நம்பிக்கையின் நல்வார்த்தையை விதைத்த கிறிஸ்துமஸ் விழா

2 mins read
2681d159-d527-46eb-855a-16bf52811005
நம்பிக்கையின் இசைகீதங்கள் தொனிக்கத் தொடங்கின ‘இயேசு ஜீவிக்கிறார்’ திருச்சபையின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள். - படம்:ஜோயல் ஜெரேமியா
multi-img1 of 2
‘இயேசு ஜீவிக்கிறார்’ திருச்சபையின் தலைமைப் போதகர் ஜோனத்தான் சுப்பையா.
‘இயேசு ஜீவிக்கிறார்’ திருச்சபையின் தலைமைப் போதகர் ஜோனத்தான் சுப்பையா. - படம்:ஜோயல் ஜெரேமியா

இன்னும் சில தினங்களில் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட உலகம் ஆயத்தமாகிவரும் வேளையில், நம்பிக்கையின் இசைகீதங்கள் தொனிக்கத் தொடங்கின ‘இயேசு ஜீவிக்கிறார்’ திருச்சபையின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்.

வண்ண ஒளிவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், பரிசுப்பொருள்கள் ஆலயத்தில் அணிவகுத்திட, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) காலை சிறப்பு கிறிஸ்துமஸ் ஆராதனையுடன் தொடங்கியது இந்த விழாக்காலம்.

ஆலயப் பாடகர் குழுவின் கிறிஸ்துமஸ் கீதங்களுடன் உற்சாகமாகத் தொடங்கிய இந்தச் சிறப்பு ஆராதனையின் நோக்கம், கிறிஸ்தவம் என்பது சமயம் அல்ல, அன்பை பறைசாற்றும் நல்லுறவு என்பதை அனைவருக்கும் எடுத்துரைப்பதே என்றார் தலைமைப் போதகர் ஜோனத்தான் சுப்பையா, 51.

‘‘இறைவன் என்றாலே அன்பு. இயேசு பிறப்பை நினைவுகூரும் இக்காலத்தில், அவர் மனிதர்களைத் தேடிவந்து கொடுத்துச் சென்ற நேசம், ஆறுதல், சமாதானத்தின் பிரதிநிதிகளாக ஒவ்வொருவரும் திகழ வேண்டும் என்பதுதான் இவ்விழாக்காலத்தின் உன்னத நோக்கம்

“கனிவுமிக்க சமூகத்தை நிலைக்கச் செய்ய, நம்மால் இயன்றவரை நற்செயல்களை பிறருக்குப் பரிசளிப்பதே மெய்யான கிறிஸ்துமஸ்,” என்றார் அவர்.

கிறிஸ்துமஸ் விழா சிறப்பு ஆராதனையில் பங்கேற்ற குடும்பங்களுக்கு ஒரு கிலோ ஆட்டிறைச்சி கொண்ட அன்பளிப்புப் பை வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் திருச்சபையினருக்கு ஒவ்வொரு மாதமும் தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை மாதந்தோறும் வழங்கவுள்ளதாகக் கூறிய தலைமைப் போதகர், இதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.

“பண்டிகைக் காலம் மட்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்றில்லை. தரப்படும் பொருளைக் காட்டிலும், சக மனிதர்களை திருச்சபையாக ஆசிர்வதிக்க வேண்டும் என்பதே இதன் இலக்கு. இதன்மூலம் எவர்க்கும் நம்பிக்கையை அளிக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்துமஸ் என்பது சமயத்தைத் தாண்டிய சகோதரத்துவத்தைப் போதிக்கும் நன்னாள் என்று குறிப்பிட்ட துணைப் போதகர் அலெக்ஸ் ராஜன், 60, “பிளவுபட்ட உலகில் நம்பிக்கை, உவகை, கருணை எஞ்சியுள்ளது என்பதன் நினைவூட்டல் இந்தக் கொண்டாட்டங்கள்,” என்று தெரிவித்தார்.

குறும்படம், கிறிஸ்துமஸ் கீதங்கள், சிறாரும் பதின்ம வயதினரும் படைத்த பாடல் நிகழ்ச்சியுடன் நடந்தேறிய இவ்விழாவில் திருச்சபையினர், பிற சமயத்தைச் சேர்ந்த நண்பர்கள் என ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இத்தகைய நிகழ்ச்சிகள், தாமும் இதுபோன்று பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது என்றார் திருச்சபை உறுப்பினரான திருவாட்டி கிளாரா பொன்னி, 65. 

“இன்றைக்கு எங்களுக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியைக்கூட தனித்து உண்ணுவதைக் காட்டிலும், தேவையில் உள்ளோருடன் பகிர்ந்து அனைவரும் ஒரே குடும்பமாகக் கொண்டாடுவதே சிறப்பு,” என்று கருதுவதாகச் சொன்னார் அவர்.

இவ்விழா ஒற்றுமையையும் கனிவையும் வலியுறுத்துவதாக திருமதி மனோன்மணி குமார், 52, கூறினார்.

“கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது பரிசுப் பொருள்கள்தான். அவ்வகையில் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறும் இந்த கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் சிறப்பாகத் தொடங்கியது மனநிறைவு தருகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்