர்.

சீனப் பண்பாட்டில் செல்வத்துக்கான கடவுளாகக் கருதப்படும் ‘சாய் ஷென்’போல சன்லவ் பணியாளர் ஒருவர் வேடமணிந்து வர, தாதியர் திருவாட்டி சுங்கிடம் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களைத் திருவாட்டி சுங்கின் வீட்டாருக்கு வழங்கிய பின்னர், அவர்கள் ‘லோ ஹெய்’ உணவைத் தட்டில் ஒன்றாகச் சேர்த்துக் கிளறி கொண்டாடினர். மங்கள வாழ்த்துகளை முழங்கியவாறு அனைவரும் அதனை உண்டு மகிழ்ந்தனர்.

சன்லவ் இல்லப் பணியாளர்களுடனும் மகளுடனும் சீனப் புத்தாண்டை 87 வயது சுங் வாய் ஃபாங் புன்னகையுடன் வரவேற்றார்.
சன்லவ் இல்லப் பணியாளர்களுடனும் மகளுடனும் சீனப் புத்தாண்டை 87 வயது சுங் வாய் ஃபாங் புன்னகையுடன் வரவேற்றார். - படம்: செய்யது இப்ராகிம்

2002ல் தொடங்கப்பட்ட சன்லவ் இல்லப் பராமரிப்புச் சேவைகள், வீட்டில் முடங்கியுள்ள வயதானோர்க்கு மருத்துவ, தாதிமைப் பராமரிப்பை வழங்கி வருகிறது.

அந்தச் சேவைத்திட்டத்தின்கீழ் திருவாட்டி சுங்கைக் கடந்த ஐந்து மாதங்களாகப் பராமரித்து வரும் தாதியரில் ஒருவரான ஜெ.அர்ச்சனா, 27, தாம் அங்குச் செல்லும்போதெல்லாம் திருவாட்டி சுங் தம்மை அன்புடன் வரவேற்பதாகக் கூறினார்.

“அவர் நலமாக இருப்பதைக் காணும்போது என் உள்ளம் நிறைவடைகிறது. அவருடன் நான் முதன்முறையாகச் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று அர்ச்சனா கூறினார்.

இளம் வயதில் சுங் வாய் ஃபாங் தாதியராகப் பணியாற்றினார்.
இளம் வயதில் சுங் வாய் ஃபாங் தாதியராகப் பணியாற்றினார். - படம்: கி.ஜனார்த்தனன்

எல்லாரையும் தமது வீட்டில் காண்பது மகிழ்ச்சியளிப்பதாக திருவாட்டி சுங் கூறினார்.

தாயாருக்கு இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு மகன் காங் ஹோ கீட் அகமகிழ்கிறார். சீனாவைச் சேர்ந்த தம் மனைவி, நோய்வாய்ப்பட்ட அவரின் தாயாரைச் சொந்த நாட்டில் பராமரித்துக்கொண்டிருப்பதால் தாங்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகத் திரு காங் குறிப்பிட்டார்.

“என் தாயார், மாணவர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் பள்ளிப் பேருந்தில் பத்திரமாக அழைத்துச் சென்றதுடன் நில்லாமல், அவர்கள்மீது தனி அக்கறை கொண்டிருந்தார்.

“அவர்களில் யாரேனும் தவறான வழியில் சென்றாலும் ஒரு தாயாரைப்போல அக்கறை கொள்வார். அவர்மீது இப்போது பிறர் அன்பு காட்டுவது மகிழ்ச்சி தருகிறது,” என்றார் திரு காங்.

குறிப்புச் சொற்கள்